பதிவு செய்த நாள்

03 ஏப் 2018
16:01

லா.ச.ராமாமிர்தம்
பிறப்பு: 1916 -அக்டோபர் 29, 
லால்குடி, திருச்சி மாவட்டம் 
இறப்பு: 2007 -அக்டோபர் 29.

ஓர் எழுத்தாளர் அவர். எப்போதும் எழுதிக்கொண்டேயிருப்பார். சிந்தனையோ சொல்லோ, விருப்பமோ தடைப்பட்டால், அந்த இடத்திலேயே பேனாவை வைத்துவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டேயிருப்பார். பிறகு நாள், மாதம், ஆண்டுகள் கடந்த பின்பு, தடைப்பட்ட சொல், அவர் மனத்தில் மீண்டும் எழுமானால், விட்ட இடத்திலிருந்து மறுபடியும் எழுதத் தொடங்குவார். அவர், லா.ச.ரா. என்று அழைக்கப்பட்ட லா.ச. ராமாமிர்தம்.

'கதை எங்கே தோன்றுகிறது, கரு எங்கே தோன்றுகிறது? என்று எனக்குத் தெரியவில்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமலும் இருக்கும். ஆனால், ஒரு கதை எழுதுவதற்காக எட்டு ஆண்டுகள் வரைக்கும் கூட செலவிட்டிருக்கிறேன்' என்கிறார்.

லா.ச.ரா.வின் தந்தையார் பெயர் சப்தரிஷி. தாயார் பெயர் ஸ்ரீமதி. தந்தை, ஊரின் பெயரை இணைத்து, லா.ச.ராமாமிர்தம் என்ற பெயரில் கதைகள் எழுதத் தொடங்கினார்.

இவரது 'எழுத்து நடை' தனித்தன்மை வாய்ந்தது. கதை சொல்வதில் புதிய நுட்பங்களைப் புகுத்தினார். மனத்தில் தோன்றும் எண்ணங்களைக் கவிதை மொழியில், கதைகளாக உருமாற்றினார்.

தனது பதினேழாவது வயதிலேயே எழுதத் தொடங்கிய லா.ச.ரா. எழுபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து எழுதிவந்தார். அவற்றில் 200 சிறுகதைகள், ஆறு நாவல்கள், ஏழு கட்டுரைத் தொகுப்புகள் அடங்கும்.

ஜனனி, பாற்கடல். அஞ்சலி, சிந்தாநதி (கட்டுரை), கல் சிரிக்கிறது, பிராயச்சித்தம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. 'சிந்தாநதி' என்கிற கட்டுரைத் தொகுப்புக்காக, லா.ச.ரா.வுக்கு 'சாகித்ய அகாதெமி விருது' வழங்கப்பட்டது. லா.ச.ரா.வின் எழுத்துகள் குறித்து, 'The Incomparable Writer Ramamirtham' என்ற பெயரில் ஆங்கிலத்தில் கட்டுரை நூல் வெளிவந்துள்ளது. எழுதுபவர்களுக்கு லா.ச.ரா. கூறும் அறிவுரை, 'ஒரு காகிதத்தில் 'நெருப்பு' என்று எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்' எழுத்தின் சக்தி அப்படி இருக்க வேண்டும் என்கிறார் .

'எழுதிப் புகழடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனால், எழுதாமல் இருக்கவும் முடியவில்லை. ஆரம்பத்தில் குடும்பத்துக்கு வருமானம் தேவையாக இருந்தது. அதற்காக எழுதினேன். பிறகு பணத்தின் மீதான ருசி போய்விட்டது. ஆனாலும், நான் எழுதிய எழுத்து எதுவும் வீணாகவில்லை' என்பது தன்னைப் பற்றி அவர் செய்து கொள்ளும் விமர்சனம். தான் பிறந்த மாதம், தேதியிலேயே அவர் மரணமும் நிகழ்ந்தது.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)