பதிவு செய்த நாள்

23 ஏப் 2018
12:40

 “உங்களை மிகவும் பாதித்த புத்தகங்கள் எவை?” என்று ஓர் எழுத்தாளரிடம் கேள்வி கேட்டார் நிருபர். 'தான் படித்த கதைகளில் இருந்து எதையாவது சொல்வார்' என்று எதிர்பார்த்தார் நிருபர். ஆனால் எழுத்தாளரோ ''என் பாடப் புத்தகங்கள்தான் என்னை மிகவும் பாதித்தன'' என பதில் சொன்னார்.

இப்படி பள்ளிக்கூட பாடப் புத்தகங்களால் மிகவும் பாதிப்புக்குள்ளான அந்த எழுத்தாளர், அசோகமித்திரன். மிகவும் மென்மையான குணம் கொண்டவர். அவர் தனது அறையில் மின்விசிறியைப் பயன்படுத்தியதில்லை. அதைப் பற்றிக் கேட்டதற்கு, ''நான் எப்போதும் ஜன்னல்களைத் திறந்து வைத்திருப்பேன். அதன் வழியே என் அறைக்குள் வரும் பறவைகள், மின் விசிறியில் அடிபட்டு விட்டால் என்ன செய்வது? அதற்காகத்தான் நான் மின்விசிறியைப் பயன்படுத்துவதில்லை'' என்பார்.

கனவுகள் பற்றிக் கேட்டதற்கு, ''எனக்கு எண்பது வயதுக்கு மேல் ஆகிறது. இன்னும் எனக்கு கனவுகள் வருகின்றன. கனவுகள் வரும் கதவைச் சாத்த வேண்டும் என்று தோன்றும். ஆனால் எப்படிச் சாத்துவது என்றுதான் தெரியவில்லை'' என்பார். ''உங்களுடைய கதைகளில் நீங்கள் இருக்கிறீர்களா?'' என்று கேட்டால், ''ஆம் பல நேரம் நானே கதாநாயகனாக இருந்திருக்கிறேன்'' என்பார்.

பழகுவதற்கு மிகவும் எளிமையானவரான அசோகமித்திரன், சிறந்த நகைச்சுவை உணர்வும் மிக்கவர். அவர் கவிதைகள் எழுதியதில்லை என்றாலும், கவிதைகள் பற்றிக் கூறும்போது ''அந்தக் காலத்தில் எழுதுவதற்கு ஓலைச்சுவடிதான் இருந்தது. அது 150 ஆண்டுகளுக்குப் பிறகு உதிர்ந்துவிடும். அதனால் எழுதியதை மனப்பாடமாக வைத்துக்கொள்வதற்காக எதுகை மோனையுடன் கவிதை வடிவில் எழுதினார்கள். இப்போது அப்படி எழுத வேண்டியதில்லை'' என்பது அசோகமித்திரனின் கருத்து.

- த.சங்கர்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)