பதிவு செய்த நாள்

31 மார் 2018
16:56

மிழ்நாட்டில் தமிழுக்கு சேவை செய்த தமிழறிஞர்கள் பலரைப் பற்றி இங்கே படித்திருக்கிறோம். ஆனால், தமிழர்களின் இன்னொரு தாயகமாக இருக்கிற ஈழத்தில் இருந்த ஒருவர் தமிழுக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்திருக்கிறார். அவர்தான் தனிநாயகம் அடிகளார்.

இலங்கை தீவில் உள்ள யாழ்பாணத்தில் பிறந்த தனிநாயகத்தின் இயற்பெயர் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு. ஆனால், தமிழின் மீது கொண்ட பற்றினால், தனது பெயரை சேவியர் எஸ் தனிநாயகம் என்று மாற்றிக் கொண்டார். தனது தொடக்க கல்வியை புனித அந்தோனியார் கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை யாழ்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிலும் பயின்றார். கொழும்பில் உள்ள புனித பேர்னாட் மறைப்பள்ளியில் சேர்ந்து இறையியல் கல்வி பயின்றார். தமிழ் மீது பற்று கொண்டிருந்தாலும் இவருக்கு ஆங்கிலம், லத்தின், இத்தாலியம், பிரெஞ்சு, ஜெர்மன், ஜாப்னிஷ், போர்ச்சுக்கீசியம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். மேலும் உருசியம், கிரேக்கம், இபுரு, சிங்களம் ஆகிய மொழிகளிலும் புலவராகத் திகழ்ந்தார். மேற்கூறிய மொழிகளில் சரளமாக உரையாடவும், சொற்பொழிவாற்றும் அளவுக்கு வல்லமை படைத்தவர்.

திருவனந்தபுரத்தில் பணியாற்றியபோது 1934 - 1939ம் ஆண்டு வரை ரோம் நகரில் வாட்டிகன் பல்கலைக்கழகத்திற்கு ‘தி கேர்த்தாகினியன் கிளெர்ஜி’ என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையினை எழுதி இறையியல் தத்துவத்தில் பட்டம் பெற்றர். இவர் சமர்பித்த ஆய்வுக் கட்டுரை புத்தகமாகவும் வெளியாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியில் வடக்கன்குளம் என்னும் ஊரில் உள்ள புனித தெரேசா பள்ளியில் 4 ஆண்டுகள் துணைத் தலைமை ஆசிரியராக பணியாற்றி இருக்கிறார். முறையான தமிழைக் கற்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு இங்கேதான் தோன்றியது. பண்டிதர் குருசாமி சுப்பிரமணியம் என்பவரிடம் தமிழ் பயில ஆரம்பித்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார்.

இளங்கலைப் படிப்பில் இவரது தமிழ் ஆர்வத்தைப் பார்த்து வியந்துபோன பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரத்தினசாமி மற்றும் மீனாட்சி சுந்தரனாரும், இவரை நேரடியாக முதுகலைப் படிப்பில் சேர அனுமதித்தனர். முதுகலைப் பட்டத்தில் சங்க இலக்கிய ஆய்வுகள் செய்து சிறந்த மாணவராக தேர்ந்தார். இதில் இவர் செய்த முதல் தமிழ் ஆய்வே, இவரை ஆய்வுத்துறைக்கு இட்டுச்சென்று உலகத் தமிழாய்வு வரை கொண்டு சென்றது.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் விரிவுரையாளராக பணியாற்றிய போது தமிழ் இலக்கியம் வழியாக கல்வியியல் என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்பித்து இரண்டாவது முறையாக கல்வியியலில் முனைவர் பட்டத்தினையும் பெற்றார். மலாய் பல்கலைக்கழகத்தில் இந்திய துறையின் தலைவராகவும் தமிழ்த் துறையின் பீடாதிபதியாகவும், தமிழ் பேராசிரியராகவும் பணியாற்றினார். அதில் இருந்து நீங்கியவுடன் பாரீஸ் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியாரக பணியாற்றியுள்ளார். தூத்துக்குடியில் பணியாற்றியபோது, தமிழ் இலக்கிய கழகம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி, தமிழ் கல்சர் என்ற ஆகிய இதழை தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் இருந்தார். இந்த இதழ் அமெரிக்க ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள்வரை சென்றது.

மேலும் சென்னையில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் அமைப்பை உருவாக்கி முதல் தமிழாராய்ச்சி மாநாட்டினை தொடர்ந்து மலேசியாவிலிருந்து உலகத் தமிழ் ஆய்வு மையத்தின் சார்பாக ஜர்னலிசம் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ் என்னும் ஆங்கில இதழின் ஆசிரியராக சிறிது காலம் பணியாற்றினார். மேலும் ஜப்பான், சிலி, பிரேசில், பெரு, மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழின் பெருமைகள் பற்றி சிறப்புரையாற்றி இருக்கிறார். அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியராகத் தமிழ்ப்பாடம் நடத்தியுள்ளார்.

1963ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலத்திடம் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் தனிநாயகம் அடிகளார் உலக நாடுகளில் உள்ள தமிழறிஞர்கள் யாவரையும் ஒன்று திரட்டி ஒரு குழுவாக அமைத்து தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்தும் யோசனையை முன்வைத்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. அதன்பின்றர் அவரே அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளைத் தொடங்கினார். தாமே முன்னின்று உலக அளவில் தமிழாராய்ச்சி மாநாட்டினை நடத்த வேண்டும் என்று உறுதிபூண்டார்.

அதன்பிறகு மொத்தம் 26 தமிழறிஞர்கள் சேர்ந்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை 1964ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி துவக்கி வைத்தனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடர்ச்சியாக எட்டு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை பல உலக நாடுகளில் நடத்தப்பட்டது. தனிநாயகம் அடிகளார் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மாநாடுகள் நடைபெற்றன. முதல் மாநாடு 1966ம் ஆண்டு ஏப்ரல் 16 முதல் 23 வரை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரியில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தினார். அவர் மறைவிற்குப் பிறகு மதுரையில் நடந்த 5வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் தனிநாயகம் அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஆம் 1980ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி உடல்நலக் குறைவால் மறைந்தார்.

தமிழுக்கு தொண்டாற்றிய தனிநாயகம் அடிகளாரின் மறைவிற்குப் பிறகும், பல கவுரவப் பட்டங்கள் வழங்கியும் மணிமண்டபங்கள் அமைத்தும் சிறப்பிக்கப்படுகிறார். தமிழர்களால் என்றும் நினைவுகூறப்படும் மனிதராக இருக்கிறார்.

- கவிமணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)