பதிவு செய்த நாள்

05 மார் 2018
17:09

ம் தமிழ் மொழியில் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. நாம் பயன்படுத்துகிற எல்லாச் சொற்களும் தமிழ்ச்சொற்கள் அல்ல. அவற்றிடையே சமஸ்கிருதம் எனப்படுகிற வடமொழிச் சொற்களும் பரவலாகக் கலந்திருக்கின்றன. தற்காலத்தில் ஆங்கிலச் சொற்களை மிகுதியாகக் கலந்துதான் பேசி வருகிறோம்.

ஒரு மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவது பிழை. வேறு வழியே இல்லாதபோது, புதிதாய் நுழைந்த ஒரு பெயர்ச்சொல்லை அரிதாகப் பயன்படுத்தலாம். ஆனால், அதற்கடுத்த பயன்பாடுகளில் அந்தப் பிறமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல்லை ஆக்கிக்கொள்ள வேண்டும். வேற்றுமொழிச் சொற்களையே தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.

நாம் பேசுகிற பேச்சுத் தமிழிலேயே எண்ணற்ற வடசொற்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றுக்கு மாற்றான தமிழ்ச்சொற்களை அறிந்தால்தான், வடசொல் பயன்பாட்டைத் தவிர்க்க முடியும்.

'அதிகம்' என்ற சொல் வடசொல்லாகும். அதற்கு 'மிகுதி' என்று தமிழில் பயன்படுத்த வேண்டும். அதிகம் என்ற பெயர்ச்சொல் உள்ளே நுழைந்ததால், 'அதிகரித்தது' என்று பிழையான ஒரு வினைச்சொல்லையும் ஆக்கிப் பயன்படுத்துகிறோம். 'மிகுந்தது' என்று தமிழ் வினைச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

சம்பவம் என்று சொல்வதைத் தவிர்த்து, 'நிகழ்வு' என்று தமிழில் சொல்ல வேண்டும். சம்பவம் என்ற சொல்லின் வழியே 'சம்பவித்தது' என்று வினைச்சொல்லாக்கிப் பயன்படுத்துவதும் பிழை. 'நிகழ்ந்தது, நேர்ந்தது' என்று தமிழ் வினைச்சொற்களைத்தான் பயன்படுத்த வேண்டும்.

பிரகாசம், பூஜை, ஜொலிப்பு போன்ற வடசொற்களைப் பயன்படுத்துகிறோம். அதன்வழியே பிரகாசித்தது, பூஜித்தான், ஜொலித்தது என்று பிழைவழக்காக வினைச்சொற்களை ஆக்குகிறோம். மின்னியது, வழிபட்டான், ஒளிர்ந்தது என்று முறையான தமிழ் வினைச்சொற்கள் இருக்கின்றன. அவற்றை அறியாமல் தொடர்ந்து வடசொற்களையே பயன்படுத்துகிறோம்.

இவ்வாறு ஒரு மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலப்பது இரண்டு மொழிகளுக்கும் கேடாக அமையும். தூய தமிழ்ச்சொற்களையும் வடமொழிச் சொற்களையும் அறிந்துகொள்ள வேண்டும். நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் வடசொற்களின் பட்டியலைப் பெற்று, அவற்றுக்கு நேரான தமிழ்ச்சொற்களை அறிந்துகொள்வது நல்ல மொழிப்பயிற்சியாகும்.

- மகுடேசுவரன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)