பதிவு செய்த நாள்

27 மார் 2018
13:46

 தினெட்டாம் நூற்றாண்டு நிகழ்வுகளை அறிந்துகொள்ள, ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளைப் படித்தால் போதும்! அந்த அளவுக்கு அவற்றை வரலாற்றுப்பூர்வமாக எழுதி வைத்துள்ளார். தமிழ்மொழிதவிர இதர மொழிகளையும் அறிந்தவர். அதனால், புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சுக்காரர்கள் இவரை, திவானாக அமர்த்திக் கொண்டனர். ஜோதிடவியல், வானவியல் மட்டுமன்றி சிறந்த புரவலராகவும் இருந்தார்.

ஆரம்பத்தில், பாண்டிச்சேரியில் திவானாக இருந்த அப்பாவுக்கு உதவியாக இருந்தார் ஆனந்தரங்கம். அப்போது, தினசரி நடக்கும் நாட்டு நிகழ்வுகளை நாட்குறிப்புகளாக எழுதிவந்தார். பிறகு, பிரெஞ்சு ஆளுநர் டூப்ளேயின் துபாஷியாக (இருமொழி வல்லுநர், நேரடி மொழிபெயர்ப்பாளர்) 1747இல் நியமிக்கப்பட்டார். பணியில் இருந்தபோதும், நாட்குறிப்புகளைத் தவறாமல் எழுதினார்.

அவருடைய நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் புதுச்சேரியின் நிலையைப் படம் பிடித்துக் காட்டியது. 25 ஆண்டுகள் (1736 செப்டம்பர் முதல் 1760 செப்டம்பர் வரை) எழுதிய நாட்குறிப்பில் சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள், பிரெஞ்சுப் படையின் வெற்றி, தோல்விகள், தண்டனைகள், கடல் வணிகம், வெளிநாட்டுப் பயணிகள் விவரம் உட்பட பல நிகழ்வுகள் பதிவாயின.

நாட்குறிப்புகள் எளிமையான தமிழில் உள்ளன. பல மொழிகள் அறிந்திருந்தும், நாட்குறிப்பைத் தமிழில் எழுதினார் என்பது தமிழுக்குக் கிடைத்த பெருமை. அக்காலப் பேச்சுத் தமிழ், சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணக் கூறுகள், பிறமொழிகளில் இருந்து வந்த சொற்கள், வழக்கிழந்த சொற்கள் போன்றவற்றையும் பதிவுசெய்துள்ளார் ஆனந்தரங்கம் பிள்ளை.

அவர் மறைந்து 85 ஆண்டுகளுக்குப் பிறகே நாட்குறிப்புகள் கிடைத்தன. அவற்றை பிரெஞ்சு அரசாங்கம் பிரெஞ்ச் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டது. பின்னர் ஆங்கிலத்தில் கிடைத்தது. அதற்குப் பிறகு புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் எடுத்த முயற்சியால் தமிழில் கிடைத்தது. யாரும் செய்திடாத அரும்பணியைச் செய்த ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு, வரலாற்றின் அரிய பொக்கிஷம்!
நன்றி : பட்டம் மாணவர் இதழ்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)