பதிவு செய்த நாள்

08 ஏப் 2018
14:20

 துரை பண்டைய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இஸ்லாமியர்களின் படைபெடுப்பிற்குப் பிறகு இங்கே நிகழ்ந்த பண்பாட்டுக் கலாச்சார மாற்றங்களை தனது எழுத்துகளின் மூலம் பதிவு செய்தவர் எழுத்தாளர் அர்ஷியா. இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது எழுத்துகளில் இஸ்லாமிய தாக்கம் இல்லாமல், வரலாற்றை வரலாறாக பதிவு செய்வதில் தெளிவான கருத்தியலைக் கொண்டிருந்தார். அவர் எழுதிய ஏழரைப் பங்காளி வகையறா, அப்பாஸ் பாய் தோப்பு இதனடிப்படையிலான நாவல்கள்.

வெறும் இஸ்லாமிய வாழ்வியல்களை மட்டுமே தனது எழுத்துகளில் பதிவு செய்யாமல், மதுரையின் வரலாற்றையும் கதைகளையும் எழுதுவதில் தேர்ந்தவர் அர்ஷியா. மதுரை மாடவீதிகளை அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு கட்டடங்களைப் பற்றியும், அதன் வரலாறுகளையும், இன்னார் ஜமீனுக்குச் சொந்தமான இடம் இது என்பதையும், மாரட் வீதி உருவாகக் காரணமாக இருந்த மேஸ்திரியின் யோசனைகளையும், நியூ சினிமா அரங்கையும் மாதக்கணக்கில் அங்கு ஓடின திரைப்படங்களையும், டவுன்ஹால் சாலையையும் என மதுரையின் எல்லா இடங்களின் வரலாறுகளையும் போகிற போக்கில் கதையாகவே சொல்லிவிடுபவர்.

நவம்பர் 8' டிமானிடேசனை முன்வைத்து அவர் எதியிருந்த நாவல். தன் குடும்பத்து சுபகாரியம் எப்படி டிமானிசேஷனால் திட்டமிட்டபடி நடைபெறமுடியாமல் தள்ளிப்போனது என்பதை மையக்கருவாக வைத்து அந்நாவலை எழுதியிருந்தார். அதிகாரம், கரும்பலகை, சொட்டாங்கல், பொய்க்கரைப்பட்டி, அப்பாஸ்பாய்தோப்பு, ஏழரைப்பங்காளி வகையரா என எல்லா நாவல்களுமே கிட்டத்தட்ட அப்படிச் சொந்த நிகழ்வுகளின் மையச் சரடுகொண்டு முந்தைய, சமகால வரலாற்று நிகழ்வுகளை முதன்மைப்படுத்தி கதாபாத்திர சிருஷ்டியுடன் நாவலாக்கியிருப்பார்.

சமீபமாக ஒரு மொழிபெயர்ப்பு நூலுக்கும் தயாராகிக் கொண்டிருந்தார். இப்படி தன்னுடைய விவசாயப் பணிகளுக்கு இடையில் எழுத்து தான் அவருக்கு ஊக்கமருந்தாக இருந்தது. இருந்திருக்கவேண்டும். அவ்வளவு எழுதியும் எழுத்துலகில் தனக்கான இடம் எது என்பதைத் தக்கவைக்கும் போராட்டங்கள் எதையும் அவர் செய்துகொண்டிருக்கவில்லை. விமர்சனமாக அவரை குற்றஞ்சாட்டினாலுமே கூட தான் எந்தக் கூட்டுக்குள்ளும் அடைபட்டுக் கிடக்கவேண்டி விதிக்கப்பட்டவனில்லை என்கிற சுய தெளிவு அவருக்கு இருந்தது.

அர்ஷியா வேறு கூடாரங்களின் மனிதராகிறார் என்று பிறர் குறைபட்டபோதும் நான் எப்போதுமே எந்த கூடாரங்களிலும் இல்லையே ராசா என்றுதான் தனிப்பட்ட உரையாடலில்  சொல்வார். மதுரை அர்ஷியாவை எவ்வளவு நேசித்தது என்பதை அளவிடமுடியாதுதான். ஆனால் மதுரையை அவர் எவ்வளவு நேசித்தார் என்பதை அவரின் எழுத்துகளின் வழியாகப் புரிந்துகொள்ளலாம். அவரின் மறைவு தமிழ்ப் படைப்புலகிற்குப் பேரிழப்பு.

அவர் கடைசியாக எழுதி வெளியான ஸ்டோரீஸ் புத்தகத்தில் இப்படி எழுதியிருப்பார். “யாரையும் புனிதப்படுத்தவோ அல்லது யாரையும் காயப்படுத்தவோ நான் முயலுவதில்லை. அதேவேளையில், நெஞ்சத்தின் கரைகளைத் தொட்டுவிட்டுத் திரும்பும் எண்ண அலைகளில் சில சிப்பிகளையும், சில முத்துகளையும் கொஞ்சம் கடல் நுரையையும் உங்களிடம் பகிர்ந்துகொள்வது மட்டுமே என் நோக்கம். ஆமாம் அப்படியான அப்பழுக்கற்ற மனிதர் தான் அர்ஷியா.

- அகரன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)