பதிவு செய்த நாள்

02 மார் 2018
17:30
காலச்சுவடு மார்ச் - 2018  இதழ்

நிக்கனோர் பார்ரா கவிதைகள் 

தமிழில்: சுகுமாரன்

1973

அற்புதம்
இப்போது 

மீட்பர்களிடமிருந்து நம்மை மீட்பது யார்?

இளம் கவிஞர்களுக்கு 

நீங்கள் விரும்புவதுபோல எழுதுங்கள்
எந்தமுறை உங்களுக்குப் பிடிக்குமோ அந்தமுறையில்

ஒற்றை வழிதான் சரி என்று
நம்பிக்கொண்டிருப்பதற்கிடையில்
பாலத்துக்குக் கீழே குருதிப் பெருவெள்ளம் புரண்டோடி ஆயிற்று.

கவிதையில் எல்லாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது

சந்தேகமில்லை, ஒரு நிபந்தனையும் இருக்கிறது
வெற்றுத் தாளில் நீங்கள் முன்னேற வேண்டும்.

நான் சொன்ன எல்லாவற்றையும் திரும்பப் பெறுகிறேன் 

நான் விடைபெறும் முன்பு
கடைசி விருப்பத்தைச் சொல்லவேண்டியிருக்கிறது.
பெருந்தன்மையுள்ள வாசகரே,
இந்தப் புத்தகத்தை எரித்து விடுங்கள்.

நான் சொல்ல விரும்பியது இதுவல்ல 
உதிரத்தால் எழுதியதுதான்,  எனினும்
நான் சொல்ல விரும்பியது இதுவல்ல.

என்னுடையதை விடத் துயரார்ந்ததாக
வேறு எவருடையதும் இராது
நான் சொந்த நிழலால் தோற்கடிக்கப்பட்டவன்
என் சொற்களே என்னைப் பழிதீர்த்துக் கொண்டன.

மன்னியுங்கள் வாசகரே, அருமை வாசகரே,
இதமான தழுவலுடன் உங்களிடமிருந்து விடைபெற முடியவில்லை
வலிந்த சோகப் புன்னகையுடன் உங்களைப் பிரிகிறேன்

இவையெல்லாமாகவே
நான் இருக்கலாம்.

நான் சொன்ன எல்லாவற்றையும் திரும்பப் பெறுகிறேன்.
உலகிலிருக்கும் பெரும் கசப்புடன்
நான் சொன்ன எல்லாவற்றையும் திரும்பப் பெறுகிறேன்.

ஒரு மனிதன் 

ஒரு மனிதனின் தாய் மிகவும் நோயுற்றிருக்கிறாள்
அவன் மருத்துவரைத் தேடிப் போகிறான்
அவன் அழுது கொண்டிருக்கிறான்
தெருவில் அவன் மனைவி இன்னொருவனுடன் செல்வதைப் பார்க்கிறான்
அவர்கள் கைகோர்த்திருக்கிறார்கள்
மரத்துக்கு மரம் மறைந்திருந்து
அவர்களைச் சில அடிகள் பின் தொடர்கிறான் 

அவன் அழுது கொண்டிருக்கிறான்
இப்போது அவன் இளம்பருவ நண்பனைச் சந்திக்கிறான்
நாம் ஒருவருக்கொருவர் பார்த்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன?
அவர்கள் ஒரு மதுச் சாலைக்குப் போகிறார்கள்
அவர்கள் பேசுகிறார்கள் சிரிக்கிறார்கள்
அவன் ஒன்றுக்கிருப்பதற்காக முற்றத்துக்கு இறங்குகிறான்
அவன் ஓர் இளம் பெண்ணைப் பார்க்கிறான்
அது இரவு
அவள் பாத்திரம் துலக்கிக்கொண்டிருக்கிறாள்
அவன் அவளை இடுப்போடு சேர்த்து அணைக்கிறான்
அவர்கள் சுழல் நடனமாடுகிறார்கள்
அவர்கள் சேர்ந்து தெருவில் நடக்கிறார்கள்
அவர்கள் சிரிக்கிறார்கள்
அங்கே ஒரு விபத்து
பெண் நினைவிழக்கிறாள்
அந்த மனிதன் தொலைபேசியைத் தேடிப் போகிறான்
அவன் அழுது கொண்டிருக்கிறான்
வெளிச்சம் படர்ந்த ஒரு வீட்டுக்கு வருகிறான்
தொலைபேசி இருக்கிறதா என்று விசாரிக்கிறான்
அங்கே யாருக்கோ அவனைத் தெரிந்திருக்கிறது
இருந்து சாப்பிட்டுவிட்டுப் போ
வேண்டாம்
தொலைபேசி எங்கே இருக்கிறது?
சாப்பிட ஏதேனும் எடுக்கவா, எதையாவது சாப்பிட்டுவிட்டுப் போ
அவன் உட்கார்ந்து சாப்பிடுகிறான்
சபிக்கப்பட்டவன்போலக் குடிக்கிறான் 
அவன் சிரிக்கிறான்
அவர்கள் அவனை எழுப்பி எதையாவது ஓதச் சொல்கிறார்கள்
அவன் ஓதுகிறான்
மேஜைக்கு அடியில் கிடந்து உறங்கித் தொலைக்கிறான்.

நன்றி : காலச்சுவடு இதழ்

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)