பதிவு செய்த நாள்

15 மார் 2018
17:57

 ழங்கால கற்சிலையிலோ இல்லை ஈக்கிகள் மழுங்கிய பனைமரக் கட்டையிலோ தொடர்ந்து வெளக்கெண்ணெய் தேய்க்கையில் ஒரு கறுப்பு நிறம் மின்னும் பாருங்கள் அந்த நிறத்தில்தான் விநாயகம் அண்ணன் இருப்பார்.

குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் முறுக்கேறிய வழுக்குமரம் போலிருக்கும் கறுத்த மேனியில் தோள்பட்டை வரை தலையின் கோரை முடிகள் தொங்கும்.

என்ன குளிர் அடித்தாலும் சரி மழை அடித்தாலும் சரி தினமும் காலை ஐந்து மணிக்கே எழுந்து பச்சைத் தண்ணீரில் தலைக்கு குளித்து, தான் வளர்த்தச் செடியிலேயே பூக்கும் அரளிப்பூக்களைப் பறித்து சாமி கும்பிடுவார். எப்போதும் எல்லோருக்கும் சேர்த்துதான் வேண்டிக் கொள்வார். சாமி கும்பிட்டுவிட்டு துன்னூறு பட்டை நாமமிட்டு, தலை முடியை ஈரத்துடன் அள்ளி முடிந்து அதற்கென்றே வைத்துள்ள துணியினால் உருமா கட்டிக் கொள்வார்.

வழிபாடுகள் முடிந்து காவி வேட்டியை அவிழ்த்துவிட்டு பழைய டீசர்ட், ஜீன்ஸ் அணியும் வரை யாருடனும் பேசமாட்டார். அதன்பிறகு விநாயகம் அண்ணனிடம் வழிந்து பேச்சு கொடுத்தால்தான் பேசுவார். அப்படி பேசத் தொடங்கினால் அவரது பேச்சுக்கு 'ம்' கொட்ட முடியாது. செம்மண் குளத்திலோ, கண்மாயிலோ வறட்சி உண்டாகி தண்ணீர் தேங்கி நின்ற தடம் போல விநாயகம் அண்ணனின் பற்வரிசைகளில் கறைகள் தெரியும். அந்தக் கறைகளோடு விநாயகம் அண்ணன் எல்லோருடனும் சிரித்து பேசுவதைப் பார்த்தாலே 'இவனுக்கெல்லாம் கஷ்டமே இருக்காது போல' என்றிருக்கும்.

விநாயகம் அண்ணனுக்கு கூடப்பிறந்த தம்பிகள் பத்து பதினைந்து பேர் இருந்தாலும், அவர் வீட்டில் தங்கியதே கிடையாது. பள்ளிக்கூடம் பக்கமே போகாமல் தனது தாத்தா 'கரடிகடிச்சான்' கூடத்தான் ஜவ்வாது மலை முழுக்க சின்ன வயதிலிருந்தே அலைந்து திரிந்தார். தனது தாத்தா என்றால் விநாயகம் அண்ணனுக்கு அவ்வளவு உயிர். தாத்தாதான் ஜவ்வாது மலை பற்றிய ஈர்ப்பையும், காடு, உயிரினங்கள் பற்றிய புரிதல்களையும் விநாயகம் அண்ணனுக்குள் கூடு பாய்ச்சியவர்.

ஒருநாள் காட்டுக்குள் மூலிகை இலைகளை பறிக்கச் சென்றபோது கரடி அடித்து தாத்தா மண்டை பிளந்து இறந்து போக, நகரங்கள் தொலைத்தொடர்பு சாதனங்கள் பற்றிய எவ்வித கவர்ச்சிகளும் இல்லாமல் பெரும்பான்மையினரின் புறவுலகம், அகவுலகத்தையும் ருசி பார்க்காமலேயே அறுத்துக் கொண்டு வீடுவாசல் போகாமல் ஜவ்வாது மலையிலும், திருவண்ணாமலை சாமியார்களுடனும் சுற்றித் திரிந்து முப்பது வயதை கடந்துவிட்டார் விநாயகம் அண்ணன்.

'மனுசங்கள விட விலங்கு, செடி கொடிகதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன்னா அதுகதான் எந்தக் கெடுதலும் யாருக்கும் நெனைக்காது. அதுக பேசுறது எனக்கு புரியும், நான் பேசுறது அதுகளுக்கும் புரியும். என் தாத்தா எனக்கு இதைத்தான் சொல்லித் தந்தாரு' என்று அடிக்கடி தத்துவார்த்தமாக பேசும் அண்ணனுக்கு அழுக்கு வெள்ளை நிற 'ராசாத்தி' என்ற நாட்டு மாடும் அதற்கு பிறந்த பிள்ளைகளும்தான் எல்லாமும். காலையில் சாணியை அள்ளிப் போட்டு, கொட்டத்தைக் கூட்டிவிட்டு, சாம்பிராணி புகை போட்டு, தண்ணீர் காட்டி மேய்ச்சலுக்கு கட்டிப்போட்டு விட்டு அதுகளோடு தலையை தடவி பேசிக்கொண்டே இருப்பார். அதுகளும் கழுத்துமணிகள் ஆட தலையசைத்துப் பதில் பேசும்.

'ஊருக்குள்ள மாட்டுக்கு ஊசி போட வந்துருக்காங்க, மாடுகள ஓட்டியா' என்று யாராவது வந்து சொன்னால் அவ்வளவுதான். 'மாடுகளுக்கு எதுக்கு ஊசி, அதுக்கு நோய் வந்தா என்ன பச்சிலைக் கொடுக்கணும்னு எங்களுக்குத் தெரியும் போ... போ..' என எரிச்சலாகி விடுவார். வறட்சி காலத்தில் மாடுகளுக்கு வைக்கோலோ புல்லோ இல்லையென்றால் போதும் மனுசன் ஆளாய் பறந்து எங்காவது போய் கொஞ்சம் பச்சையாவது கொண்டு வந்து சேர்த்துவிடுவார். மாடுகளுக்கும் விநாயகம் அண்ணன் மீது அப்படியொரு பாசமும், நம்பிக்கையும் இருப்பதால் இந்த நோய், பசி, வறட்சி போன்றவற்றை கண்டுகொள்ளாமல் அசைப்போட்டுக் கொண்டிருக்கும்.

இதுநாள் வரைக்கும் பாலைக் கரந்து அண்ணன் விற்றது கிடையாது. கன்றுக்குட்டிகளை அவிழ்த்துவிட்டு பாலைக் குடிக்க விடுவார். கூடவே இவரும் மண்டி போட்டு குடிப்பார். ராசாத்தியும் அசைவுகளில் கூட எதுவும் சொல்வது கிடையாது. இதுபோக எப்பவும் ஏதாவது ஒருவேலையை இழுத்துப் போட்டு வங்காச்சியாக உழைத்துக் கொண்டேயிருப்பார் இல்லை பாடல் கேட்பார்.

அதுவும் இல்லையா காட்டுக்குள் போய் மூங்கில்கள் வெட்டிவந்து அதில் புல்லாங்குழல் செய்வது இல்லை மூங்கில்களில் விதவிதமான இசைக்கருவிகள் செய்வது ஏதாவது கலைப் பொருட்கள் செய்து அதில் பாம்பு, பருந்து என பல பறவைகளை வரைவது, பறவைகளின் றெக்கைகள், பாம்பு சட்டைகளை எடுத்து வைப்பது, ஈசல்களின் றெக்கைகளை சேமித்து மூங்கில் குடுவைக்குள் போட்டு கீழ் துளை வழியே ஊதும் போது பறக்கும் றெக்கைகளைப் பார்த்து மகிழ்வது இந்தப் பொருட்களைப் பிடித்தவர்களுக்கு பரிசாக தருவது என சலிக்காமல் இயங்கிக் கொண்டேயிருப்பார்.

ஒருநாள் நடுநிசியில் குடிலுக்கு வெளியே கயித்துக் கட்டிலில், குளிருக்கு மூன்று போர்வைகள் போர்த்தி கதகதப்பாக விநாயகம் அண்ணன் தனியாக தூங்கிக் கொண்டிருக்கும் போது தூரத்தில் ஒரு பெரும் சத்தம் கேட்டிருக்கிறது, அலறியடித்து எழுந்து டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு ஓடிப்போய் பார்த்தால் யானைக் குழிக்குள் தடித்த கொம்புகளுடன் நல்ல கொழுத்த மான் ஒன்று அடிபட்டு துடித்துக் கொண்டிருக்கிறது.

இருளில் காடு உண்டாக்கிய பதட்டத்தை கட்டுப்படுத்தி தாத்தனை வேண்டிக் கொண்டு குழிக்குள் குதித்த விநாயகம் அண்ணன் கட்டிப்புரண்டு, மூச்சைப் பிடித்து அந்த மானை எப்படியோ குழியின் விளிம்பினருகே கொண்டு போக மான் நழுவி நழுவி உள்ளே விழுந்துள்ளது. ஒருகட்டத்தில் இருவரும் சோர்வாகி கிடக்க, இறுதியாக பள்ளத்தின் பக்கவாட்டில் தூக்கிவிட்டதில் மான் துள்ளிக்குதித்து வெளியே தாவி ஓடி உள்ளது.

குழிக்குள் இருந்து அடிபட்ட அசதியோடு எழுந்த விநாயகம் அண்ணனை தூர இருளில் போய் நின்று, அந்த மான் திரும்பி பார்த்துள்ளது. அதன் கண்களை உற்றுபார்த்த விநாயகம் அண்ணனுக்கு ஜவ்வாது மலையையே யாரிடமோ இருந்து காப்பாற்றியது போல அப்படியொரு சந்தோசத்தில் 'ஓடு...ஓடு' என்று சொல்ல அந்த மான் காட்டினுள் கலந்துவிட்டது. விநாயகம் அண்ணனின் மார்பில் மான் கொம்பு கீறிய ஆழமான காயங்கள் கூட சந்தோசத்தில் வலிக்கவில்லை. தனது தாத்தானை நினைத்துக் கொண்டே பெருமிதம் பொங்க தூங்கியுள்ளார்.
'அந்த இரவை என்னால் சாகும்வரை மறக்க முடியாது முத்து' என்று ஒருநாள் இரவு என்னிடம் சொன்னார்.

விநாயகம் அண்ணனிடம் பொறுமையாக கேட்டால் இப்படி நிறைய கதைகள் சொல்வார். ஆனால் அவர் சொல்லும் கதைகள் எல்லாம் பொய் என்றும் சொல்வார்கள். கதை சொல்லிவிட்டு உறங்கிப்போன விநாயகம் அண்ணனையே நான் உறங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஒருக்களித்து படுத்திருந்தவர் போர்வை விலக மல்லாக்க திரும்பி படுத்தார்.

இரண்டு அட்டைகள் மேலும் கீழும் ஊருவது போல, புடைத்த இரண்டு தழும்புகள் மாரில் இருந்தன. யானைக்குழிக்கு அந்தப்புறம் இருக்கும் கரையில் நின்று கரடிகடிச்சானை சுமந்துக் கொண்டு ஒளிரும் விழிகளில் அந்த மான் குடிலையே பார்த்துக் கொண்டிருந்தது.

- முத்துராசா குமார்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)