பிறப்பு: ஏப்ரல் 20, 1939
மறைவு: ஜனவரி 6, 1997
சிவராமலிங்கம் என்னும் இயற்பெயர் கொண்ட பிரமிள், இலங்கையின் கிழக்கு மாகாணமாகிய திருகோணமலையில் பிறந்தார். இலங்கையிலிருந்தபடியே, சி.சு.செல்லப்பா நடத்திய தமிழின் முன்னோடி சிறு பத்திரிகையான ‘எழுத்து’ பத்திரிகையில் தன் இருபது வயதில் எழுதத் தொடங்கிய பிரமிள், 1969இல் சென்னை வந்தார்.
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும், பிரமிள், தமிழக எழுத்தாளராகவே அறியப்படுகிறார். டில்லி, திருவனந்தபுரம், பூதப்பாண்டி, நாகர்கோவில், மதுரை, சென்னை என பல இடங்களில் வசித்தார்.
லஷ்மி ஜோதி, இலக்குமி இளங்கோ, கௌரி, பூம் பொற்கொடி இளங்கோ, டி.சி.ராமலிங்கம், பிருமிள், பிரமீள், பிரேமிள், பிரமிள் பானு, ஜீவராம் அருப்பிருமீள், அஜித்ராம் பிரேமிள், பிரமிள் பானுச்சந்திரன், பானு அரூப் சிவராம், விக்ரம் குப்தன் பிரமிள், ராம் தியவ் விபூதி பிரமிள், தியவ் விஷ்ணுவ் அக்னி ராம்பிரமிள், அரூப் சிவராமு, ஔரூப் சிவராம், தர்மு சிவராம், தருமு சிவராமு என்று பல பெயர்களை தனக்குத்தானே சூட்டிக்கொண்டவர்.
‘கண்ணாடியுள்ளிருந்து’
‘கைப்பிடியளவு கடல்’
‘மேல்நோக்கிய பயணம்’ ஆகியன அவரது கவிதைத் தொகுப்புகள்.
மிகக்கூர்மையான விமர்சகராக அறியப்பட்டவர் பிரமிள். பல படைப்பாளிகளைத் தன் விமர்சனத்தால் செம்மையாக்கினார். தயவுதாட்சண்யமின்றி விமர்சனம் செய்யக்கூடியவர். 20ம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வெளியில் பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு வைக்கப்படவேண்டிய பெயர் ‘பிரமிள்’ .
கவிதை, சிறுகதை, விமர்சனம், ஆன்மிகம், ஓவியம், சிற்பக்கலை போன்றவற்றிலும் தன் திறமையை வெளிப்படுத்தியவர். ஆரம்பக் கல்விச் சான்றிதழ்கூட இல்லாத பிரமிள், ‘தமிழின் மாமேதை’ என்று தி.ஜானகிராமனாலும், ‘உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர்’ என்று சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர். இவரது எழுத்து நடையும், சிந்தனைப் போக்கும் மற்ற யாருடனும் ஒப்பிடமுடியாத அளவுக்கு தனித்தன்மை வாய்ந்தவை.
பிரமிளின் கவிதைகள் உணர்ச்சியின் தீவிரத்தில் அடுக்கடுக்கான படிமங்களையும், சொற்பிரயோகங்களையும் கொண்டவை. ஆரம்ப நிலை வாசகருக்கு அந்தக் கவிதைகள் பெரும் சிரமத்தைக் கொடுக்கக் கூடியவை. ஆனால், வாசிப்பில் அதிகம் ஈடுபாடு உள்ளவர்களுக்கு, பிரமிளின் கவிதைகள் அற்புதமான அனுபவத்தைத் தரும்.
பிழைப்புக்காக எந்த வேலையும் செய்யாதவர். வாசிப்பதும் எழுதுவதுமே தன் முழுநேர வேலை என்று வாழ்ந்தவர்.
‘சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது’
இவரது இந்தக் கவிதையைப் போலவே, இவரது பெயரையும் எழுதிச் செல்கிறது தமிழ் இலக்கிய வரலாறு.
- த. சங்கர்