பதிவு செய்த நாள்

08 மார் 2018
15:46

சுற்றுச்சூழலைக் காப்பாற்றவும், மனித உரிமைகளை மீட்டெடுக்கவும் போராடித் தனது உயிரைத் துறந்தவர் ‘கென் சரோ விவா’. நைஜீரியாவில் உள்ள போரி என்னும் ஊரில்,, 1941ம் ஆண்டு பிறந்தார். இயற்பெயர் ‘கெனுல் சரோ விவா’. படிப்பில் சிறந்து விளங்கிய இவர், ‘உமாஹியா’ அரசுக் கல்லூரியிலும், ‘இபதான்’ பல்கலைக்கழகத்திலும் பயின்று, ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். லாகோஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சிலகாலம் பணிபுரிந்தார்.

கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உடையவர். பல்வேறு பத்திரிகைகளிலும் எழுதினார். பல புத்தகங்களை எழுதியுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்தார். அரசியலில் நடக்கும் ஊழல்களை, நையாண்டியாக விமர்சனம் செய்யும் இவரது தொலைக்காட்சித் தொடர், பெரும் வரவேற்பைப் பெற்றது.

நைஜீரியாவில் விவசாயத்திற்குப் புகழ்பெற்ற ‘ஓகோனிலேண்ட்’ பகுதியில், எண்ணெய் வயல்களிலிருந்து ராயல் டச் ஷெல் நிறுவனம் 1958ல் பெட்ரோல் எடுத்து வந்தது. இந்த ஆலையின் எண்ணெய்க் கழிவுகளால் நீர்நிலைகள் விவசாய நிலங்கள் பாழடைந்தன. மீன்கள் உள்ளிட நீர்வாழ் உயிரினங்கள் இறந்தன. சுமார் ஆறு லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக, கென் சரோ வொவா, ஓகோனி பழங்குடிமக்கள் வாழ்வுரிமை இயக்கத்தைத் தொடங்கினார். மூன்று லட்சம் மக்களைத் திரட்டி நடைப்பயணம் மேற்கொண்டார்.

கச்சா எண்ணெய் மூலம் வரும் வருமானத்தில் மக்களுக்கும் பங்கு தர வேண்டும் என வலியுறுத்தினார். ‘ஓகோனிலேண்ட்’ பகுதியில் நான்கு பேர் கொல்லப்பட்ட வழக்கில், சம்பந்தமே இல்லாத கென் கைது செய்யப்பட்டார். நைஜீரிய ராணுவ சர்வாதிகார ஆட்சியின் நீதிமன்றம், கென் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, 1995 நவம்பர் 10ம் தேதி, அவர் தூக்கிலிடப்பட்டார். உடன், அவருடைய நண்பர்கல் எட்டு பேரும் தூக்கிலிடப்பட்டனர். சுற்றுச்சூழல் விருது 1995ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. சுற்றுச்சூழலைக் காப்பதற்காக, எழுத்தின் வாயிலாகவும், சமூகப் போராட்டங்களில் பங்கேற்றும் தொடர்ச்சியாக பல்வேறு தங்களில் தீவிரத்துடன் இயங்கி உயிர்த் தியாகம் செய்த கென், அவரது காலத்திற்குப் பிறகும் நினைவுகூரப்படுகிறார்.

- ப.கோபாலகிருஷ்ணன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)