பதிவு செய்த நாள்

17 ஏப் 2018
15:34

 றிக்கடைக்குப் போன அனாதை 
ஈமுக்கோழிகளை வாங்கி வந்து
வங்காச்சியாக வளர்த்து ஆளாக்கி 
அதில் சந்தோசமடையும் ஒருவன்
அது வாயிலேயே பிடுங்கியெறியும்
முதிர் இறகுகளுக்காக காத்திருந்தான்

அவன் நிலத்தில் தகிக்கும் வெயிலின்
நிறத்தில் அந்த இறகுகள் இருந்தன
அவற்றை சேகரித்துக்கட்டி
கல்மூங்கிலுக்குள் வைத்து எனக்கு பரிசளித்தான்

பதப்படுத்திய களிமண்ணில்
பொறுமையாக மண்குழல் ஒன்றை செய்து
இசைத்துக்காட்டி பரிசளித்தான் இன்னொருவன்
காய்ந்த மண்குழல் மேனியில்
அவனது செல்லப்பறவைக் கொத்த வைத்திருந்த
கடைசி தானியமொன்று பதிந்திருந்தது

இத்துப்போன தென்னங்கீற்று கூரையில்
எல்லாமும் புளுத்துப்போய் நீட்டிக் கொண்டிருக்கும்
வெளக்கமாறு குச்சிகளைப் போன்ற கோடுகளில்
மதுரை வீதிகளைக் கோட்டோவியமாக
வரைந்து பரிசாக்கினார் மற்றொருவர்

பிறந்து இரண்டு மூன்று நாட்களான
குட்டிநாய்களின் திறக்காத விழிகளில் தெரியும்
சிறிய ஒளியை ஒத்த
வயதான தனது விழியொளியில்தான்
அந்தக் கோடுகளைத் தீட்டியிருக்கிறார்

மூன்று பரிசுகளைப் பற்றி
நான் யாரிடமும் எதுவும் பகிரவில்லை
அவர்களிடமும் கூட
ஆனால்
இப்போதுவரை
நான் நடந்தாலும் அந்த
இறகில்தான் தத்திப் பறக்கிறேன்
உண்டாலும் அந்த தானியத்தில்தான்
பசியாறுகிறேன்
நகரில் இருந்தாலும்
அந்த கோட்டோவிய இடுக்குளில்தான்
வசிக்கிறேன்.

புகைப்படம் : நவீன் கௌதம்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)