பதிவு செய்த நாள்

22 ஏப் 2018
18:22

ழுத்தாளர் தமயந்தியின் மூன்று நூல்கள் குறித்த விமர்சனக் கூட்டம் கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்றது. மூன்று புத்தகங்கள் குறித்து வழக்குரைஞர் ஜீவலக்ஷ்மி, கல்யாண் கண்ணன், எழுத்தாளர்கள் பாக்கியம் சங்கர், லக்ஷ்மி சரவணகுமார், இயக்குனர் தாமிரா, பேராசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான ஆர்.சிவகுமார் ஆகியோர் பேசினார்.

‘இந்த நதி நனைவதற்கல்ல’ பெண்ணியக் கட்டுரைத் தொகுப்பு குறித்து பேசிய வழக்குரைஞர் ஜீவலக்ஷ்மி, “இந்தக் கட்டுரைகள் முழுக்க, வெளியே தெரியாத எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் அவர்களின் வலிகளையும் அவர்கள் மீதான எந்த அனுதாப உணர்வையும் உண்டாக்காத வண்ணம் எழுதியிருக்கிறார்.” என்று பேசினார்.

‘ஒரு வண்ணத்துப்பூச்சியும் சில மார்புகளும்’ சிறுகதைத் தொகுப்பு குறித்து பேசிய பாக்கியம் சங்கர், “இதில் இருக்கிற எல்லா கதைகளையும் இன்னும் படிக்கவில்லை என்றாலும், நான் படித்த ஐந்து கதைகளுமே என்னைப் பாதித்தது. முக்கியமாக ஒரு பெண் பத்திரிகையாளர் ஒரு பெண்ணை நேர்காணல் செய்யச் சந்திப்பது போன்ற ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதையினுள்ளேயே கிட்டத்தட்ட மூன்று நான்கு கதைகள் இருக்கின்றன. இதுவரைக்கும் இந்த மாதிரியான கதைகளை நான் படித்ததே இல்லை. எல்லா கதைகளுமே புதுமையானதாக இருக்கின்றன”. என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய லக்ஷ்மி சரவணகுமார். “கதைகள் முழுக்கவும் அன்பை விதைத்துச் செல்கிறார் தயமயந்தி.” எனப் பேசி முடித்தார்.

சில்வியா ப்ளாத்தின் ‘அதனினும் சிறப்பான உயிர்த்தெழுதல்’ மொழிபெயர்ப்பு கவிதை தொகுப்பு குறித்துப் பேசிய பேராசிரியர் ஆர்.சிவகுமார் சில்வியா ப்ளாத்தின் வாழ்க்கை குறித்தும் அவரது இளவயது மரணம் குறித்து விரிவாகப் பேசினார். மேலும் “சில்வியா ப்ளாத்தின் கவிதைகள் முழுக்க தன் வாழ்க்கையில் நடந்த விஷயங்களையே பேசுகின்றன. தனிமை, மரணம் என்று அவருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் Confessional Poetry என்று சொல்வார்கள்” என கவிதைகள் குறித்து விரிவாக உரையாடினார். 

அதே நூல் குறித்துப் பேசிய இயக்குனர் தாமிரா, “இந்தக் கவிதைகளைப் படித்து முடிக்கும்போது, சில்வியா ப்ளாத்தையும் தமயந்தியையும் வேறு வேறாகப் பார்க்க முடியவில்லை. சில்வியா ப்ளாத் அவரது வாழ்க்கையில் அனுபவித்த அத்தனை துன்பங்களையும் தமயந்தி சந்தித்திருக்கிறார். அதனாலேயே இந்தக் கவிதைகளை மொழிபெயர்க்கும் ஆர்வம் தமயந்திக்கு ஏற்பட்டிருக்கலாம்” என்று பேசினார். கடைசியாக நன்றியுரையாற்றிய தமயந்தி, “என் எழுத்துகள் மட்டுமல்ல. நானும் அன்பை ஆராதிக்கிறவள். எல்லோருக்கும் எனது அன்பும் நன்றியும்” எனப் பேசினார்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)