பதிவு செய்த நாள்

10 மார் 2018
13:51

 ருபதாம் நூற்றாண்டில் பாரதியாருக்கு இணையாக பல கவிஞர்கள் வாழ்ந்தனர். அவர்களில் பலர் அந்தக் காலத்தில் பெரிதாக பேசப்பட்டாலும் பாரதியாருக்கு இணையாக இன்று போற்றப்படுவது இல்லை. அத்தகைய கவிஞர்களில் ஒருவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

தேசிக விநாயகம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில் 1876 சூலை 27-ம் நாள் சிவதாணுப்பிள்ளை- ஆதிலட்சுமியம்மாள் தம்பதியருக்குப் பிறந்தார். ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் வாழ்ந்து வந்த நாஞ்சில்நாடு மலையாள நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால், பள்ளியில் மலையாள மொழி கற்க வேண்டியவரானார்.

எனினும் தேரூரை அடுத்த வாணன்திட்டிலிருந்த திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிபுனையும் ஆற்றலும் கைவரப் பெற்றார். ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப்பின் கோட்டாறு அரசுப் பள்ளியில் பயின்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரி விரிவுரையாளராகவும் பணிபுரிந்து, 1931ல் ஓய்வு பெற்றார்.

ஓய்வுக்குப் பின் தம் மனைவியின் ஊராகிய புத்தேரியில் தங்கிக் கவிதை இயற்றுவதிலும் கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார். கோட்டாற்றில் மத்தியதரப் பாடசாலையின் உதவி ஆசிரியராகவும், பின்னர் நாகர்கோவில் போதனா முறைப் பாடசாலையிலும் திருவனந்தை பெண் போதனா முறைப் பாடசாலையிலும் உதவியாசிரியராகவும் இருந்தார். விஞ்ஞான ஆசிரியராகவே பணி புரிந்தார். ஆனால் இலக்கியக் கல்வியில் தொடர்ந்து தன்னைக் கரைத்துக் கொண்டு வந்தார்.

மேலும் மேலும் நூல்களைக் கற்பதும் ஆராய்ச்சி செய்வதும் பாடல்களை இயற்றுவதும் இவரது அன்றாட வாழ்க்கையாயிற்று. தமிழ்க்கல்வியும் ஆங்கிலக் கல்வியும் கவிமணியின் பண்பாட்டுணர்ச்சியை மிகவும் ஆழமாக வளர்த்தன. அறிவியல் கண்ணோட்டம் இயல்பாக இவரிடம் வெளிப்பட்டது. அத்துடன் நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் இயல்பாக வெளிப்பட்டது. அதுகாறுமான மரபுவழிச் சிந்தனை அணுகுமுறைகளுடன் புதிய நவீனப் பாங்குடைய சிந்தனைச் சேகரமும் கவிமணியின் பார்வையை ஆழப்படுத்தியது. அகலப்படுத்தியது.

கவிமணி, விடுதலைப் போராட்டம் அல்லாத சமயம், சமரச நோக்கு, நீதிநெறி போன்ற அடிப்படைக் கருத்துகளை மையமாக வைத்து அழகிய ஆழமான அமரத் தன்மை மிகு தீஞ்சுவைத் தமிழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார். எனினும் அவர் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடாததாலோ அல்லது புரட்சிக் கனல் கக்கும் விடுதலைப் பாடல்கள் பாடாததாலோ பாரதியைப் போற்றிய அளவுக்குக் கவிமணியை மக்கள் போற்றத் தவறிவிட்டனர்.

கவிமணியின் பாடல்களில் உண்மையும் அழகும் கைகோர்த்துச் செல்வதை உணர முடியும். கரும்பினும் இனிமை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம், அரிய செல்வம், தெவிட்டாத அமிர்தம் என புகழ்வார் இரசிகமணி டி.கே.சி. ‘‘தேசிக விநாயகத்தின் கவிப்பெருமை, தினமும் கேட்பது என் செவிப்பெருமை’’. எனப் புகழ்மொழி சூட்டுவார் நாமக்கல் கவிஞர். ‘மலரும் மாலையும்’, ‘ஆசிய ஜோதி’, ‘உமர்கய்யாம் பாடல்கள்’, 'நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’ ஆகிய நான்கு கவிதைப் படைப்புக்களாலேயே கவிமணி தமிழ்க்கவிதை உலகில் முதன்மை இடம் பெறுகின்றார். 'தேவியின் கீர்த்தனங்கள்' என்ற இசைப் பாடல்களின் தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பலவற்றை இன்னிசை வித்தகர்கள் பலர் மேடைகளில் விரும்பிப் பாடுவது அந்தத் தொகுப்பின் சிறப்பு என்று கூறலாம்.

கவிமணியின் சொற்பொழிவுகளும் உரைநடைகளும் ‘கவிமணியின் உரை மணிகள்’ என நூலுருவம் பெற்றுள்ளது. இதன் மூலம் கவிமணியின் சிந்தனைப் பரப்பு எத்தகைய ஆழம் மற்றும் நவீனம் கொண்டது என்பது தெளிவாகிறது.

நாஞ்சில் நாட்டு ‘மருமக்கள் வழிமான்மியம்’ சமுதாயச் சீர்கேடான ஒரு பழமையான வழக்கத்தின் தீமையை நீக்குதற்காகப் பாடப்பெற்ற புரட்சிக்காவியம். தந்தையின் உரிமையும் உடைமையும் தம்மக்களுக்குச் சேராது, தங்கையின் புதல்வனுக்கு உரிமையாகிற புதுமையான நடைமுறையால், நாஞ்சில் நாட்டுத் தமிழர்கள் மிகுந்த அல்லலுக்கு உட்பட்டனர். மன்னர்கள் கொண்டொழுகிய மருமக்கள் தாயமுறை, கேரள மக்களை மட்டுமன்றி, நாஞ்சில் நாட்டுத் தமிழர்களையும் பற்றிக் கொண்டது. இதனை அழித்தொழிக்கக் கவி ஆயுதம் ஏந்தினார் கவிமணி.

கவிமணி வெளியுலக ஆரவாரங்களலிருந்து ஒதுங்கி வாழ்ந்தவர். தேடிவந்த நியாயமான புகழைக் கூட தள்ளிவிட்டவர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இவருக்கு தமிழ்ப் பேராசிரியர் பதவி தர முன்வந்தது. தமிழ்ச் சங்கங்கள் விருதுகள் வழங்க விழைந்தன. அவற்றையெல்லாம் கவிமணி ஒதுக்கி விட்டார். தமிழறிஞர்கள் எஸ்.வையாபுரிப்பிள்ளை, டி.கே.சி., அண்ணாமலை அரசர் போன்றோரின் வற்புறுத்தலின் பேரில் ‘கவிமணி’ என்ற விருதை ஏற்றார் தேசிக விநாயகம் பிள்ளை.

வாழ்வாங்கு வாழ்ந்த கவிமணி 1954ம் ஆண்டு செப்டம்பர் 26ல் மறைந்தார். 2005ம் ஆண்டு கவிஞரை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசு நினைவுத் தபால் தலை வெளியிட்டது. தமிழுக்குத் தொண்டு செய்து, கவிதை உலகில் நீங்கா இடம் பெற்றவர் கவிமணி மறைந்தாலும் அவரின் தமிழ்ப்பணி மக்கள் மனங்களில் என்றென்றும் நிறைந்திருக்கும்,

- கவிமணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)