பதிவு செய்த நாள்

16 மார் 2018
16:46

ராத்திரி மணி எட்டு இருக்கும். “அம்மா சோறு போடு. அம்மா. பசி காதை அடைக்குது” என்று கூவிக்கொண்டே ஒரு சிறுமி பிச்சை கேட்டுக்கொண்டிருந்தாள்.

அவளின் பரிதாபமான குரலைக் கேட்டு, வீட்டின் உள்ளே இருந்து வாசலுக்கு வந்தான் பாலு. வாசல் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த சிறுமியைப் பார்த்ததும் பாவமாக இருந்தது.

அந்தச் சமயம் அவன் வீட்டில் அம்மா, அப்பா எல்லாம் வெளியூர் சென்றிருந்தனர். பாட்டியையும் காணவில்லை. அவன் உள்ளே ஓடினான். தனது ஸ்கூல் பையைத் திறந்து, அதில் சேமித்து வைத்திருந்த இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தான். ஆனால், இடையில் வந்துவிட்ட பாட்டி, அச்சிறுமியை அதட்டி உருட்டவே, அவள் அழுதுகொண்டே போய் விட்டாள்.

பாலுவுக்கும் பாட்டியைக் கண்டால் பயம், ஆகையால் கையில் வைத்துக்கொண்டிருந்த நாயணயங்களைச் சட்டென தனது டவுசர் பையில் மறைத்துக்கொண்டான். ஒன்றும் தெரியாதவன் போன்று, “என்ன ஆச்சு பாட்டி?” என்று கேட்டான். இந்தக் கேள்வியைப் பாலு கேட்கும் சமயம், அவனிடத்தில் ஆவலைக் காட்டிலும் பரிதாபம் தான் அதிகமாகக் காணப்பட்டது.

பாட்டி பொரிந்து தள்ளினார். “பிச்சை கேட்பதாக இருந்தால்.... ரோட்டில் நின்னு கேட்கணும். படி ஏறி வந்து, இதோ இந்தக் கதவுப் பக்கத்தின் நின்றுகொண்டிருந்தாள். நான் வந்து அதட்டி, விரட்டால் இருந்தால், அவள் நம் வீட்டினுள்ளேயே நுழைந்து இருப்பாள். நல்லவேளை. நான் சாமயம் பார்த்து வந்தேன்” என்றார் பெருமையாக.

இதைக் கேட்டுப் பாலுவுக்குக் கோபம் தான் உண்டாயிற்று. ஆனால் காட்டிக்கொள்ளாமல், “நீங்க கில்லாடி பாட்டி. உங்களை யாராச்சும் ஏமாத்த முடியுமா என்ன..” என்று பாட்டியின் சேவையை மெச்சிவிட்டு, தெருவில் இறங்கினான்.

இதற்உள் அந்தப் பிச்சைக்காரச் சிறுமி, தெருக்கோடியில் போய்க்கொண்டிருந்தாள். ஓடிச்சென்றான் பாலு. அவளை அணுகி, “ஏய்! இந்தாப்பா, இதை வச்சுக்கோ. ஏதாவது இட்லியோ, வடையோ வாங்கிச் சாப்பிடு” என்று கூறிக்கொண்டே, ரெண்டு ஐந்து ரூபாய் நாணயங்களையும் எடுத்துக்கொடுத்தான். அச்சிறுமியின் கண்கள் கலங்கின.

பாலு மிகவும் பரிதாபமாக, “நீ ஏன் அழுகிறாய்? உனக்கு இன்னும் ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டான்.

அழுதுகொண்டே அந்தப் பெண் கூறினாள். “எனக்கு வேறு ஒண்ணும் வேண்டாம்; நல்ல மனசோட இந்தப் புண்ணியம் பண்ணினீங்களே, இதுவே போதும், ஆனால்...” என்று கூறிவிட்டு மேலும் அழ ஆரம்பித்தாள்.

தன் பாடி திட்டியதால் மனது உடைந்திருப்பாள் என்று எண்ணிக்கொண்டான். அவள் அழுவதைப் பார்த்ததும் பலுவுக்கும் அழுகை வந்துவிடும் போலிருந்தது. மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, “உனக்கு அப்பா, அம்மா, அண்ணன், தங்கை யாரும் கிடையாதா?” என்று கேட்டான்.

பதிலுக்கு அந்தப் பெண் விக்கல்களுக்கிடையே, “எல்லாரும் இருந்தாங்க. ஆனா அவங்க என்னைத் தனியாக விட்டுவிட்டு ரொம்ப நாளைக்கு முந்திப் போயிட்டாங்க. எங்க பாட்டிதான் என்னை எடுத்து வளர்த்து வராங்க. உங்க வயசுள்ள ஓர் அண்ணன்கூட எனக்கு உண்டென்று எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க. அதனாலே உங்க பாசத்தைப் பார்த்ததும், எனக்கு பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது” என்று கூறினாள்.

பிறகு பாலுவின் தூண்டுதலின் பேரில், அந்தப் பிச்சைக்காரப் பெண் தன் பாட்டி தன்னிடம் அடிக்கடி கூறிய கதையிஐக் கூற ஆரம்பித்தாள்.

“எட்டு ஆண்டுகளுக்கு முந்தி எங்க ஊரிலே மாரியம்மன் திருவிழா நடந்தது. அதுக்கு நானும், எங்க அம்மா, அப்பா, அண்ணன், பாட்டி எல்லோரும் போயிருந்தோம். அப்போ எனக்கு ரெண்டு வயது. திருவிழா ஆத்துலே நடந்துகிட்டு இருக்கிறப்போ, ஆத்துலே எங்கிருந்தோ பெரிய வெள்ளம் வந்துடுச்சு. அந்தச் சமயம் நான், கரைமேலே இருந்த பாட்டியோட கையில இருந்தேன். ஆனால் ஜனங்க எல்லோரும் வெள்ளம் வந்துட்டதாலே பயந்து எல்லா பக்கமும் ஓடிட்டாங்க. ஆத்து வெள்ளத்துலே பல ஜனங்க அடிச்சுகிட்டுப் போயிட்டாங்க. பலர் கிடைக்கவே இல்ல. அன்னியிலேயிருந்து இன்னைக்கு வரையும் நானும் என் பாட்டியும் ஊர் ஊராகச் சுத்தி, இப்படிப் பிச்சையெடுத்துப் பிழைக்கிறோம்.” என்று கூறி, அந்தப் பெண் மேலும் அழ ஆரம்பித்தாள்.

அவள் அழுது முடிக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு, “உன் பெயரென்ன?” என்று பாலு துடிப்புடன் கேட்டான். அந்தப் பிச்சைக்காரப் பெண் “என் பேரு மனோரஞ்சிதம்” என்றால் பதிலுக்கு. இதைக் கேட்டதும் பாலுவின் முகம் பிரகாசமாகிவிட்டது. “உன் அம்மாவின் பேர் என்ன?” என்று பாலு மேலும் கேட்டான். “என் அம்மா பேரு செந்தாமரை. அவங்களால பேச முடியாது.” என்று அவள் சொன்னதும் பாலுவின் முகம் மேலும் பிரகாசமானது. அவளைத் தன்னுடன் வரும்படி அழைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினான்.

அந்தச் சமயம், பாலுவின் வீட்டில் இரவு நேரத்தில் துணைக்குப் படுப்பதற்காக வந்துகொண்டிருந்த அந்தப் பெண்மணி, பாலுவைச் சந்தித்தாள். அவனுடன் கூட இருக்கும் பெண்ணைப்பார்த்தாள். யார் என்று சைகையால் கேட்டதும், “உங்க பொண்னு மனோரஞ்சிதமேதான். பாட்டியும் இவளும் உசிரோடத்தான் இருக்காங்க” சிரித்துக்கொண்டே பாலு சொன்னான்.

மனோரஞ்சிதத்திற்கு ஒண்னும் புரியவில்லை.

“இதுதான் உங்க அம்மா! பல ஆண்டுகளுக்கு முன்னாடி ஆத்துல அடிச்சுட்டு வந்து இந்த ஊர்ல கரை ஒதுங்கினாங்க. இந்த ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து இவங்களைக் காப்பாத்தி, வீட்டுக்கு ஒருநாள் முறைவச்சு, சாப்பாடு போடுறோம். இவங்களும் தன்னால் இயன்ற வேலைகளைச் செய்வாங்க.” என்றான்.

செந்தாமரை ஆனந்தக் கண்ணீர் சொரிந்தபடி, சிறுமி மனோரஞ்சிதத்தைச் சேர்த்துக் கட்டிக்கொண்டாள். அவள் செந்தாமரையின் அரவணைப்பில் திக்குமுக்காடிப் போனாள். அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த பாலுவின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அதேசமயம் மனமும் மகிழ்ச்சியில் துள்ளியது.

மறு ஆக்கம் : பாபாவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)