பதிவு செய்த நாள்

09 மார் 2018
14:07
திரைப்படமாகிறது வெட்டாட்டம் நாவல்!

  கிளாசிக் எழுத்தாளர்களான தி.ஜா, கல்கி, அகிலன், அசோகமித்ரன், ஜெயகாந்தன் போன்ற பல்வேறு எழுத்தாளர்களின் நாவல்களும் சிறுகதைகளும் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் சமகாலத்தில் க்ரைம் கதை மன்னரான ராஜேஷ்குமார், இந்திரா பார்த்தசாரதி, அனுராதா ரமணன் போன்ற வெகுஜன நாவல் எழுத்தாளர்களின் கதைகளும் திரைப்படமாக்கப்படுகின்றன.

இவ்வரிசையில், கடந்த வருடம் வெளியான எழுத்தாளர் ஷான் எழுதிய வெட்டாட்டம் நாவல் ‘நோட்டா’ என்கிற தலைப்பில் திரைப்படமாக இருக்கிறது. தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் கதநாயகன் விஜய் தேவரகொண்டா இந்தப் படத்தில் நடிக்கிறார். ஆனந்த்  ஷங்கர் இப்படத்தை இயக்குகிறார். தெலுங்கு, தமிழ் இரண்டிலுமே இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.

வெட்டாட்டம் நாவலின் கதைக்களம் குறித்து சிறிய வாசகப் பார்வை இங்கே....

நாவல் ஆரம்பத்திலேயே இரகசிய தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு பேச்சு வார்த்தையாகவே ஆரம்பிக்கிறது.கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து அதிவேகத்திற்கு அழைத்துச் செல்லும் எழுத்து நடை.

முதலமைச்சராக இருக்கும் வினோதன் வழக்கின் காரணமாக அவரது மகன் வருணை ஒருநாள் இரவில் முதலமைச்சர் ஆக்கிவிடுகிறார். ஆனால், வருணுக்கு சுத்தமாக அரசியல் அனுபவம் கிடையாது. கூடவே தன் அம்மாவின் இறப்பிற்கு காரணமாக இருந்தார் வினோதன் என்பதால் அவர் மேல் வருணிற்கு நெடுநாள் கோபம். ஒரு கட்டாயத்தின் பெயரில் தான் முதலமைச்சராக பதவியேற்கிறான் வருண். கொஞ்ச நாட்கள் தான் அதன் பிறகு வழக்கிலிருந்து அப்பா மீண்டு வந்து தன்னை இந்த பதவிச் சுமையிலிருந்து நீக்கி விடுவார் என்கிற எண்ணத்தோடு பதவியில் அமர்கிறான்.

ஆனால், அதன் பிறகு நிலைமை தலைகீழாகிறது. வழக்கின் தீர்ப்பு எதிராக வர வினோதன் சிறையில் இருக்க வேண்டியதாகிறது! உடன் இருந்து நெறிபடுத்திக் கொண்டிருந்த கட்சியின் நீண்ட நாள் உறுப்பினரும் அமைச்சருமான அபுதாஹிர் வினோதனின் விடுதலைக்காக டெல்லி செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் வருணின் கல்லூரிப் பேராசிரியர் மகேந்திரனிடம் உதவி கேட்கிறான். அவரும் வருணிற்கு வழிகாட்டுவதற்கு ஒப்புக் கொள்கிறார். ஆனால், வினோதனுக்கும், மகேந்திரனுக்கும் தீராத பகை இருந்து வந்தது. ஒருகாலத்தில் கட்சியில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர்தான் மகேந்திரன்.

நாட்கள் செல்ல செல்ல வேறு ஒருசில அசம்பாவிதங்கள் நடந்தேருகின்றன. அதனால் வருணிற்கு பதவியிலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகிறது. ஒரு கட்டத்தில் பதவியிருந்தால் தான் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்கிற மாதிரியான பவர் பாலிட்டிக்ஸின் சுழலில் வருண் மாட்டிக் கொள்கிறான்!

சமகால நிகழ்வுகளை வைத்து அடுத்தடுத்த அடுத்தடுத்த அத்யாயங்களை சோர்வின்றி கட்டமைத்திருக்கிறார் ஆசிரியர்! இன்னும் சொல்லப் போனால் சமீபத்திய மற்றும் 80 களின் அரசியல் சூழலையும் நாவலில் கையண்டிருக்கிறார்... கதையின் ப்ளஸ் / மைனஸ் என்று எடுத்துக் கொண்டால் இரண்டுமே இந்த சமகால அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் தான் என்று கூறலாம்! ஒரு கட்டத்தில் இதற்க்குப் பிறகு இது தான் நடக்கப் போகிறது என்பதை எளிதாக யூகித்து விட முடிகிறது.

அரசியல்வாதிகள் அவர்களின் சொத்துக்களை எவ்வாறு எல்லாம் பதுக்குகிறார்கள், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், குட்டிக் குட்டித் தீவுகளுக்கும் எப்படி பணம் முதலீடாக கொண்டு செல்லப்படுகிறது என்பதை விளக்கமாக இடைஇடையே சொல்லியிருப்பது கதையின் தொய்விலிருந்து மீட்டு வேகமெடுக்க வைக்கிறது! டெக்னாலெஜியை எப்படி எல்லாம் பயன்படுத்தி தில்லு முல்லுகள் நிகழ்த்தப்படுகிறது என்பதையும் கதையோட்டத்துடன் சொல்லியிருக்கிறார். ஒரு விறுவிறுப்பான கதையை சுவாரஸ்யம் குறையாமல் கொடுத்திருக்கிறார் ஷான்!

விமர்சனம் எழுதியவர் : கேசவராஜ் ரங்கநாதன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)