பதிவு செய்த நாள்

27 மார் 2018
15:35

 ருவனின் எழுத்துக்களால் என்ன செய்துவிட முடியும்? இந்தப் பூமியில் நடக்கும் அநீதிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட முடியும். அந்த மக்களில் ஒருவனை தலைவனாக உருவாக்க முடியும். அந்த தலைவனுக்கு புரட்சியின் பாதையில் மக்களின் விடுதலைக்காக போராடும் துணிவைக் கொடுக்க முடியும். இதைத் தவிர வேறு என்ன செய்ய வேண்டும் ஒருவனது எழுத்துக்கள். இந்த வரிகளை எழுதுவற்குக் காரணம், பாப்லோ நெருடா. இவரது கவிதைகளில்தான் இத்தனை வீரியமும் இருக்கிறது. பொலிவியாவில் சேகுவாராவை சுட்டுக் கொல்லும்போது அவரது கையில் இருந்த இரண்டு புத்தகங்களில் ஒன்று பாப்லோ நெருடாவினுடையது.

1904ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி சிலி நாட்டில் பாரல் என்ற ஒரு கிராமத்தில் பிறந்தார் பாப்லோ நெருடா. அவருக்கு பெற்றோர்கள் இட்ட பெயர் ‘ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ’. ஆனால் அவரது பெயரை பாப்லோ நெருடா என்று மாற்றிக்கொண்டார். அதற்குப் பின்னால் ஒரு கவிதை இருக்கிறது.

ஆம், செக்கோஸ்லேக்கியா நாட்டின் புரட்சிக் கவிஞர் நெருடா, ஒரு கட்டுரையில் ‘‘நாட்டில் குற்றம் நடப்பதைக் கண்டு ஒதுங்கி நிற்பவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள். குற்றம் கண்டு கொதிப்பவனுக்கு எதுவும் சாத்தியமே. அவனால் நாட்டையே தட்டி எழுப்ப முடியும்’’ என்ற இந்த வரிகள் ரிக்கார்டோவின் உடம்பில் மின்சாரத்தைப் பாய்ச்சியதுபோன்ற ஒரு உணர்வை தூண்டியது. அது முதலே, அந்த அந்தக் கவிஞரின் மீது கொண்ட பற்றால், தன் பெயரையும் பாப்லோ நெருடா என்று மாற்றிக் கொண்டார்.

பாப்லோ நெருடா பிறந்த ஒரு மாதத்திலேயே, அவரது தாய் இறந்துவிட்டார். சிறுவயதில் இருந்தே வளர்ப்புத் தாயிடம்தான் வளர்ந்தார். வளர்ப்புத் தாய் தன் சொந்த மகனை விட நெருடாவிடம் அதிகம் அன்பு செலுத்தினார். நெருடா தனது எட்டு வயதில் எழுதிய முதல் கவிதை தனது வளர்ப்பு தாயைப் பற்றிதான்.

அதன் பிறகு 1923ம் ஆண்டு அவரது 15ம் வயதில் ‘மழை எங்கே பிறந்ததோ’ என்ற முதல் கவிதைத் தொகுப்பை வெளிட்டார். அதன் பிறகு தனது தந்தையின் மீதான் அச்சத்தினால் சொந்தப் பெயரில் அந்த 19ம் வயதில் ‘இழந்த காதல்’ என்ற மற்றொரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இந்த கவிதை தொகுப்பு பரவலாக பேசப்பட, அடுத்த ஆண்டே ‘இருபது காதல் கவிதைகளும் & ஒரு நிராசைப் பாடலும்’ என்ற அவரது கவிதைத் தொகுப்பு பிரபலமாக பேசப்பட்டது. ஸ்பானிய மொழி பேசும் மக்களிடையே பெரும் பெயர் அவருக்கு கிடைத்தது.

புகழ்பெற்ற கவிஞராகிய பிறகு, அவருக்கு பதவி தேடி வந்தது. சிலியின் வெயியுறவுத் தூதராக ஸ்பெயின் நாட்டில் நியமிக்கப்பட்டார். ஸ்பெயின் நாட்டில் நடந்த உள்நாட்டு கலவரத்தில், புரட்சிப் படையினருக்கு கம்யூனிசத்தைக் கற்றுக் கொடுத்தார். உள்நாட்டில் புரட்சியைத் தூண்டியதாக ஸ்பெயின் நாடு அவரை வெளியேற்றியது. தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய நெருடா, தனது நாட்டிலேயே முதாலித்துவம் கோலோச்சுகிறதே என்று கொதித்தெழுந்தார். ‘‘நமது நாட்டை அமெரிக்காவுக்கு விற்றுவிட்டார்” என சிலி நாட்டு அதிபருக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார். தொடர்ந்து தனது கவிதைகள் மூலமாக தனது எதிர்ப்புகளைத் தெரிவிக்க ஆரம்பித்ததுமே, சிலி நாட்டு அரசாங்கம் ‘உள்நாட்டில் கலவரத்தைத் தூண்டுகிறார்’ என்று குற்றம் சுமத்தி அவரை கைது செய்ய முனைந்தது. இதை அறிந்த நெருடா, சிலியில் இருந்து வெளியேறி, ரஷ்யா, கியூபா, பொலிவியாவில் நடந்த புரட்சிப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தூதராக இலங்கை, ரங்கூன், சிங்கப்பூர், அர்ஜென்டினா, பாரீஸ் போன்ற நாடுகளில் பணிபுரிந்திருக்கிறார். எந்த நாட்டுக்குத் தூதுவராக சென்றாலும் அங்கே இலக்கியவாதிகளைத் தேடி நட்புகொள்வார். 1971ல் பாரீசின் தூதுவராக இருந்தபோது அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சிலி நாட்டில் 1973ம் ஆண்டு ராணுவப் புரட்சி நடந்தது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர்களும், ராணுவத்திற்கு எதிராக செயல்பட்ட ஆயிரக்கணக்கான மக்களும் கொல்லப்பட்டனர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட பாப்லோ நெருடா புதிய ராணுவ அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக கொதித்தெழுந்தார். விமர்சனம் செய்தார். அதனாலேயே அவருக்கு மருத்துவ வசதிகள் தடுக்கப்பட்டன. அவரை கைது செய்து வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டு எந்த மருத்துவமும் செய்யாமலே அவர் மரணம் அடைந்தார் என்பதைவிட, கொன்றுவிட்டனர் என்றே சொல்லலாம்.

அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் கலந்துகொண்டனர். அவர் எழுதிய ‘குற்றம் கண்டு கொதிப்பவனுக்கு எதுவும் சாத்தியமே’ என்ற அவரது கவிதைகள் விண்ணைப் பிளக்கும் அளவுக்கு ஊர்வலத்தில் உச்சரிக்கப்பட்டன. மக்களின் ரத்தம் கொதித்து. கோபம் கொண்டு கொதித்தெழுந்த மக்கள், ராணுவ ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்தனர். பாப்லோவின் இறுதி ஊர்வலமே ராணுவத்திற்கு எதிரான புரட்சியாக மாறி சிலி நாட்டி விடுதலைக்கு வித்திட்டது.

- கவிமணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)