தலைப்பு : பார்பி : நாவல்
ஆசிரியர் : சரவணன் சந்திரன்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
விலை : 150/-

பதிவு செய்த நாள்

03 மார் 2018
14:43

ரவணன் சந்திரனின் நான்காவது நாவலான பார்பியை வாசித்தேன். முந்தைய நாவல்களின் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் வழியே தன்னை சுயபரிசேதனைக்கு உட்படுத்தி தன் படைப்புலகில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

சரவணன் சந்திரனின் பலம் நாவலுக்காக அவர் தேர்வு செய்யும் கதைகளம். ஐந்து முதலைகளின் கதையில் தைமூர் நாட்டில் தொழில்முனைவோராய் செல்பவனின் பிரச்சனைகளையும், ரோலக்ஸ் வாட்சில் தொழிலதிபர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் தரகு வேலை செய்பவனின் வாழ்வையும், அஜ்வாவில் போதை உலகத்தில் திளைப்பவனின் சித்திரம் மற்றும் மாற்று வேளாண்மையில் வெற்றி கொண்டவர்களின் சாதனை என்று புதிய புதிய களங்களைத் தொட்டிருப்பார். இந்த பார்பி நாவலிலும் கூட தமிழில் அதிகம் எழுதப்படாத ஹாக்கி விளையாட்டைக் கதைகளமாகத் தேர்வு செய்துள்ளார். அவரே முன்னாள் ஹாக்கி விளையாட்டு வீரர் என்பதால் தன்னுடைய அனுபவங்களிலிருந்து நாவலை எழுதியுள்ளது மற்ற நாவல்களைக் காட்டிலும் இந்த நாவல் கூடுதல் நெருக்கத்தைக் கொடுக்கிறது.

இந்த நாவலில் வரும் கதைச் சொல்லிக்கு இரண்டு எதிர்பார்ப்புகள் உள்ளது. ஒன்று ஹாக்கி விளையாட்டில் தேசிய அளவில் விளையாடி ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கெளரவமான அரசு வேலையில் சேர்வது. மற்றொன்று கதைச்சொல்லி சிறிய வயதிலிருந்து அவன் நேசிக்கும் பார்பி பொம்மையின் சாயலையொத்த காதலியோடு கலவி கொள்வது.

சாதாரணமாக பார்த்தால் எளிய ஆசைகளாகத் தான் தோன்றும். ஆனால் தீப்பெட்டித் தொழிற்சாலையிலும், பட்டாசு ஆலைகளிலும் அல்லல்படும் கந்தக பூமியில் வாழும் ஏழைக் குடும்பங்களில் பிள்ளைகள் குறித்த அதிகபட்ச எதிர்பார்ப்பு அரசு வேலை மட்டும் தான்.

விளையாட்டு துறை காமத்தை விலக்கப்பட்ட கனியாக வைத்திருக்கிறது. ஆனால் சரிவிகித உணவோடு கடுமையாக பயிற்சி செய்த உடலும் பதின் வயதும் தினவெடுத்து ததும்பும் ஊசலாட்டத்தினோடே தேசிய அளவில் வீரர்களைத் தேர்வு செய்வதில் நிகழும் அரசியலில் தப்பி கதைசொல்லி தன் லட்சியத்தை அடைந்தானா என்பதே நாவலின் மையம்.

கோவில்பட்டி செண்பகவல்லியம்மனின் தேரை இழுப்பதில் எழுந்த சாதிய மோதல் விளையாட்டு மைதானத்திலும் எதிரொலிக்கிறது. பள்ளி மாணவர்களிடையே இந்த சாதிய மோதல் எத்தகைய வன்முறையைத் தூண்டுகிறது என்பதையும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு இணையான திறமை வாய்ந்தவர்கள் வறுமையாலும், வன்முறையாலும், தேர்வு குழுவின் பாராபட்சத்தாலும் கூலிவேலைக்கு சென்று கொண்டிருக்கும் அவலங்களையும் நூட்பமாகச் சொல்லி செல்கிறார்.

திமிர் தனம் செய்யும் சித்தப்பா, பாசமான சித்தி, மைதானத்தைப் பராமரிக்கும் மார்க்கர், ரெளடியான ஜெகன் அண்ணன், மகனை கொன்றவனை பலி வாங்கும் வரை கூந்தலை முடிய மாட்டேன் என விரிந்த தலையோடு திரியும் தாய்( பாஞ்சாலி?! ), கண்டிப்பும் பாசமும் நிறைந்த கோச் என நாவலில் வரும் சின்ன கதாப்பாத்திரங்கள் கூட இயல்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது சிறப்பு.

சரவணன் சந்திரனின் மொழி நடை அருவியிலிருந்து சுழித்துக் கொண்டு ஓடும் புது வெள்ளம் போல தன் அனுபவப் பரப்பின் சேகரங்களையெல்லாம் அடித்துக் கொண்டு ஓடுகிறது. விளையாடும்போது கேலரியைப் பார்க்கதே மவனே , ஏதாவது ஒரு அப்ஷன் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பைத்தியமாகி விடுவோம் , எதிலிருந்தாவது விடுபட விரும்பினால் அதை துச்சமாக நினை. பல நேரங்களில் விளையாட்டு வீரனுக்கு தன்னுடைய ஆங்காரம்தான் சிறந்த தோழன் என்ற அனுபவத் தெறிப்புகள் நாவலோடு ஒன்ற வைக்கிறது.

இந்த நாவலில் சீன பார்பி பொம்மையைக் கதைசொல்லி எவ்வளவு நேசிக்கிறான். மற்றவர்களுக்குத் தெரியாமல் எவ்வாறு பாதுகாக்கிறான் என்று திரும்ப திரும்ப செல்வதன் மூலமாக அதை குறியீடாக மாற்ற முயல்கிறார் சரவணன் சந்திரன். அது நாவலில் தன்னியல்பாகப் பொருந்தாமல் கொஞ்சம் துருத்திக் கொண்டு தெரிவது மட்டுமே இந்த நாவலின் பலவீனம் என நினைக்கிறேன். மற்ற படி இவரின் நாவல்களைப் படித்து முடிக்கையில் வாசிப்பு இன்பம்( Reading Pleasure) அதிகம் கிடைக்கும். பார்பி நாவலிலும் அதற்கு குறையில்லை. நம்பிக்கையோடு வாசிக்கலாம். பார்பி நம்மை ஏமாற்ற மாட்டாள்.
- சிவ பிரசாத்

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)