தலைப்பு : கடல் பயணங்கள்
ஆசிரியர் : மருதன்
பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்
விலை : 130/-

பதிவு செய்த நாள்

07 மார் 2018
18:07

கிஸ்டோபர் கொலம்பஸ், ஜான் கபோட் இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் இத்தாலியர்கள். இருவருக்கும் கப்பல் பயணம் பிடிக்கும், இருவருக்கும் ஆசியாவை அடைவதுதான் லட்சியம்.

ஐரோப்பாவில் இருந்து ஆசியாவுக்கு புதிய வழித்தடத்தைக் கண்டறிய, இருவருமே விரும்பினர். இருவருமே தங்கள் கனவைத் தேடி சுற்றி அலைந்து, எதிர்பாராத முடிவுகளை அடைந்தனர்.

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகத் தவறாக நினைத்துக்கொண்டார். கொலம்பஸைப் போல் மேற்கே சென்று ஆசியாவைத் தொட்டுவிடலாம் என்று கபோட் கனவு கண்டார். 1495 ஆம் ஆண்டின் முடிவில் அவர் இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டோல் என்னும் பகுதிக்கு வந்து சேர்ந்தர்.

அது ஒரு துறைமுக நகரம். கப்பல் பயணங்களை நேசிப்பவர்களுக்கும் புதிய வழிகளை கண்டறிய விரும்பும் ஆர்வலர்களுக்கும் பிரிஸ்டோல் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தது. இங்கிருந்துதான் பல பயணிகள் புது வழி தேடி, தங்கள் கப்பல் பயணத்தைத் தொடங்கினார்கள்.

இங்கிலாந்து மன்னர் ஏழாம் ஹென்றி, கபோடுக்குக் கப்பலும் பணமும் ஆட்களையும் அளித்து வாழ்த்தி அனுப்பிவைத்தார். கொலம்பஸ் தன் சாகசப் பயணங்கள் பற்றி ஆஹா, ஓஹோ என்று பல இடங்களில் சொல்லிவந்தார். இந்தப் பேச்சுகள் அங்கும் இங்கும் பரவி இங்கிலாந்தையும் வந்தடைந்தது. அவருக்கு நிதியுதவி அளித்த ஸ்பெயின், இனி ஓஹோவென்று வளரப்போகிறதாமே? என்றெல்லாம் மக்கள் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.

ஏழாம் ஹெனி சும்மா இருப்பாரா? நாமும் கப்பல் கொடுத்து, ஒருவரை அனுப்பி வைப்போம். அவர் ஏதாவது கண்டு பிடிக்கிறாரா பார்ப்போம் என்று ஜான் கபோடை அனுப்பி வைத்தார். மே 1497ல் பிரிஸ்டோலில் இருட்ந்ஹு கிளம்பினார் கபோட். சிறிய கப்பல். மொத்தம் 18 பணியாளர்கள். இந்தக் கப்பல் வட அமெரிக்காவைச் சென்றடைந்தது.

எப்படி போனார்கள்? வழியில் என்னவெல்லாம் நடந்தது என்பதெல்லாம் தெரியவில்லை. ‘நான் சென்றபோது மக்கள் யாரும் அங்கில்லை. ஆனால் அது மக்கள் வாழக்கூடிய இடம்தான் என்பது பார்த்த உடனே தெரிந்துவிட்டது’ என்கிறார் கபோட். இது நான் கண்டுபிடித்த இடம் என்று பெருமையுடன் சொல்லிக்கொண்டதோடு, அந்த நிலத்தை ஹென்றிக்குச் சொந்தமானதாகவும் மாற்றினார். இன்று அது ‘கபோட் ஸ்ட்ரெயிட்’ என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இப்போதைய கிழக்கு கனடாவைச் சேர்ந்த பகுதி இது. சந்தேகமில்லை. இது கபோடின் சாதனைதான்.

யாருமற்ற, இயற்கைவளம் கொண்ட ஓர் புதிய இடத்தை அவர் கண்டுபிடித்திருந்தார். அதுவும் முதல் பயணத்திலேயே! அதிகம் சிரமப்படாமல் அவர் இதைச் செய்து முடித்திருந்தார். எவ்வளவோ கடல் பயணிகள் உயிரைக் கொடுத்து ஆண்டுக் கணக்கில் சுற்றி அலைந்து ஒன்றுமே கிடைக்காமல் திரும்பி வந்திருக்கிறார்கள். பலர் திரும்பிக்கூட வரவில்லை. அப்படியிருக்கும்போது, போனோமா வந்தோமா என்று ஒரு புதிய பகுதியை வசப்படுத்திக்கொண்ட கபோட், பல பாராட்டுகளை வென்றெடுத்தது நிஜம்.

ஆனால், அவர் ஒரு தவறு செய்துவிட்டார். தான் கண்டு பிடித்தது ஒரு வட அமெரிக்க நிலப்பரப்பு என்பதை அவர் உணரவில்லை. அதுதான் ஆசியா என்று நினைத்துக்கொண்டார். ஆசியாவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியக் கண்டுபிடித்துவிட்டேன் என்று சத்தம் போட்டு அறிவித்தார்.

இங்கே மிளகும் ஏலக்காயும் இன்னபிற வாசனைப் பொருட்களும் கொத்துக் கொத்தாகக் கிடைக்கும் என்று மகிழ்ந்தார். நான் மட்டுமல்ல, என்னை நம்பி வழியனுப்பி வைத்த மன்னருக்கும் அவருடைய நாட்டுக்கும் நற்பெயர் சம்பாதித்துக் கொடுத்துவிட்டேன் என்று கூத்தாடினார், அவர் சொன்னதை எல்லோரும் நம்பினார்கள். அடடா, கொலம்பஸுக்கு அடுத்தது நீதான் போ என்று மேலும் உற்சாகமூட்டினார்கள். அவரும் தன்னை இன்னொரு கொலம்பஸாகத்தான் நினைத்துக்கொண்டார்.

1497ம் ஆண்டு முடிவில், அடுத்த பெரும் பயணத்திட்டத்துடன் ஏழாம் ஹென்றியைச் சென்று பார்த்தார் கபோட். அளவு கடந்த உற்சாகத்துடன் வழியனுப்பினார் மன்னர். இந்த முறை அவர் கண்டு பிடிக்க விரும்பிய இடம் ஜப்பான், வடக்கு அட்லாண்டிக் பகுதி வழியாகச் சென்று ஜப்பானைச் சென்றடைவதே அவருடைய திட்டம்.

1498ம் ஆண்டு மே மாதம் பயணம் ஆரம்பமானது. இந்த முறை பெரிய கப்பல். ஒன்றல்ல, ஐந்து கப்பல்கள். 200 ஆட்கள்! இனியும் கபோட் ஒரு சாதாரண பயணி அல்ல அல்லவா? கப்பல் பார்வையைவிட்டு மறைவதற்குள் மன்னர் கனவு காண ஆரம்பித்துவிட்டார்.

வெகுநாட்களாகியும், கபோட் பற்றித் தகவலே இல்லை. இருமாதங்களுக்குப் பின் அந்த ஐந்தில் ஏதோ ஒரு கப்பலின் ஒரு பகுதி அயர்லாந்து அருகில் கரை ஒதுங்கியதாகத் தகவல் வந்தது. வழியில் பெரும் சூறாவளியில் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்று சிலர் யூகிக்கிறார்கள். வேறு ஏதேனும் விபத்து நடந்திருக்கலாம் என்கிறார்கள் வேறு சிலர். இப்படிப் பல யூகங்கள் சொல்லப்படுகின்றன என்றாலும், திட்டவட்டமாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லும் பதில் ஒன்றுதான். கபோன் என்னவானார் என்று தெரியவில்லை!

(இந்த நூலில், உலகை மாற்றிய சரித்திரம் வாய்ந்த 13 மாலுமிகளின் கடற்பயணங்கள் பற்றி கதைபோல சொல்லப்பட்டிருக்கிறது.)

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)