பதிவு செய்த நாள்

18 மார் 2018
12:35

நான் முதன்முதலாக
என் மேஜை இழுப்பறையை 
உங்களுக்குத் திறந்து காட்டுகிறேன்
அங்கிருக்கும்
என் போன்சாய் காட்டை

நெடுங்காலமாக 
உருவாக்கப்பட்டது 
இந்த போன்சாய் காடு

ஒரு காட்டை உருவாக்குவதற்கான
இரத்த ஓட்டமுள்ள மண்
எங்குமே இருக்கவில்லை

வீடு திரும்பிய குழந்தைகளின்
‘ஷூ’க்கள் உள்ளிருந்து
அதைச் சிறுகச்சிறுகச் சேகரித்தேன்

எளிய மற்றும் அசாதாரண
மரங்கள் செடிகளின் 
எண்ணற்ற போன்சாய் வடிவங்கள்
நிறைந்தன காட்டில்

பின்னும் 
காடு கணிவிழிக்கவில்லை

பறவைகளையும்
மிருகங்களையும்
கொண்டு வந்தேன்

பறவைகள்
கண்ணுக்குத் தெரியாத அளவு
சிறியனவாகி விட்டபோதும்
பழைய குரல்களிலேயே 
பாடிக் கொண்டிருந்தன

ஒரு முறை
தப்பிப் போய்விட்டது
ஒரு போன்சய் காண்டாமிருகம்
மூன்று நாட்களுக்குப் பின்
அதை ஓர் எறும்புப் புற்றில்
கண்டுபிடித்தேன்

என் கானகவாசிகள்
நீரின்றி
தாகத்தில் சாகத் தொடங்கின
உலகத்தின் எல்லாத் தண்ணீரும்
கண்ணீர் உப்பாகவே இருந்தது

நிராதரவின் முடிவில்
வெறிகொண்ட முத்தங்களது
உமிழ்நீரிலிருந்து உருவாக்கினேன்
என் போன்சாய் நதியை

காற்றின்றி சூன்யத்தில் விறைத்துக் கிடந்தது
என் கானகம்

இக்காற்றிலிருந்து
எண்ணற்ற பெருமூச்சுகளில்
ஒரேயொரு பெருமூச்சைப் 
பிரித்தெடுத்தேன் 

அது புயலாக உலுக்குகிறது
என் காட்டின் மரங்களை 
ஒரு காட்டை 
எத்தனையோ விதங்களில்
நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது

காட்டுத் தீ எரியும்
போன்சாய் மலைகள்...
இரவில்
போன்சாய் யானைகள்
தண்ணீர் குடிப்பதைப் பார்க்க
போன்சாய் நிலவு...

போன்சாய் காடுகள்
கையடக்கமானவை
பாதுகாக்க ஏற்றவை

பிரம்மாண்டமானவைகளை
நம்மால் பாதுகாக்க முடியாது
அவை நம்மைப் பொருட்படுத்துவதுமில்லை
நம் அக்கறைகளை ஏற்பதுமில்லை

அவை நம்மை அச்சுறுத்துகின்றன

போன்சாய் காடுகளோ
பலவீனமானவை
நம்மைச் சார்ந்திருப்பவை
நம்மால் வெற்றி கொள்ளப்பட்டவை

அவற்றை
நம் தேவைகளுக்கேற்ப
உருவாக்கலாம்

கண்ணாடி பெட்டிகளில்
வைத்து விற்கலாம்

மேலும்
போன்சாய் ஒட்டகங்களுள்ள
போன்சாய் பாலைவனங்கள்...

போன்சாய் திமிங்கலங்கள் உள்ள
போன்சாய் கடல்கள்...

போன்சாய் மனிதர்கள் தோன்றி
அவற்றிற்குள் நுழையும் வரை
அபாயம் ஏதுமில்லை.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)