பதிவு செய்த நாள்

22 மார் 2018
20:17
வேப்பமர ஸ்டாப் வளைவு - முத்துராசா குமார்

  வினோத்தை அவனது போனில் பிடிப்பது என்பதே கொஞ்சநாட்களாக கடினமாகி விட்டது. நேற்றிரவு ஒன்பது மணி போல வினோத்தின் மொபைல் எண் சுவிட்ச் ஆஃப்பில் இருக்க, வேறொருவரிடம் எனது போன் நம்பரை சொல்லி கூப்பிடச் சொல்லியிருக்கிறான்.

ரிங்க் கேட்பதற்குள் வண்டியில் வந்த ஒருவன் வினோத்தை அழைக்க, எனக்கு வினோத்திடம் இருந்து வரவேண்டிய கால் வரவில்லை. அடித்த சிகரெட்டை நண்பர்களிடம் பாதியில் கொடுத்துவிட்டு நீண்ட யோசனைக்கு பிறகு வண்டியில் ஏறி மூன்றாவது ஆளாக உட்கார்ந்து போயிருக்கிறான் வினோத்.

போகும் வழியில் அருணைப் பார்த்து கைகாட்டி சிரித்துவிட்டு 'வந்துறேன்டா' என்று போயிருக்கிறான். அருண் போன் பேசிக் கொண்டே அவனைச் சத்தம் போட்டு கூப்பிடுவது எனக்கு போனில் தெளிவாக கேட்டது. அருணோடு போனில் நான்தான் பேசிக்கொண்டு இருந்தேன்.
'வேப்பமர ஸ்டாப் கிட்ட வினோத்து போயிட்டு இருக்கான் முத்து'
'சரி அருணு வினோத்த கூப்பிட சொல்லுங்க' என போனை வைத்துவிட்டு அறைக்கு நடந்து சென்றேன். சென்னையில் ஊரின் ஞாபகங்கள் இல்லாமல் ஒருநாள் கூட எனக்கு முடிவடையாது. அதுவும் வினோத்தும் நானும் ஆலங்கொட்டாரம் பள்ளியிலிருந்து நண்பர்களாகி, அதன் பிறகு நட்பு படைகளாகி சுற்றிய கதைகளை சொன்னவர்களிடமே கூட திரும்பத் திரும்பச் சொல்லுவேன்.

நானும் வினோத்தும் ஊருக்குள் நேரம் காலம் பார்க்காமல் நின்ற இடத்திலேயே நின்று மணிக்கணக்கில் பேசி சிரிப்பதைப் பார்த்து நிறைய பேர் கிண்டல் செய்வார்கள். அதுவும் அவனுடன் பேசி சிரிக்க இடம் பொருள் காலமெல்லாம் கிடையாது. சிரித்து சிரிக்க வைத்து வாழ்வின் பெரும் கஷ்டங்களையும், குழப்பங்களையும் எளிதாக தூக்கிப் போடும் அசால்ட்டு அன்பன். அப்படியாப்பட்ட இடங்களில் சோழவந்தான் வேப்பமர பஸ் ஸ்டாப்  தவிர்க்க முடியாத ஒன்று. பெயர் பலகைகள், நிழற்குடைகள் என்று எதுவுமே இல்லாமல் ஒரு மரத்தை மட்டும் வைத்து காலம் காலமாக ஒரு இடத்தின் பெயரை சந்ததி கடந்தும் கடத்த முடியுமென்றால் அந்த இடம் வேப்பமர ஸ்டாப் வளைவுதான். காலப் போக்கில் அந்த மரமும் இல்லாமல் பேருந்து நிறுத்தங்களும் இல்லாமல் ஆக்கப்பட்டாலும் எங்களுக்கு அந்த இடம் என்றைக்கும் வேப்பமர ஸ்டாப்தான். இப்படி ஊருக்குள் இருக்கும் பல இடங்களில் வேப்பமர ஸ்டாப் வளைவு எங்கள் வாழ்வில் நன்கு நெருக்கமான இடமும் கூட.

நாங்கள் வளர வளர கூடவே அந்த வேப்பமரமும் அதன் பிள்ளைகளும், நிழலும் இன்றும் பிறந்து வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. சோழவந்தானுக்கு பெரும் அடையாளம் என்பதைத் தாண்டி சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களுக்கு ஒரு பெரிய நுழைவுவாயில்தான் வேப்பமர ஸ்டாப் வளைவு. முதன் முதலாக பேருந்தில் ஏறி மதுரையோ இல்லை வேறு ஊர்களுக்கோ செல்லும் போது அந்த வளைவைத் தாண்டினாலே நமது ஊரை விட்டு வேறு எங்கேயோ போகிறோம் என்ற பதட்டம் உருவாகும். அதே போல அந்த வளைவில் பேருந்து நுழைந்தால் தான் நமது ஊருக்கு வந்துவிட்டோம் இனி நமக்கு எதுவும் நடக்காது என மனதுக்குள் தோன்றும்.

ஒரே நேரத்தில் இரண்டு பெரிய லாரிகள் போகும் அளவிற்கு பரப்பளவு கொண்ட அந்த வளைவில் காலையை விட மாலையிலும் இரவிலும்தான் அந்த இடமே மக்கள் கூடுமிடமாக இருக்கும். டீக்கடை, பலகாரக்கடை, ஒயின்ஷாப், பெட்ரோல் பங்க் போகும் வழி, சம்பளம் பிரித்தல், சின்ன சண்டையிலிருந்து பெரிய பெரிய பஞ்சாயத்துகள் என எப்போதும் ஜேஜேவென்று இருக்கும். பக்கத்திலேயேதான் சுடுகாடும் இருக்கிறது.

சின்ன சிராய்ப்புகளிலிருந்து நூலிழையில் உயிர் பிழைத்தது வரை வேப்பமர ஸ்டாப் வளைவுக்கு ரத்தக் காய கதைகளும் காலம் காலமாக இருந்து வருகின்றன. போதையிலோ இல்லை தெளிவிலோ வண்டியில் வேகமாய் வந்து விழுந்து வாருபவர்களைத் தூக்கிவிட்டு தண்ணீர் கொடுத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டே சலித்தும் போயிருப்பார்கள். ஊருக்குள் பாதிப்பேர் அந்த வளைவில் கொஞ்சமாவது தடுமாறியிருப்பார்கள்.

அறையை திறந்து உள்ளே நுழைந்தவுடனேயே புது எண்ணில் இருந்து கால் வந்தது 'ஹலோ, யாருங்க' என்று கேட்டேன்.

'முத்து நானு ஜீவா பேசுறேன், வேப்பமர ஸ்டாப் வளைவுல வினோத்து அடிபட்டு கெடக்குறான்டா. அடையாளம் தெரியல பக்கத்துல போய் பார்த்த பின்னாடிதான் தெரிஞ்சது நம்ம வினோத்துன்னு, தலையில சரியான்ன அடி. ஜி.ஹெச்சுக்கு தூக்கிட்டு போயிருக்காங்க' என்று கடகடவென அவன் சொல்லி போனை வைத்தவுடன், எனக்கு உடலே நீரின்றி வறட்சியாகி படபடக்கத் தொடங்கியது. வினோத்துக்கு கூப்பிட்டேன் வழக்கம் போல் சுவிட்ச் ஆஃப்.

கொடுத்துவிட்டு போன சிகரெட் கரைவதற்குள் அவன் சுயநினைவு இழந்து மூளையில் பலத்த அடியோடு ஆஸ்பத்திரியில் கிடந்திருக்கிறான். 'மதுரைக்கு கொண்டு போனாதான் காப்பாத்த முடியும்' என்ற சொன்னவுடன் மதுரை பெரியாஸ்பத்திரிக்கு வீட்டில் இருந்தவர்களும், நண்பர்களும் தூக்கிக் கொண்டு ஓடியிருக்கிறார்கள். 'ஒருத்தன் சின்ன அடின்னு சொல்றான், ஒருத்தன் காப்பாத்த முடியாதுன்னு சொல்றான்' யார் சொல்வதை நம்புவது என்று தெரியாமல் ஊரிலிருந்த எல்லோருக்கும் போன் செய்து பதறிக் கொண்டே இருந்தேன். அவன் கொஞ்சநாளில் தேறிவந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் எல்லோரும் இருந்தார்கள்.

அப்படியே என்னிடமும் சொன்னார்கள்.

அவன் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துவந்துவிடுவான். கை கால் போனால் கூட பரவாயில்லை, அவன் வரட்டும். நாளைக்கு போய் அவனைப் பார்த்து சத்தம் போடணும் என்று அவனை அறையில் இருந்தபடியே திட்டிக்கொண்டே வலுவான நம்பிக்கையுடன் மீதி இரவையும் கழித்து, காலையில் ஊருக்கு கிளம்பும் போதுதான் 'வினோத் இறந்துவிட்டான்' என்று போன் வந்தது. வீட்டில் அவன் இரவு சாப்பிட்ட சோறு கூட சரியாக செரிமானம் ஆகியிருக்காது அதற்குள் அவனுக்கான வாழ்வே முடிந்துவிட்டது.

உடல் பிளந்த ரணங்களோடு அவன் உயிருக்குப் போராடிய தருணங்களில் என்னைப் பார்க்க நினைத்து நிச்சயம் அரைவிழிகளோடு தேடியிருப்பான், எனக்கான சொற்களையும், சிரிப்பையும் வைராக்கியமாக ஒரு இரவு முழுக்க ரத்தத்தில் முக்கி வைத்திருந்திருப்பான். இனி யாரிடம் போய் அவற்றை நான் வாங்குவது என்று இருதயத் துடிப்பு அதிகமானது. சென்னைக்கும் சோழவந்தானுக்கும் இடையேயான ஐநூறு கிலோமீட்டர் தூர இடைவெளியும்

பயண துரத்தலும் 'வினோத் இல்லை. அவ்வளவுதான்' என்ற எண்ணமும் கொஞ்சம் கொஞ்சமாக சித்தம் கலங்கிய உச்ச நிலைக்கு என்னைக் கூட்டிச்சென்று தயவுதாட்சணை இல்லாமல் வதக்கி எடுத்தது.

இறுதியாக அவனது முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை. அவன் இல்லாத மதுரையை, சோழவந்தானை அதன் சுற்றுவட்டாரத்தை எதிர்கொள்ளவே அச்சமாகவும் தனிமையாகவும் இருந்தது.

இப்பவும் அப்படித்தான். வேப்பமர ஸ்டாப் வளைவுக்கு போனேன். மிதிப்பட்ட பூக்கள் சிதறிக்கிடந்தன. விபத்தான தடங்களில் அமைதியாக இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருந்தது. சுடுகாட்டில் உடல் முக்கால்வாசி வெந்து கொண்டிருந்தது. வினோத் கரைந்து நெருப்பின் நுனியில் ஏறி அதே வழக்கமான வெகுளி சிரிப்போடு எங்கேயோ போய்க்கொண்டிருந்தான்.

எல்லாம் முடிந்து சென்னைக்குச் செல்லும் போது வளைவைக் கடக்கையில் கண்களை இறுக மூடிக்கொண்டுதான் கடந்தேன். கண்களை திறக்கவே பயமாக இருந்தது. இப்போதும் கண்களை மூடினால் வளைவின் நினைவுகள் பலமாக திறந்துகொள்கிறது. கண்களைத் திறந்தால் வளைவின் காட்சிகள் துரத்துகிறது. இப்படியாக ஒருவருடம் கழிந்து விட்டது.

'கிடைமாட்டுக் கூட்டத்தில்
பொட்டைக் கன்று வாங்கி
வளர்க்க ஆசைப்பட்டவன்
கழுத்து மணிகளின்
சத்தங்களோடு சத்தங்களாய்
கூப்பிட கூப்பிட திரும்பாமல்
குனிந்தே போகிறான்

'தேங்காய் நார் கூடு கட்ட
தேன்சிட்டுகளுக்கு
ஒத்தாசை செய்துவிட்டு
வருகிறேன்

வறண்ட வைகையின்
கூழாங்கற்களின்
சூட்டைத் தணிக்க
ஒரு துளி செய்து
வருகிறேன்

பட்டுப் போன மஞ்சணத்திக்கு
பச்சையம் வழித்தெடுத்து
வருகிறேன்' என்று
பல காரணங்களை 
அடுக்கிக் கொண்டே
சந்திக்குமிடம் வர 
அடம் பிடிக்கிறான்

மஞ்சணத்தி மரத்தினடியில்
அவனுக்காய் காத்து காத்து
இத்துப் போய் இன்றோடு
ஒரு கோடை
ஒரு குளிர்
ஒரு மழைக்காலம்
முடிந்து விட்டது

இன்னும் கொஞ்ச நாள் 
காத்திருப்பு தான்
வரும் சித்திரைத் திருவிழாவின்
வாசத்தை எப்படியும்
மோப்பம் பிடித்து
வந்துவிடுவான்'

என்ற முதலாமாண்டு நினைவஞ்சலி எழுத்துகளோடு, இன்று வேப்பமர ஸ்டாப் வளைவில் போய் விபத்து நடந்த அதே இடத்தில் எங்களது பள்ளிச் சீருடையான வெள்ளைச் சட்டை, காக்கி கலர் பேண்ட் அணிந்து நின்றேன். பைக் ஓட்டிய ஜீவனும், நடுவில் உட்கார்ந்திருந்த ஜீவனும் உயிரோடு வேறொரு பைக்கில் போய்க் கொண்டிருந்தார்கள். அந்த வளைவும் ஒருவயது கூடுதலாகி உயிரோடுதான் இருக்கிறது.

- முத்துராசா குமார்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)