பதிவு செய்த நாள்

17 மார் 2018
17:34

   பொருணையாற்றங்கரையிலே இயங்கி வரும் பைந்தமிழ் மன்றம் சார்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயற்றமிழ் வித்தகர் விருதும் 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழியும் வழங்கும் விழா நேற்று மாலை (மார்ச் 16) கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் எழுத்தாளர் செ.திவான் வரவேற்புரையாற்றினார். வாழ்த்துரை வழங்கிய கவிஞர் தங்கம் மூர்த்தி, “விருதுநகர் பேருந்து நிலையத்தில் ஒரு பூ வியாபாரி, மாலை கட்டி விற்கும் கடை வைத்திருக்கிறார். தினமும் இரவு கடையை மூடும்போது, மூன்று மாலைகளை கடையை மூடிவிட்டு வெளியே மாட்டிவிட்டுப் போவார். எதற்கு என்று கேட்டால், ‘இரவு ஊரில் எந்த மாலை கடையும் இருக்காது. இரவில் யாராவது இறந்துவிட்டால், கடையைத் தேடி வருபவர்கள் இந்த மாலையைக் கொண்டுபோய் போட உதவியாக இருக்கும்.’ என்கிறார். அதுமட்டுமல்ல மறுநாள் காலையில் அந்த மாலைக்கான பணத்தைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டார். இது அவரது வழக்கம். இந்த மாதிரியான எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களின் அறத்தையும் தனது எழுத்துகளில் பதிவு செய்வதினாலேயே எஸ்.ராவை நாம் கொண்டாடுகிறோம்.” என்று பேசினார்.

பைந்தமிழ் மன்றம் நடத்திய விழாவில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருது வழங்கியபோது
பைந்தமிழ் மன்றம் நடத்திய விழாவில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு விருது வழங்கியபோது

அவரைத் தொடர்ந்து வாழ்த்துரையில் பேசிய எழுத்தாளர் மதுரா, “நான் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே படித்துவருகிறேன். அவர் வார இதழ்களில் எழுதிய கதைகளை அப்படியே துண்டித்து பைண்ட் செய்து வைத்திருக்கிறேன்.” என்று கையில் வைத்திருந்த கதைக் காகிதங்களைக் காட்டினார். மேலும் பேசிய அவர், “புனைக்கதைகளையும் வரலாற்றையும் நாம் தனித்தனியாகப் படித்துவந்தோம். ஆனால் எஸ்.ராவுடைய சிறப்பு என்னவென்றால், கதைகளினூடே வரலாற்றுத் தகவல்களை அப்படியே பதிவு செய்துவிட்டுப் போவார். கதையின் இயல்பு மாறாமல் அதனுள் வரலாற்றைப் பதிவு செய்வது என்பது பெரிய திறன். நவீன இலக்கியத்தின் ஒரு முக்கியமான படைப்பாளியாக எஸ்.ராவை நான் பார்க்கிறேன்.” என்று பேசினார்.

நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றி வரலாற்று ஆய்வாளர் எஸ்.ஏ.பெருமாள், “வைகோவுடைய அரசியல் வாழ்க்கைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆனால், வைகோவுடைய இலக்கிய வாழ்க்கை உங்களுக்குத் தெரிந்திருக்காது. சங்க இலக்கியங்கள், திருக்குறளிலே இருந்து, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எல்லாவற்றையும் மனப்பாடமாக சொல்லக்கூடியவர். மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களை உபந்நியாசங்களை விட அற்புதமாக பேசுகிற வல்லமை படைத்தவர் வைகோ. அந்த மனப்பாட சக்தியை தமிழ்நாட்டில் நெல்லை கண்ணனிடம் பார்த்திருக்கிறேன். அதன்பிறகு வைகோவிடம் பார்க்கிறேன். அந்த அளவுக்கு கலை இலக்கியங்களிலே ஈடுபாடு கொண்டவர்.

வேலூர் சிறையில் 19 மாதங்கள் இருந்தபோது. எனக்கு ஒரு தகவல் அனுப்பினார். மா சே துங்கைப் அமெரிக்கப் பத்திரிகையாளர் எட்கார் ஸ்னோவ் பேட்டி கண்டிருக்கிறார். அது புத்தகமாக வெளியாகியிருக்கிறது. அந்தப் புத்தகத்தை எனக்கு வாங்கிவந்து கொடுங்கள் என்று கேட்டிருந்தார். அந்த அளவுக்கு வாசிப்பில் ஆழம் கண்டவர் அவர்.

மனிதர்கள் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு யூத பழமொழி சொல்கிறது, ‘தொடர்ந்து படித்துக்கொண்டே இல்லாதவர்கள், கழுதைகளைப் போல திரிவார்கள்’ என்று. வைகோ தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பார். அதில் இலக்கியம் படிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.

எழுத்தாளர்கள் தொடர்ந்து வறுமையிலேயே இருந்திருக்கிறார்கள். பாரதியில் இருந்து புதுமைப்பித்தன் வரைக்கும் வறுமையிலே வாடிச்செத்தார்கள். வைகோ என்னிடத்தில் சொல்லும்போது, எழுத்தாளர்கள் வாழும்போதே கொண்டாட வேண்டும். வாழும்போதே அவர்களுக்கு எதாவது செய்தாக வேண்டுமென்று. அதன் தொடர்ச்சி தான் இந்த விழா, எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இது மிகப்பெரிய விழாவாகப் பார்க்கிறேன்.

இருபத்தியைந்து முப்பது ஆண்டுகளாக எஸ்.ராவை  நான் அறிந்தவன். ஆங்கில இலக்கியத்திலே பி.எச்டி பட்டம் பெறுவதற்குப்போய், திடீரென்று நான் தேசாந்திரியாய் போகிறேன் என்று சொல்லி, எழுத்தை மட்டுமே நம்பி வாழப்போகிறேன் என்று அதில் காலூன்றி நிற்கிறவன் எழுத்தாளர் ராமகிருஷ்ணன்.

ஜெயகாந்தனுக்குப் பிறகு இடதுசாரி இயக்கத்துக்கு  ஒரு பேச்சாளர் வேண்டுமென்று நினைத்தேன். காரல் மார்ஸ்கைப் பற்றி ஏழு மாதாகலாம் தயார் செய்து, இரண்டு மணிநேரம் ராமகிருஷ்ணன் பேசிய பேச்சை இப்போது பல கோடி பேர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்து பாரதியைப் பற்றி பேச வேண்டும் என்று அவரிடம் கேட்டேன், அதையும் ஆரணியிலே பேசி இணையத்தில் அது வலம் வந்துகொண்டிருக்கிறது. அடுத்துப் பெரியாரைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என முடித்தார்.

வைகோ பேசும்போது, “இப்படி ஒரு விழா எடுக்கவேண்டுமென்று நெடுநாள் அவா...வேட்கை. எஸ்.ஏ பெருமாள் அவர்களிடம் கூறியபோது மகிழ்ந்தார். விருது பெறுவதற்கு இசைவுதந்த எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.

எங்கள் ஊர் ஊராட்சிமன்ற நூலத்தில் இருந்து நூல்களை எடுத்துப் படித்தேன். நான் முதன் முதலில் படித்த புத்தகம் பெரிய எழுத்து மகாபாரதம். மிகச்சிறிய வயதில் படித்தேன். அதன் பிறகு என்னைக் கவர்ந்த எழுத்துக்கள் கல்கியின் எழுத்துகள். பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் படித்தேன். தமிழ் மண்ணின் மீது தமிழ் மொழியின் மீதும் தமிழ் இனத்தின் மீதும் என்னை நானே அர்ப்பணித்துக்கொள்ள காரணம் இந்தப் புத்தகங்கள் தான்.

அதன் பிறகு வடுவூர் துரைசாமி அய்யங்காரின் மர்ம நாவல்கள் படித்தேன். இந்த நூல்களை படித்துக்கொண்டு வந்த காலத்தில், அகிலனுடைய நூல்களையும் படித்தேன். டாக்டர் மு.வரதராசனாரின்  கள்ளோ? காவியமோவில் தொடங்கி கரித்துண்டு, அல்லி, நெஞ்சில் ஒரு முள், அகல்விளக்கு வரை அனைத்து நூல்களிலும் என் மனதைப் பறிகொடுத்தேன். நான் கல்லூரிக்குச் செல்கிற காலத்தில் அண்ணாவின் நூல்களைப் படித்தேன். நா.பார்த்தசாரதி அவர்கள் மணிவண்ணன் என்கிற பெயரில் எழுதிய குறிஞ்சிமலர் படித்தேன், அதைத் தொடர்ந்து பொன்விலங்கு எழுதினார். குறிஞ்சிமலர் அரவிந்தனையும், பூரணியையும் போல வாழ வேண்டும் என்று மானசீகமாக விரும்பினேன். என் மனதைக் கவர்ந்த நூல்களில் கள்ளிக்காட்டு இதிகாசம் என்னைப் புரட்டிப் போட்டது.

எஸ்.ராமகிருஷ்ணனின் நூல்களைச் சொல்ல வேண்டுமென்றால், நடந்துசெல்லும் நீரூற்று, பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, மழை மான், பால்ய நதி, நீரிலும் நடக்கலாம், அப்போதும் கடல் பார்த்துக்கொண்டே இருந்தது,வெய்யிலைக் கொண்டுவாருங்கள், காட்டின் உருவம், உரையாடும் தாவரங்கள், குதிரைகள் பேசமறுக்கின்றன, நகுலன் வீட்டில் யாரும் இல்லை, தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள், சுலபமாக புத்தன் ஆகலாம் இவையெல்லாம் கதைகளின் தொகுப்பு.

அடுத்து கட்டுரைகளின் தொகுப்பு, அவன் இரவிலும் விழித்துக்கொண்டே இருக்கிறான். விழித்துக்கொண்டே இருக்கும் இரவு, காற்றில் யாரோ நடமாடுகிறார்கள், கதாவிலாசம், சித்திரங்களின் விசித்திரங்கள், கலீலியோ மண்டியிடவில்லை, பிகாசோவின் கோடுகள்,  எனதருமை டால்ஸ்டாய், நிலம் கேட்டது கடல் சொன்னது. நாவல்கள், உப பாண்டவம், யாமம், நெடுங்குருதி, சஞ்சாரம், இடக்கை, புதின்.

உலக இலக்கியப் பேருரைகள், ஹோமரின் இலியட், ஷேக்ஸ்பியரின் மில்டன், டால்ஸ்டாயின் அன்னாகரீனா, தாஸ்தோவஸ்கியின் குற்றமும் தண்டனையும், எர்னெஸ்ட் ஹெம்மிங்வேயின் கடலும் கிழவனும், மாசோவின் ஜென் கதைகள், 1001 அராபிய இரவுகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். நாடகங்கள், சிறுவர் கதைகள் என இலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளையும் தேடித்தேடி எழுதுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

தேசாந்திரியைப் படிக்கும்போது, மகாபாரதத்தில் எனக்குத் தெரியாத, எனக்குப் பிடிபடாத பல விஷயங்களைப் தெரிந்துகொள்ள நேர்ந்தது.” என்று மகாபாரதக் கதையை முழுக்கச் சொல்லி முடித்தார். பிறகு உலக இலக்கியப் பேருரைகளில் உள்ள அனைத்துக் கட்டுரைகளைப் பற்றியும் ஓர் ஆய்வுரையாகப் பேசினார். மேலும் உப பாண்டவம் போல, சிலப்பதிகாரம் - மணிமேலை ஆகிய இரட்டைக் காப்பியங்களையும் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து ஏற்புரையாற்ற வந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், “எத்தனையோ மேடைகளில் எத்தனையோ பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கிறேன். ஆனால், இந்த விழாவும் விருதும் என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமானது. இந்த விருதுகொடுத்து என்னை மட்டுமல்ல, நவீன தமிழ் இலக்கியத்தை அங்கீகரிப்பதாக நினைக்கிறேன். இந்த விருது அரசியலுக்குப் அப்பாற்பட்டது என்று சொன்னார்கள். ஆனால், நான் இல்லையென்றே சொல்வேன். இந்த விருது இலக்கியத்தையும் அரசியலையும் ஒன்று சேர்க்கிற ஓர் அரசியல். எல்லாவற்றையும் தாண்டி, இன்று வருகிற மதவாதத்திற்கு எதிராக இலக்கியத்தை நாங்கள் தூக்கிப்பிடிப்போம் என்கிற அரசியல் இது. இந்த அரசியலுக்கு எழுத்தாளராகிய நாங்கள் எல்லோரும் உறுதுணையாக இருப்போம் என்பதை நான் இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

என்னுடைய ஆசான் எஸ்.ஏ.பெருமாள் இங்கே இருக்கிறார் என்பதே எனக்குப் பெரிய மகிழ்ச்சி. நான் இங்கே இருப்பதற்கு அவர்தான் காரணம். மற்றும் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.

ஒரு எழுத்தாளனிடம் இருப்பது வெறும் சொற்கள். ஈராயிரம் ஆண்டுகளாக என் முன்னோர்கள் கொண்டுவந்து சேர்த்திருக்கிற இந்த இலக்கியத்தில் நானும் ஒரு புள்ளி. அவர்கள் விட்டுச்சென்ற பணியைதான் நான் செய்கிறேன். பல நேரங்களில் நான் எழுதும்போது சொற்கள் கிடைக்காது. நான் என் முன்னோர்களிடமிருந்து தான் அந்தச் சொற்களைப் பெறுகின்றேன். என் எழுத்தில் புதுமைபித்தன் தெரிகிறார், மெளனி தெரிகிறார், அழகிரிசாமி தெரிகிறார், சங்க இலக்கியம் தெரிகிறது என்று சொன்னால் நான் பெருமைபடுகிறேன். என் தாத்தனுடைய சாயல் என் எழுத்தில் இருப்பதில் தவறில்லை.

நான் சிலப்பதிகாரத்தை கதையாக எழுதவேண்டுமென்று  பற்றி வைகோ சொன்னார். நான் கடந்த பத்து வருடங்களாக அந்தப் பணியைத்தான் செய்துவருகிறேன். அதுகுறித்த ஆய்வுகளையும் பயணங்களை மேற்கொண்டு தகவல்களைச் சேகரித்து வருகிறேன். அது வெறும் இலக்கியம் அல்ல. தமிழ் மக்களின் வாழ்க்கையினுடைய சாட்சியங்கள் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டி வருகிறேன்.” என்று பேசினார். விழாவின் நிறைவாக சி.ஏ.ஆர்.சண்முக சிதம்பரம் நன்றியுரையாற்றினார்.

- கவிமணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)