பதிவு செய்த நாள்

23 ஏப் 2018
11:28

டில்லியைச் சேர்ந்தவர் திவ்யஷா. 12ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதிவிட்டுக் கல்லூரியில் சேரும் கனவுகளோடு காத்திருந்தார். அப்போது தனது மனத்தில் தோன்றிய கதையை எழுதத்தொடங்க, அது ஒரு நாவலாக விரிந்தது. வெறும் மூன்றே மாதத்தில் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தின் பெயர் 'A 20 Something Cool Dude'.

திவ்யஷா எழுதிவிட்டாரே தவிர, அதை எப்படி வெளியிடுவது என்று அப்போது அவருக்குத் தெரியாது. அந்த நாவலின் சில பகுதிகளைப் பதிப்பகங்களுக்கு அனுப்புவது, காத்திருப்பது என்று சில மாதங்கள் ஓடின. இதற்கிடையில் அவர் நாவல் எழுதியிருப்பதைக் கேள்விப்பட்ட நண்பர்களும், உறவினர்களும் எழுதுவது குறித்த எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்தனர். கடைசியாக, டில்லியைச் சேர்ந்த 'லைஃபி பதிப்பகம்' (Lifi Publications) அவரது புத்தகத்தை வெளியிடச் சம்மதித்தது. புகழ்பெற்ற டில்லி புத்தகக் கண்காட்சியில் வெளியான அப்புத்தகம், சில நாட்களிலேயே வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் சிக்கல்கள், காதல், சமூக அழுத்தங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி எழுதப்பட்டிருந்த இப்புத்தகம், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன்மூலம் இந்த நாவல் உலகெங்கும் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய வெளியுறவுத்துறை நூலகங்களில் (MEA library) இடம்பெற்று, பல நாட்டு வாசகர்களையும் சென்றடைந்தது.

'எழுதுவதற்கு வயது ஒரு தடையாக இருக்க முடியாது' என்று சொல்லும் திவ்யஷா, தனது ஓய்வுநேரத்தில் வாசிப்பது, எழுதுவது, எழுதியதைத் திருத்துவது, மீண்டும் எழுதுவது ஆகிய பணிகளுக்காகச் செலவிடுகிறார்.

'ஒருமுறை மனத்தில் தோன்றிய கதையைப் பிறகு எழுதலாம் என்று தள்ளிவைத்தால், அதை மறந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். எனவே, கதைக்கரு உதித்தபிறகு அதைக் கொஞ்சம் கொஞ்சமாக விரிவாக்கி முழுமையடையச் செய்வதுதான், தனது வழிமுறை' என்கிறார் திவ்யஷா.

தனது பொறியியல் படிப்பை முடித்ததும், பிரான்ஸின் ஈபிள் கல்வி உதவித்தொகை (Eiffel Scholarship) அவருக்குக் கிடைத்தது. அதைக்கொண்டு இ.எஸ்.எஸ்..இ.சி. மேலாண்மைக் கல்லூரியில் (ESSEC Business School) தற்போது முதுநிலைப் படிப்பைத் தொடர்கிறார்.

- ஜி.சரண்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)