தலைப்பு : மெர்சோ மறுவிசாரணை
ஆசிரியர் : பிரெஞ்சிலிருந்து தமிழில் : வெ. ஸ்ரீராம்
பதிப்பகம் : க்ரியா பதிப்பகம்
விலை : 144/-

பதிவு செய்த நாள்

13 ஏப் 2018
17:17

ந்நியனை வாசித்துவிட்டு என்னை மெர்சோவாக உருவகப்படுத்திக்கொண்டு வெயில் தகிக்கும் கோடையின் பகற் பொழுதுகளில் கை விரல்களைத் துப்பாக்கியாகக் கருதியபடி கடற்கரை மணலில் பெயரற்ற அந்த அரேபியனைத் தேடி அலைந்த பொழுதுகளை நினைத்துப் பார்க்கிறேன். இருத்தலியத்துக்கும் அபத்தத்துக்கும் கிளர்ச்சிக்கும் இடையேயான இடைவிடாத உரையாடலாக காம்யுவின் வார்த்தைகளில் சிக்குண்டு, வாழ்வின் அபத்தங்களை இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறேன்.

‘அந்நிய’னைத் தொடர்ந்து ‘வீழ்ச்சி’, ‘முதல் மனிதன்’, ‘கிளர்ச்சியாளன்’ என்று நீண்ட காம்யு மீதான தேடல் வாழ்வின் அபத்தம் குறித்த தேடலாகத் தொடர்கின்றது. காம்யுவை விட்டு விலகி ஓடுவதென்பது எத்தனை முயற்சி செய்தும் இயலாத ஒன்றாகவே  இருக்கின்றது. காரணம், காம்யு எனும் வார்த்தை ஒரு தனிமனிதனையோ எழுத்தாளனையோ குறிக்கும் பெயர்ச்சொல் மட்டும் அல்ல, அது அபத்தவாதத்தின், கிளர்ச்சியின், வாழ்க்கை பற்றிய தேடலின் குறியீடு. வாழ்வின் அல்லது வாழ்க்கை என்று சொல்லப்படுவதின் அபத்தங்களை அதன் படிநிலைகளை இடைவிடாது உடைத்து விசாரிக்கும் காம்யுவின் பிரதிகள் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே நிகழும் பயணமான ‘இருப்பு’குறித்தான விசாரணைகளாகவும், அந்த இருப்பு எப்படி ஏதுமற்றதாகவே இருந்து மறைகின்றது என்பதையும் தொடர்ந்து பேசுகின்றன.  இந்த சூன்ய நிலைக்கும் கிளர்ச்சி நிலைக்கும் இடையே ஊடாடுபவையாகத்தான் காம்யுவின் படைப்புகள் இருக்கின்றன. 

கொலை என்பது சமூகக் கட்டமைப்பின்படி குற்றம். ஆனால் அதே கொலை ஓர் இடத்தில் அதாவது போர்ச் சூழலில் வீரமாகவும் குற்றமற்றதாகவும் இருக்கின்றது; இன்னும் சொல்லப்போனால் போரில் வென்றவர்களின் கொலைகள் வீரத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. அந்தக் கொலைகளைச் சமூகம் கொலைகளாய்ப் பார்ப்பதில்லை; கொலைக்காரர்கள் தண்டிக்கப்படுவதில்லை; நகைமுரணாக அவர்கள் கொண்டாடப்படுகின்றனர். ஆனால் போர் இல்லாத அமைதிச் சூழலில் ஒரு கொலை கொலையாகவும் குற்றமாகவும் கருதப்படுகின்றது; அதுவும் பல நேரங்களில் கொலை செய்தவரின் அதிகாரங்களைப் பொறுத்து அது கொலையா அல்லது இல்லையா என்று முடிவு செய்யப்படுகின்றது. அநேக நேரங்களில் அரசு செய்யும் கொலைகளைத் தண்டனை எனும் வரையறைக்குள் அணுகும் தன்மையாகவே சமூகம் கொண்டுள்ளது. கொலைச் செயலின் இம்மாறுபட்ட பார்வைகளை காம்யூ அபத்தம் என்கிறார்.

வாழ்வினை அபத்தமென்று கருதும் மெர்சோ தன் தாயின் மரணத்தை அதாவது கதறித் துடிக்கவேண்டிய செய்தியை “இன்று அம்மா இறந்துவிட்டாள்” எனும் மிக அசட்டையான வரியில் கடக்கின்றான்.  அவனது அம்மாவை வெறுக்கவில்லை அல்லது அவள் மீது எந்தக் கோபமும் இல்லை. ஆனால் அவனுக்குத் தெரிகின்றது, மரணம் இன்றியமையாத ஒன்று என்று. அதனால்தான் அவன் மரணத்தை எந்தவித அலங்காரங்களுமின்றிச் சந்திக்கின்றான். காதலும் வாழ்தலும் சாவும் எல்லாமும் அவனுக்கு ஏதுமற்றதாகத்தான் இருக்கின்றன.

வாழ்வின் அபத்தங்களை நிராகரிக்கும் மெர்சோ கொலைக் குற்றத்துக்காய் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைபடும் வேளையில் சுதந்திரத்தைத் தேடி அலைகிறான், அவனுக்குச் சிறையை விட்டு விடுதலை ஆவதென்பது சுவாசத்தைப் போல், இதயத் துடிப்பைப் போல் அடிப்படைத் தேவையாக மாறுகிறது. அதே நேரம் அவன் அபத்தத்தால் சிக்குண்டு மரணத்தின் வாசலில் நிற்கிறான்.

மெர்சோ எனும் ஒரு பிரஞ்சு அல்ஜேரியன் ஒரு அரேபியனைக் கொல்லுதல் - கொலையாக மாறுகிறது. அதே நேரம் காலனிய அரசு மெர்சோவின் மீது திணிக்கும் கொலை, சட்டரீதியான தண்டனையாக உருக்கொள்கின்றது. வேறு சமயத்தில் அதே காலனிய அரசு அல்ஜீரிய அரபிகளைக் கொல்வது கொலையாகக் கருதப்படாமல் தீவிரவாதத்துக்கு எதிரான அரசு செயல்பாடாகக் கருதுகிறது. காம்யு தன் வாழ்நாள் முழுவதும் அரசுக் கொலைகளுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தவர். அவரின் எழுத்துகள் எதைக் கொண்டும் மனிதர்கள் கொல்லப்படுவதை, குறிப்பாக அரசின் பெயரில், சட்டத்தின் பெயரில் மனிதர்கள் கொல்லப்படுவதை முற்றிலும் எதிர்க்கின்றன.  இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான பிரெஞ்ச் சமூகத்தில் காம்யுவின் இருப்பு என்பதே கிளர்ச்சியாகத்தான் இருந்தது.

தத்துவவாதி - எழுத்தாளன் எனும் இரட்டை அடையாளங்களையும் ஒன்றுசேர்த்து காப்காவைப் போல், தஸ்தாயெவ்ஸ்கியைப் போல் தத்துவ எழுத்தாளனாகத்தான் காம்யு இருந்தார். இதை காம்யு தன்னுடைய எழுத்துகளிலே குறிப்பிட்டும் இருக்கிறார். எழுத்தாளர்களிலே மிகவும் உயரிய எழுத்தாளர்கள் தத்துவ எழுத்தாளர்கள்  என்று குறிப்பிடும் காம்யு, அவர்கள் தங்கள் கருத்துகளை வாதங்களாய் முன்வைக்காமல் காட்சிகளாய் முன்வைக்கின்றனர் என்கிறார். காம்யுவின் தத்துவம் என்பது மேலே சொன்னதைப் போல் திரும்பத்திரும்ப அபத்தம் குறித்தே பேசுபவை, வாழ்வின் அபத்தம் குறித்துப் பேசுபவை.

அவர் வார்த்தைகளிலே சொல்வதென்றால் “வாழ்க்கை என்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதை அழுத்தமாக நம்புகிறேன். ஆனால் அதில் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கின்றது, அது மனிதன். ஏன் என்றால் மனிதன் மட்டுமே வாழ்வின் அர்த்தம் குறித்து வலியுறுத்தும் ஒரே உயிரினம்.”

என்னைப் போலான பலப்பல வாசகர்கள் காம்யுவின் எழுத்துகள் குறித்து இப்படியான பல ஆயிரம் பிரதிகளை எழுதிக் கொண்டாடியிருக்கக் கூடும். ஆனால் காம்யுவின் நூற்றாண்டில் யாருமே எதிர்பார்க்காதபோது ஒன்றில் “இன்னும் அம்மா உயிரோடுதான் இருக்கின்றாள்” எனும் வரியினைத் தன் கதையின் முதல்வரியாகக் கொண்டு ஒரு கதைப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. ஆம்! சார்த்தர் கூட செய்ய முடியாத அற்புதமான விமர்சனம் ஒன்றை  காமெல் தாவுத், மெர்சோவை விசாரிப்பதன் மூலம் காம்யுவைக் கேள்வி கேட்கின்றார். தாவுத் காம்யுவின் பிரதியைக் கேள்வி கேட்கும் அதே நேரத்தில்,  மெர்சோவால் கொலைசெய்யப்பட்ட பெயரற்ற அந்த அரேபியனின் குரலாக அதன் வாசகர்களிடமும் தன் கேள்வியினை முன்வைக்கிறார்.

ஒருவன் கொலை செய்யப்படுகிறான், இறந்துபோனவன் குறித்து எவ்வித அக்கறையுமற்று, அவனை மனிதன் என்று கூடக் கருதாமல் அந்தப் பிரதியின் செழிப்பான எழுத்துகளின்பால் மையலுற்று இறந்தவன் ஒரு மனிதனா என்றுகூட அறிந்துகொள்ளும் ஆர்வம் இல்லாதவர்களாகத்தான் அந்நியனின் பெரும்பான்மை வாசகர்கள் இருந்தோம். அவர்களை நோக்கித்தான் தாவுத் தன் விமர்சனத்தை முன்வைக்கிறார். இறந்தவனுக்கு ஒரு பெயரைச் சூட்டி, அவனுக்குத் தாய், தம்பி, வீடு, காதலி என்று அனைத்தையும் உருவாக்குகிறார். பெயரற்ற அந்த அரேபியனான மூசாவின் தம்பியான ஹாருனின் குரலாக ஒலிக்கிறார் தாவுத். இந்தப் புத்தகம் பற்றிய மிகச் சரியான அறிமுகமாக இந்த ஒற்றை வாக்கியமே போதும் “அவன் துப்பாக்கி வெடிச் சப்தத்தைப் பற்றிப் பேசுகிறான், ஆனால் அதைக் கவிதையைப் போல் ஒலிக்கச் செய்கிறான்.” இந்த ஒற்றை வரியைக் காட்டிலும் மேல் அதிகமான விமர்சனம் எதுவாக இருக்க முடியும்?

‘அந்நிய’னும் ‘மெர்சோ மறுவிசாரணை’யும் ஆரம்பம் முதல் முடிவுவரை ஒரே தளத்தில், ஒரே வடிவத்தில் பயணிக்கின்றன. ஆனால் இரண்டுக்குமான வேற்றுமை என்பது இரு வேறு வாழ்க்கை முறையின், கலாச்சாரத்தின், அதன் பார்வையின் வேற்றுமையாகத்தான் இருக்கிறது. காம்யு எனும் பிரஞ்சு எழுத்தாளனுக்கு அல்ஜீரியா எனும் நாடு இருத்தலியல் குறித்தான தன் விசாரணைக்கான ஒரு காட்சிக் களமாக / அமைப்பாக மட்டுமே இருக்கின்றது. அதுவே தாவுத் எனும் அரேபியனுக்கு அல்ஜீரியாவே இருத்தலியலின் கேள்வியாக இருக்கிறது. இந்த வேற்றுமையே  மெர்சோ மறுவிசாரணைக்கான கதைக்களம். இந்த இடைவெளியைத்தான் தாவுத் தன் பிரதி முழுவதிலும் விசாரிக்கிறார். இந்த இடைவெளி என்பது வெள்ளை நிறத்துக்கும் மற்ற அனைத்து நிறங்களுக்குமான இடைவெளியாக, மேற்கு நிலத்துக்கும் மற்ற நிலங்களுக்குமான இடைவெளியாக, மையத்துக்கும் விளிம்புக்குமான இடைவெளியாகவே இருக்கிறது.

காலனியர்களின் பழைய வீடுகளிலிருக்கும் கற்களை எடுத்துத் தங்களின் புதிய வீடுகளை அல்ஜீரியர்கள் கட்டுவதைப் போல் கொலைகாரனான மெர்சோவின் வார்த்தைகளைக் கொண்டு கொலை செய்யப்பட்ட தன் சகோதரனின் கதையைச் சொல்லும் ஹாருனால், எப்படி தன் சகோதரனுக்கு ஒரு பெயரைக்கூட சூட்ட முடியாமல், அவன் வெறும் நிகழ்வாக மாறிப்போனான் எனும் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெயரற்றதால் மூசாவின் சடலம்கூட அவனுக்கும் அவன் அம்மாவுக்கும் இறுதிவரை கிடைப்பதில்லை. அவன் சகோதரன் குறித்தான அழுத்தம் அவன் வாழ்க்கையுடன் எப்போதும் உடன் வருகின்றது நிழலைப் போல். அந்த நிழலை அவன் தாய் அழியாமல் பாதுகாக்கிறாள். அந்த நிழல் இறுதியில் ஹாருனினூடே கொலைக்குப் பழியாக இன்னொரு கொலை செய்கின்றது, அல்ஜீரிய விடுதலையின் ஆரம்ப நாட்களில், ஒரு பிரஞ்சுக்காரனை. இந்தக் கதைக்களத்தில் மெர்சோவின் மீதான விசாரணையாகத் தொடங்கும் பிரதி, தன்னியல்பில் விடுதலை அடைந்த அல்ஜீரியச் சமூகம், ஆட்சியாளர்கள் மீதான விமர்சனமாய் உருக்கொண்டு இருத்தலியல், அபத்தம் குறித்தான விசாரணையாக காம்யுவின் தத்துவத்துடன் ஒன்றிணைந்து முடிவுகொள்கின்றது.

தாவுத் அந்நியனையும் மெர்சோவையும் மட்டும் எடுத்தாளாமல் காம்யுவின் அநேக பிரதிகளையும் எடுத்துக்கொண்டே இந்த கதைப் புத்தகத்தை உருவாக்குகிறார். ‘வீழ்ச்சி’யில் வரும் ஓரான் நகரத்தில் இருந்தபடி அக்கதையின் நாயகனைப் போல் மதுவிடுதியில் அமர்ந்தபடிதான் ஹாருன் இந்தக் கதையினைச் சொல்கிறான். இப்படி கதை முழுவதிலும் காம்யுவும் அவரின் எழுத்துகளும் நிரம்பியே இருக்கின்றன. எழுத்துகள் முழுவதிலும் கொலை குறித்தும் மரணம் குறித்தும் அரச கொலைகள் குறித்தும் காம்யு பேசியதைப் போன்றே தாவுத்தும் கொலை குறித்து, அதன் அபத்தம் குறித்துப் பேசுகிறார். ஜான் எனும் பிரஞ்சுக்காரனை அல்ஜீரியா விடுதலை அடைந்த அடுத்த நாட்களில் ஹாருன் கொலை செய்கிறான்; தன் சகோதரனின் கொலைக்குப் பழி வாங்கவோ அல்லது தாயின் வற்புறுத்தலினாலோ அவன் கொன்று விட்டான் என்றாலும் அவன் ஒரு கொலையைச் செய்துவிட்டான்.

அதற்காக விசாரணை அதிகாரியால் விசாரிக்கப்படுகிறான். அதிகாரி அவன்மீது சுமத்தும் குற்றம், அவன் கொலை செய்துவிட்டான் என்று அல்ல, அவன் ஏன் அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதாக இருக்கின்றது. இதே கொலை காலனிய அரசின் கீழ் நடந்திருந்தால் அவன் பிரஞ்சுக்காரனைக் கொன்ற காரணத்துக்காய் உடனடியாகத் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அவன் விடுதலை அடைந்த அல்ஜீரியாவில் ஒரு பிரஞ்சுக்காரனைக் கொலை செய்கிறான். விசாரணை அதிகாரியின் கவலை எல்லாம் அவன் ஏன் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் அவன் இதே கொலையை விடுதலைக்கு முன் செய்திருந்தால் அது தியாகத்தின், வீரத்தின் குறியீடாக மாறியிருக்கும் என்பது மட்டுமே. அபத்தத்தின் வடிவங்களைப் பேசும் தாவுத் அதே இடத்தில் அல்ஜீரிய ஆட்சியாளர்கள், விடுதலைப் போராட்டம் மீதான விமர்சனத்தையும் முன்வைக்கிறார். கதை முழுவதும் ஹாருன் நாத்திகனாகவும் அனைத்து மதங்களையும் நிராகரிப்பவனாகவும், அல்ஜீரிய ஆட்சியாளர்களை - சமூக அமைப்பைக் கேள்வி கேட்பவனாகவுமே வருகிறான். ஓர் இடத்தில் அந்தக் காலத்தில் எங்கள் பெண்கள் இன்று இருப்பதைப் போல் தலையைக் கூட மூடியவர்களாய் இருக்கவில்லை என்கிறான். கதை முழுவதிலும் குடிப்பவனாக, மதத்துக்கு எதிரானவனாக இருக்கிறான்.

“சுதந்திரமற்ற இந்த உலகை அணுகுவதற்கான ஒரே வழி  உன் ‘இருப்பு’ என்பதே கிளர்ச்சியானதாக இருக்க வேண்டும்” என்ற காம்யுவின் வார்த்தைகளைக் கொண்டே தன் பிரதியின் இருப்பு என்பதே கிளர்ச்சியானதாக, ஒட்டுமொத்த இலக்கிய உலகமும் கொண்டாடிய பிரதியைக் கேள்வி கேட்பதாக, அதனூடே தன் சமூகத்தின் அடக்குமுறைகளுக்கும் பழைமைகளுக்கும் எதிரான குரலாக ஒலிக்கிறார் தாவுத்.  அதனாலே “பேசினாலும் இறக்கப் போகின்றாய். பேசவில்லை என்றாலும் இறக்கப் போகின்றாய். எனவே பேசிவிட்டுச் சாவு” என்ற அல்ஜீரிய எழுத்தாளர் Tahar Dajaout வார்த்தைகளின் வடிவமாய் நிற்கிறார் காமெல் தாவுத்.
மின்னஞ்சல்: elavenhil@gmail.com

நன்றி : காலச்சுவடு இதழ்

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)