சீனாவில் 1993-ஆம் ஆண்டில் பிறந்தவர் நான்சி யி ஃபேன் (Nancy Yi Fan). தனது ஏழாம் வயதில் பெற்றோருடன் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். எல்லா சீனர்களையும்போல், அவரது பெற்றோரும் தனது குழந்தை அங்கிருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என்று கருதினர்.
சக மாணவர்களைவிட ஒரு படி மேலான புரிதலோடும், கற்கும் திறனோடும் இருந்த நான்சி, சிறுகதை ஒன்றை எழுதினார். அக்கதையைப் படித்த ஆசிரியர் அது சிறப்பாக இருப்பதாக நான்சியின் பெற்றோரிடம் கூற, அவர்கள் தங்கள் மகளின் வாசிப்பு மற்றும் எழுத்தார்வத்தை ஊக்குவித்தனர். பத்து வயதான நான்சி தனது மனத்தில் தோன்றிய ஒரு கதையை, நாவலாக எழுதத் தொடங்கினார். அந்நாவலை எழுதி முடித்ததும் வாசித்துப் பார்த்த நான்சி, அதில் இடம்பெற்றிருந்த 40 கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சியவற்றை நீக்கித் தனது படைப்பைச் செம்மைப்படுத்தினார். இப்படித்தான் நான்சியின் 'Sword Bird' படைப்பு முழுமையடைந்தது.
ராபின் பறவைகள், அதன் நண்பர்களோடு சேர்ந்து பியானோ இசைத்துக்கொண்டு, சுவையான உணவை உண்டபடி தங்கள் வாழ்வை ஆடிப்பாடிக் களிக்கின்றன. அப்போது அதே காட்டில் இருக்கும் பருந்துகள் உட்பட வேறு சில பறவைகளுக்கும் இவற்றிற்கும் மோதல் உருவாகிறது. வாள் வீசுவதில் திறமை பெற்றிருந்த ராபின் பறவைகளும், அதன் நண்பர்களும் எப்படித் தங்கள் எதிரிகளை வீழ்த்தி வெற்றி வாகை சூடுகின்றன என்பதுதான் கதை.
இயல்பிலேயே பறவைகள் மீது அன்புகொண்டவர் நான்சி. அவற்றின் பண்புகளையும், தான் படித்த வீரர்களின் போராட்டங்களையும் இணைத்து இப்படைப்பை உருவாக்கினார். 2007-ஆம் ஆண்டில் வெளியான இந்நாவல் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, நான்சியை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர் அவர். இன்று அமெரிக்க இளையோர் இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளராக அறியப்படுகிறார்.
நான்சியின் பிற நூல்கள்: Sword Quest, Sword Mountain
ஜி.சரண்