பதிவு செய்த நாள்

02 மார் 2018
14:12

ஸ்பிரிங்டேல் நகரில் பிறந்த ரேச்சல் லூயி கர்ஸான், ஒரு பரந்த பண்ணையில் வளர்ந்தார். அங்கே இயற்கையைப் பற்றியும் விலங்குகளைப் பற்றியும் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. சின்ன வயதில் கதைகள் படிப்பதிலும் எழுதுவதிலும் ரேச்சலுக்கு விருப்பம் அதிகம் இருந்தது. ரேச்சலுக்குப் பதினோரு வயதாகும்போதே, அவர் எழுதிய ஒரு புத்தகம் வெலியானது. ரேச்சல் மிகவும் விரும்பி எழுதிய விஷயங்களில் ஒன்று கடல்.

பென்சில்வேனியாவில் இருக்கும் பெண்கள் கல்லூரியில் சேர்ந்தார் ரேச்சல். உயிரியலை விருப்பப் பாடமாக எடுத்துக்கொண்டார். பிற்பாடு, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் விலங்கியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

பட்டப் படிப்பு முடிந்ததும், கொஞ்ச காலம் ஆசிரியையாக வேலை பார்த்தார். பிறகு அமெரிக்க மீன் மற்றும் வன உயிரிச் சேவையில் இணைந்தார். அந்த வேலையின் ஒரு பகுதியாக, நீர்வாழ் உயிரினங்களைப் பற்றிய தகவல்களை ரேடியோவுக்காகத் தொடர்ந்து எழுதிவந்தார். பிறகு, முழுநேர உயிரியலாளர் ஆகிவிட்டார். அதைத் தொடர்ந்து மீன் மற்றும் வன உயிரிச் சேவைத் துறையின் பிரசுரங்களுக்குத் தலைமை ஆசியர் ஆனார். இதைத் தவிர பல பத்திரிகைகளுக்கு கடலைப் பற்றிய ஏராளமான கட்டுரைகளை எழுதிவந்தார்.

அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து ‘Under the sea wind' என்ற தலைப்பில் புத்தகமாகக் கொண்டுவந்தார். ரேச்சல் அடுத்து எழுதிய ‘The sea around Us' என்னும் புத்தகம், அவருக்குப் பெரிய புகழைத் தேடிக் கொடுத்தது. மிக அதிகம் விற்பனை ஆகும் புத்தகமாக நியூயார்க் டைம்ஸ் இதழின் பட்டியலில் சுமார் இரண்டாண்டுகள் வரை முதலிடத்தில் இருந்தது. இந்தப் புத்தகம் பெற்ற பெரும் வெற்றியைத் தொடர்ந்து, தான் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை ராஜினாமா செய்தார். முழுநேரமாக எழுத ஆரம்பித்தார்.

இரண்டாம் உலகப் போரின்போது, அரசாங்கம், செயற்கைப் பூச்சிக்கொல்லிகளைத் தயாரித்தது. இந்த ரசாயனப் பூச்சிக்கொல்லிகள், பயிருக்குச் சேதம் விளைவிக்கும் பூச்சிகளையும், களைகளையும், சிற்றுயிர்களையும் கொல்லப் பயன்படுத்தப்பட்டது. போருக்குப் பிறகு பூச்சிக்கொல்லி மருந்துகலை விவசாயிகள் பயன்படுத்தத் தொடங்கினர். இதில் முக்கியமான பூச்சிக்கொல்லிக்கு DDT என்று பெயர். இதை பெரும் அளவில் தெளிப்பதால் சுற்றுச்சூழலும் மனிதர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்று ரேச்சல் கவலையடைந்தார். பூச்சிக்கொல்லிகளின் தன்மை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார். இவை பெருத்த ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்பதை உணர்ந்தார். தன் முடிவுகளைப் புத்தகமாக எழுதத் தொடங்கினார்.

தொடர்ந்து நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சியும் எழுத்துமாகக் கழிந்தது. விளைவாகப் பூச்சிக் கொல்லிக்கு எதிரான புத்தகம் முழுமை அடைந்தது. நூலுக்கு, ‘சைலண்ட் ஸ்பிரிங்’ என்று தலைப்பு வைத்தார். ‘மெளன வசந்தம்’ என்று பொருள். பூச்சிக்கொல்லிகளால் பறவைகள் இறந்துபோகின்றன. பறவைகளின் பாடல் இல்லாமல் வந்த காலமே மெளனமாகிவிட்டது’ என்று அதற்கு உள்ளர்த்தம். இந்தப் புத்தகம் 1962ம் ஆண்டு வெளியாயிற்று. வெளிவந்த சூட்டோடு விற்பனையில் சக்கைப்போடு போட்டது. சாதாரண மனிதர்களுக்கும் சுற்றுச்சூழல் பிரச்னை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இன்று இயற்கை உரம், ஆர்கானிக் உணவுப் பழக்கம் என்றெல்லாம் பரவலாகப் பேசப்படுகிறது. அதற்கு வாசல் திறந்துவிட்டது ரேச்சலின் இந்தப் புத்தகம். இதை எழுதும்போதே ரேச்சல் தன்னைத் தாக்கிய புற்றுநோயோடு போராடிக்கொண்டுதான் இருந்தார். நான்கு ஆண்டுகள் போராட்டத்தின் முடிவில் அந்த நோய்க்குப் பலியானார்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)