இளம் வயதிலேயே தன்னைக் கவிதைகள் மூலம் இந்தச் சமூகத்திற்கு அறிமுகம் செய்துகொண்டவர் முத்துராசா. சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் முடித்து, தற்போது சென்னைப் பல்களைக் கழகத்தில் இதழியல் துறையில் படித்து வருகிறார். வாசிப்பு, இலக்கியக் கூட்டம், கதை, கவிதைகள்தான் இவரது உலகம்.
திருமணச் சுப காரியங்களுக்கும், கண்ணீ அஞ்சலி பதாகைகளுக்கும் கவிதை எழுதிக்கொடுக்க கிராமங்களில் ஓர் ஆள் இருப்பாரல்லவா, லாடனேந்தல் கிராமத்தில் அப்படி ஒரு கவிஞராக இருந்தவர்தான் முத்துராசா. அவரின் ஆரம்பக்கட்ட கவிதைகள் அப்படியாக இருந்தாலும், காலப்போக்கில் சமூகத்தில் நடக்கும் அவலங்களைக் கண்டு சூடான கவிதைகளாக வெளிப்பட்டிருக்கிறது. துண்டுத் துண்டாக இவர் எழுதிவைத்தக் கவிதைகளை புத்தகமாக வெளியிட உந்துதலாக இருந்திருக்கிறார் இதழியல் துறை தலைவர் ரவிந்திரன்.
பல்கலைக்கழகத்தின் முற்றம் கலைக்குழு முத்துராசாவின் முதல் கவிதை தொகுப்பான ‘எறும்புகள் மொய்க்கும் இரைப்பை’ கவிதை நூலை 2015ம் ஆண்டு வெளியிட்டிருக்கிறது. அதற்கடுத்த வருடம் நினைவுக்கு வரும் சாவுகள் கவிதை தொகுப்பை முற்றம் வெளியிட்டிருக்கிறது. இந்த இரண்டு கவிதை தொகுப்புகளின் மூலம் பரவலாக இலக்கிய உலகில் அறியப்பட்டவர்.