பதிவு செய்த நாள்

06 ஏப் 2018
16:11

ரு மொழியானது தனக்குள்ளாகவே சொல்வளம் மிகுந்திருப்பது. அதிலும் நம் தமிழைப்போன்ற தொன்மையான மொழியில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. தமிழில் மூன்று இலட்சம் முதல் ஆறு இலட்சம் வரையிலான சொற்கள் இருந்தன என்கிறார்கள். ஆனால், தமிழ் மொழியகராதிகளில்கூட அறுபதாயிரம் முதல் ஒரு இலட்சம் வரையிலான சொற்கள்தாம் பட்டியலிடப்பட்டுள்ளன.

இன்றைக்கு ஆங்கிலம் எப்படித் தமிழோடு தொடர்ந்து கலந்து வருகிறதோ அவ்வாறே சமஸ்கிருதம் எனப்படும் வடமொழியும் உருதும் தொடர்ந்து கலந்தன.

இன்றைக்குத் தமிழில் கலந்துள்ள ஆங்கிலச் சொற்களை எளிதில் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். காபி, டீ, பஸ், ஸ்கூல், சைக்கிள் என்று பல ஆங்கிலச் சொற்களை நாம் அன்றாடம் பயன்படுத்தினாலும், அவை ஆங்கிலச் சொற்களே என்பது, நமக்கு நன்கு தெரியும்.

காபி என்பதற்குக் குளம்பி என்றும், டீ என்பதற்குத் தேநீர் என்றும், பேருந்து, பள்ளி, மிதிவண்டி என்றும் அச்சொற்களுக்கு நேரான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தவும் அறிந்திருக்கிறோம். ஆனால், தமிழில் கலந்துள்ள வடமொழிச் சொற்களை அறிந்து களைவது நம்மில் பலருக்கும் கடினமாக இருக்கிறது.

'மன்னிப்பு' என்பது உருது மொழிச்சொல் என்று நமக்குத் தெரியவில்லை. அதற்கு நேரான தமிழ்ச்சொல் “பொறுத்தருளல்”. இதனை 'மொழிஞாயிறு' தேவநேயப்பாவாணர் ஆராய்ந்து கூறிய பிறகுதான் நமக்குத் தெரிந்தது.

அவசரம், ஆசை, ராணுவம், ஈனம், உச்சி, சங்கீதம், சஞ்சலம், சந்தர்ப்பம், சோதனை, தகனம், தந்தம், நகல், நயனம், நீதி, பரம்பரை, பலன், வசந்தம், வீரம் போன்ற சொற்கள் தமிழ்ச்சொற்களல்ல, இவையாவும் வடமொழிச் சொற்கள்.

வியப்பாக இருக்கிறதா? ஆம். அவை வடமொழிச் சொற்கள் என்பதற்கான எந்தத் தடயத்தையும் காட்டவில்லை. வடமொழியிலும் அதே பொருளில் அச்சொற்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

வடமொழிச் சொற்களில் பெரும்பாலானவை தமிழ்ச்சொற்களைப் போலவே இருப்பதால், நமக்குக் குழப்பம் வருகிறது. ஒரு மொழியில் சொற்கள் எவ்வாறு தோன்றுகின்றன, அவற்றின் தோற்றுவாயும் தென்படுகிறதா என்பதை வைத்து அச்சொல் அம்மொழிக்குரியதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள்.

தமிழில் கலந்துள்ள வடசொற்கள் யாவை? அவற்றை எப்படிக் கண்டறிவது? அவ்வாறு கண்டறிவதற்கு ஏதேனும் வழிமுறை இருக்கிறதா? ஒவ்வொரு வடசொல்லுக்கும் இணையான தமிழ்ச்சொல் என்ன? வினாக்கள் தோன்றுகின்றன. அதற்கான விடை மொழியடிப்படையைக் கற்பதில் இருக்கிறது. ஒவ்வொரு மொழியிலும் உள்ள சொற்களின் வேர்த்தன்மையை அறிவதில் இருக்கிறது. சொற்பொருள் அறிவைப் பெருக்கிக்கொள்வதில் இருக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கப் போகிறோம்.

அவசரம் = விரைவு
ஆசை = விருப்பம் / அவா
சங்கீதம் = இசை
இராணுவம் = போர்ப்படை
தகனம் = சுடுதல்
உச்சி = முகடு
ஈனம் = இழிவு
சஞ்சலம் = கலக்கம்
சோதனை = ஆய்வு
சந்தர்ப்பம் = உற்ற, உரிய நேரம்
நகல் = படி 
தந்தம் = பல் (உருதுச்சொல்)
பரம்பரை = தலைமுறை
பலன் = பயன்
வீரம் = மறம்
வசந்தம் = வேனில்
நயனம் = கண்
நீதி = அறம்

- மகுடேசுவரன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)