பதிவு செய்த நாள்

14 மார் 2018
17:25
ஸ்டீஃபன் ஹாக்கிங் படைப்புகள்!

“நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்த பூமியைப் பெருமளவு சேதப்படுத்திவருகிறோம். இந்தப்பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்றுக் கிரகத்தைத் தேடி மனித இனம் நகரவேண்டிய காலகட்டம் இது. மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் ரசித்து, பெரும் ஈடுபாட்டோடு மனித இன தொடர்ச்சிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது... நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன். இவ்வார்த்தைகளை உதிர்த்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் இன்று இவ்வுலகில் இல்லை.

தனது 21வது வயதில் Amyotrophic Lateral Sclerosis என்ற நோய் ஹாக்கிங்கை முடக்கிப் போட முயற்சி செய்தது. இன்னும் இரண்டு வருடங்களில் இறந்துவிடுவார் என்று மருத்துவர் சொல்லிவிட, நோயைத் தோற்கடித்து அரை நூற்றாண்டுக்கும் மேல் இப்பூமியில் வாழ்ந்து, இன்றோடு மறைந்துவிட்டார்.

சிறு வயதில் இருந்தே கேள்வி கேட்கும் ஞானம் என்பது அவருக்கு இருந்தது. அவர் கேட்ட கேள்விகளுக்கு அவரே பதிலையும் கண்டடைவார். தேடித் தேடி ஆராய்ந்து அதற்கான விடைகளைக் கண்டறிந்தபோது, அவருக்கு இந்த உலகம் ‘அறிவியல் அறிஞர்’ என்ற பட்டத்தைக் கொடுத்தது.

‘இந்தப் பிரபஞ்சம் எங்கிருந்து வந்தது?’ அவருக்குத் தோன்றிய முதல் கேள்வி இதுதான். அதன் தொடர்ச்சியாகப் பல்வேறு கேள்விகள்.
‘எங்கு எப்படி தொடங்கியது?’
‘ஒருவேளை இவ்வுலகம் முடிவுக்கு வந்தால், எப்படி முடியும்?’
இந்தக் கேள்விகளுக்கு அறிவியல் ஆராய்ச்சியின் மூலம் கோட்பாடுகளைக் உருவாக்கினார்.

ஸ்டீபன் ஹாக்கிங் நியூட்டன் ஐன்ஸ்டீன் போன்றோர் வரிசையில் இன்றுள்ள பிரசித்தி பெற்ற கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானி. பிரபஞ்சத் தோற்றவியல் குவாண்டம் ஈர்ப்புவிசை கருந்துளை போன்ற துறைகளில் இவரது கண்டுபிடிப்புகளும் பொது இயற்பியலில் ரோஜர் பென்ட்ரோசுடன் இணைந்து இயன்வழுப்புள்ளி பற்றி இவர் கூறியுள்ளவைகளும் முக்கியமானவை. கருந்துளைகளிலிருந்து வரும் கதிர்வீச்சு ஒன்று இவர் பெயரால் ஹாக்கிங் ரேடியேசன் என்றே அழைக்கப்படுகிறது.

இவரின்  A Brief Histroy of Time, The Universe in a nutshell, My Brief History ஆகியவை மிக முக்கிய படைப்புகள். A Brief Histroy of Time புத்தகம் கிட்டத்தட்ட 40 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலக அளவில் வரவேற்பு பெற்ற புத்தகம்.

காலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்கிற தலைப்பில் நலங்கிள்ளி மொழிபெயர்த்திருக்கிறார். பெரும்பாலான அறிவியல் புத்தகங்கள் கோட்பாடுகளின் வாய்ப்பாடுகளுடன் எழுதப்பட்டிருக்கும். அதனாலேயே மக்கள் அதனை வாங்கிப் படிக்க தயங்குவார்கள். ஆனால் ஹாக்கிங்கின் இந்தப் புத்தகத்தில் எந்த இடத்திலும் கோட்பாட்டு வாய்ப்பாடுகள் இல்லாமல், எளிய மக்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு எளிமையான வடிவில் கொடுத்திருக்கிறார் ஹாக்கிங்.

“படைப்பாளியால் படைக்கப்பட்ட உலகமெனில், படைப்பாளியை படைத்தது யார்?” என்கிற வாதத்தோடு தான், தன்னோட A Brief History of Time புத்தகத்தை முடித்திருப்பார்.

- கவிமணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)