பதிவு செய்த நாள்

10 மார் 2018
17:19

ருநாள் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த காளை மாட்டை புலி ஒன்று சந்தித்தது. புலியைப் பார்த்ததும் காளைமாடு கொஞ்சம் கிரண்டுபோய், புலியைத் தாக்கத் தயாரானது. அப்போது புலி, “அடடே... இருப்பா... நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். உன்னிடம் எனக்கொரு கேள்வி கேட்க வேண்டியதிருக்கிறது!” என்றது.

இருந்தாலும் எச்சரிக்கையாக நின்றுகொண்ட காளைமாடு, 

“ம்! கேளு” என்றது.

“நீ உருவத்தில் பெரிதாக இருக்கிறாய். உன்னைப் பார்த்ததால் பலசாலி போலவும் தெரிகிறது. ஆனால் உன்னைவிட உருவத்தில் சிறியவனான மனிதன், உன் முதுகில் நுகத்தடியை வைத்து நிலத்தை உழ வைக்கிறான். அப்படி உன்னை ஆட்கொள்கிற அளவுக்கு அவனிடம் என்ன சக்தி இருக்கிறது” எனக் கேட்டது புலி.

சிறிது யோசித்துவிட்டு, “எனது எஜமானனிடம் அறிவு இருக்கிறது” என்றது காளைமாடு.

“அறிவு என்றால் என்ன, அது எப்படி இருக்கும்?” இது புலி.

“எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் எனது நண்பர்கள், எல்லா விலங்குகளையும் ஆட்டிப்படைக்கும் அறிவு மனிதனுக்கு இருப்பதாகக் கூறுகிறார்கள்” என்றது காளைமாடு.

“அப்படியென்றால், எனக்கும் அந்த அறிவு கிடைக்குமா?” என்று புலி கேட்டது.

“அதை எனது எஜமானரிடம் கேட்டால்தான் தெரியும். இதோ அவரே வருகிறார்.” என்றது, காளைமாடு.

அந்த நேரம் பார்த்து அங்கே காளைமாட்டின் எஜமானன் அங்கே வந்து சேர்ந்தான். அருகில் வந்தபிறகே, புலி இருப்பதைக் கவனித்தான். அவர்னுக்கு அதைக் கண்டதும் நடுக்கும்.’ இனி இங்கிருந்து ஓடினால் புலி நம்மை அடித்துக் கொன்றுவிடும். அதனால் நடப்பது நடக்கட்டும் என்று அசட்டுத் துணிச்சலில் ஓடாமல் அங்கேயே நின்றுகொண்டான்.

அப்போது புலி விவசாயியிடம் கேட்டது, “நாங்கள் அறிவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். எனக்கு அறிவைப் பற்றிச் சொல்லுங்கள் ‘அது எனக்கு கொஞ்சம் கிடைக்குமா?’ என்பதை அறியவே காத்திருந்தேன்” என்றது.

அதைக் கேட்டதும்தான் விவசாயிக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. ‘இனி இந்தப் புலி நம்மை ஒன்றும் செய்யாது’ என்று நினைத்த அவன் , “அறிவை நான் வீட்டில் வைத்திருக்கிறேன். அதை உனக்கும் கொஞ்சம் எடுத்து வருகிறேன். அதனால் இங்கிருந்து நீ போய் விடதே” என்று புலியிடம் கேட்டுக்கொண்டான்.

புலியும் ‘அறிவு கிடைத்துவிட்டால், காட்டு விலங்குகளை நாமும் ஆட்டிப்படைக்கலாம்’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு, “போய் எடுத்து வாருங்கள். நான் எங்கும் போய் விடமாட்டேன். இங்கேதான் இருப்பேன்” என்றது.

“நான் போன பிறகு காளைமாட்டை, நீ அடித்து சாப்பிட்டு விடமாட்டாயே?”
“நிச்சயம் சாப்பிட மாட்டேன்.”
“சரி! உன்னைக் கட்டிப்போட்டால் தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டாயே?”
“மாட்டேன்.”

புலி அப்படிச்சொன்னதும் அதைப் பிடித்து ஒரு மரத்தில் இறுக்கமாகக் கட்டிப்போட்டான் விவசாயி. பிறகு “இந்தக் கட்டுகளை அவிழ்த்துவிட்டு நீ போய்விட்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல” என்றான் விவசாயி. புலியும் “சரி” என்றது.

“ஒரு நிமிஷம் அறிவு என்னிடமே இருக்கிறது. நாந்தான் மறந்துபோய் வீட்டிலிருக்கிறது என்று சொல்லிவிட்டேன்.”
“அப்படியா? உடனே அதை எனக்கும் கொஞ்சம் கொடு” என்றது புலி.
“இதோ” என்றவாரே ஒரு சவுக்குத் தடியை எடுத்து புலியை கண்மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தான் விவசாயி.

அவ்வளவுதான், புலி வலியால் துடிதுடிக்க ஆரம்பித்தது. “ஏய் விவசாயி! என்னவாயிற்று உனக்கு, என்னை எதற்கு அடிக்கிறார்?”

“என்னுடைய அறிவைத்தான் உனக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். நீதானே கேட்டாய்! இங்கே இரு, ஊருக்குள் சென்று மேலும் பல ஆட்களை அழைத்துவந்து, அவர்களது அறிவையும் உனக்குப் பெற்றுத்தருகிறேன்” என்றூ சொல்லிவிட்டு, ஓட்டமும் நடையுமாம விவசாயி கிராமத்தை நோக்கிச் சென்றுவிட்டான்.

புலிக்கோ, உடல் முழுக்க சரியான ரத்தக்காயம். எப்படியோ போராடி கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு ‘தப்பித்தோம்’ என்று அங்கிருந்து ஓடிவிட்டது. விவசாயி அடித்த அடியால் ஏற்பட்ட காயங்கள் ஆறி, நாலடைவில் அதன் கோடுகளாகிப் போனது.

- நல்லார்க்கினியன்
 வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)