பதிவு செய்த நாள்

24 ஏப் 2018
16:51
புத்தகங்களின் வழியேயான பைனரி ஞாபகங்கள் - கவிதைக்காரன் இளங்கோ

 ‘ஒரு நூல் நிலையம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது’ என்றார் முன்னாள் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு. புத்தகங்கள் எதற்காக? அவை ஏன் சேமிக்கப்பட வேண்டும்? எதற்காக காலம் தாண்டியும் அவற்றின் பயன்பாடு தேவையாக இருக்கிறது? இப்படி எத்தனை விதமான கேள்விகளை நாம் கேட்டுக்கொண்டாலும் அவற்றுக்கு வெவ்வேறு பதில்களை நம்மால் தயாரித்து விட முடியும் என்றாலும் அடிப்படையில் புத்தகங்களின் இருப்பை நியாயப்படுத்த நாம் கண்டடைந்து ஒப்புமையோடு தலையசைத்துக்கொள்ள ஒன்று இருக்கிறது.

மனிதன் தன்னுடைய நீண்ட நெடிய வரலாற்றை அறிந்து கொள்வதற்கு. மிருகத்திலிருந்து விலகி வந்துவிட்ட ஓர் இனமாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள கூடிய சான்றுகளுக்கு, யூகத்தின் வழியாகவேனும் ஒப்புக்கொள்ள அவை சார்ந்த ஆவணப் பிரதிகளை நம்பும் வழக்கத்துக்கு, இப்படி எந்தக் காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம்.
அவ்வரிசையில், புத்தகங்கள் பதிவு செய்யப்பட்ட நவீன வடிவமாக பிறவி எடுத்தன. மனிதனுக்கு இன்று வரை அறிவைத் தேடுதல் நின்றபாடில்லை. அவை சிறு சிறு தகவல்களை ஓரிடத்தில் ஒருங்கிணைத்தல் என்கிற துல்லியத்தை நோக்கி வளர்ந்துகொண்டிருக்கின்றன. எழுத்துக்கள் டிஜிட்டல் பிட்களாக தொழிற்நுட்பத்தின் வாயிலாக உருமாற்றம் அடைந்திருக்கின்றன. அனைத்துமே 01, 10 என்ற பைனரி ஞாபகங்களாக எஞ்சுகின்றன. இணையத் தகவல்கள் குவிவதும் அவ்வழியே.
குழந்தைகள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள். படைப்பு நிற்கவில்லை. மனித இனம் பெருகிக்கொண்டே இருக்கிறது. பூமியின் நிலப்பரப்புக்கு வந்து சேரும் புதிய குழந்தைகளுக்கு நாம் அறிவை கடத்தவே இதுவரை அறிந்தவற்றை சேமித்து வைத்து பயிற்றுவிக்கிறோம். எழுத்தின் அவசியத்தையும் மொழியின் அடையாளத்தையும் இனத்தின் அடையாளமாக நாம் ஒப்புநோக்குவோமேயானால் நம் இருப்பை மனிதன் என்று நாம் பெயரிட்டுக்கொள்வது ஓரளவுக்கு ஏற்புடையதே.

Human species believes in relationships. May be it’s a secret gate for survive with mutual emotions. அதனுள் இயங்கும் நுணுக்கமான உணர்வுகளும் அவற்றின் வேறுபட்ட தளங்களுமே தொடர்ந்து கூர்ந்து கவனத்துக்குள்ளாகின்றன. இவற்றைப் பதிவு செய்யவே, புதிய உத்திகளோடும் புதிய கோணங்களோடும் பிரதிபலிக்கவே உலகம் முழுவதும் தொன்றுதொட்டு இலக்கியங்களும், ஓவியங்களும், இசையும், திரைப்படங்களும், பிற நிகழ்த்துக் கலைகளும் தொடர்ந்து இயங்குவதன் மூலமாக முக்கியத்துவம் பெறுகின்றன. அவையே பண்பாட்டின் அசைவாகவும் கருதப்படக்கூடும். வெவ்வேறு நிலப்பரப்பின் மீது வாழ்வைக் கட்டியெழுப்பி அதனூடே ஒரு நீண்ட பழக்கவழக்கத்தை உற்பத்தி செய்து அடுத்தத் தலைமுறைக்கு அவற்றை எப்படியாவது கடத்திவிடுவதன் வழியாக ஒரு கலாச்சாரத்தை உறுதி செய்துவிட முடியும் என்கிற மனித நம்பிக்கை அசாதாரணமான ஒன்று.

கவிதைக்காரன் இளங்கோ
கவிதைக்காரன் இளங்கோ
மேலே பகிர்ந்துகொண்டவற்றை நம் மனம் நியாயப்படுத்திக்கொள்ள இசைந்து போகுமென்றால்.. எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம் ஒன்றைப் பற்றி இங்கே குறிப்பிடவும் அவற்றை வாசகர்கள் வாங்கி வாசிக்கவும் பரிந்துரைக்கிறேன்.

தமிழ்த் திரையுலகின் மிக உன்னதமான கலைஞர்களில் ஒருவர் இயக்குனர் மகேந்திரன். 1978 -ல் அவர் முதன் முதலாக இயக்கிய ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தில் தொடங்கி கடைசியாக இயக்கி 2006 -ல் வெளியாகிய ‘சாசனம்’ திரைப்படம் வரையிலுமே தமிழ் சினிமா உலகுக்கு, அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பொக்கிஷம் என்றால் அது மிகை ஆகாது. சினிமா, நம் வாழ்வோடு எதோ ஒரு புள்ளியில் உறுதியாக பிணைந்திருக்கிறது. அவற்றின் அபூர்வ கணங்களை நாம் நம்மிடையே கண்டெடுப்பவர்களாகவும் தொடர்ந்து இருந்திருக்கிறோம்.

‘சினிமாவும் நானும்’ - என்ற தலைப்பில் இயக்குனர் மகேந்திரன் எழுதிய புத்தகத்தை ‘கற்பகம் புத்தகாலயம்’ என்ற பதிப்பகம் 2013 செப்டம்பரில் திருத்திய பதிப்பாக வெளியிட்டிருக்கிறது. இப்புத்தகத்தின் முதல் பதிப்பு 2004ல் வெளியானது. ஆனால் தற்போதைய பதிப்பு 368 பக்கங்கள் கொண்ட கனமான புத்தகமாகவும் 250 ரூபாய் விலையிலும் நமக்குக் கிடைக்கிறது.

பொதுவான வாசகர்கள், சினிமாவை அதன் ஆழ்ந்த அர்த்தத்தோடு ரசித்துப் பார்க்கும் பார்வையாளர்கள், சினிமாவில் பணி புரியும் உதவி இயக்குனர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் இன்ன பிற உட்பிரிவு தொழிற்நுட்ப கலை சார்ந்தவர்கள் யாவரும் எந்த பேதமுமின்றி வாசிக்க வேண்டிய கட்டாயமான புத்தகமாக இது இருக்கிறது. நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும், இன்னொரு திரைப் படைப்போடு விரைவில் நம்மிடம் வந்து சேரப்போகும் ஒரு திரைக்கலைஞன் திரு.மகேந்திரன் அவர்கள். அவருக்கு இப்போது 78 வயது ஆகிறது. சென்னையில் இருக்கும் BOFTA  திரைப்பட பயிலகத்தில் ‘இயக்கம்’ பிரிவுக்கான தலைவராக செயல்பட்டிருக்கிறார்.

சினிமாவில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் அவர் இதுவரை தாம் பெற்ற சினிமா அனுபவங்களூடே அவரை அறிந்துகொள்வதற்கான நல்லதொரு சந்தர்ப்பத்தை இந்தப் புத்தகத்தின் வாயிலாக அவரது எழுத்து நமக்கு வழங்குகிறது. அடிப்படையில் அவர் ஒரு பத்திரிகையாளர் மற்றும் சிறந்த எழுத்தாளர், கூர்மையான சினிமா விமர்சகர், திரைக்கதையாசிரியர், சிறந்த வசனகர்த்தா. அவர் அங்கிருந்தே உருவாகி நம்மை நோக்கி ஓர் இயக்குனராக பரிணமித்து வந்தவர்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. 1999 ல், பிரபல வார இதழில் கட்டுரை வடிவில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். யாருக்கு? யாரை நோக்கி அக்கடிதம்?  அதன் தலைப்பு ‘சினிமா கனவுடன் அலைபவர்களுக்கு..’. அப்போது நான் சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து கொண்டிருந்தேன். அக்கடிதத்தை மகேந்திரன் அவர்கள் எனக்காகவே எழுதினார் என்றே நினைத்துக்கொண்டேன். என்னைப் போன்ற ஒவ்வொரு வாசகனும் அவ்வாறே நினைத்துக் கொண்டிருந்திருப்பான்.

அது, ஒரு தகப்பன் தன் மகன்களுக்கு எழுதியதைப் போன்ற கடிதம். ‘சினிமாவும் நானும்’ புத்தகத்தில் வெவ்வேறு தலைப்புகளில் மொத்தம் 41 அத்தியாயங்களும் அரிதான புகைப்படங்களும் நிறைந்திருக்கின்றன. அதில் முதல் அத்தியாயத்தை ‘சினிமா கனவுடன் அலைபவர்களுக்கு..’ என்றே கடிதமே தொடங்கி வைக்கிறது.

தவற விடவே கூடாத, பாதுகாக்க வேண்டிய, புத்தக ஆர்வலர்களுக்கு சக புத்தக ஆர்வலன் வாங்கி அன்பளிப்பாக நெஞ்சம் நிறைந்த பிரியத்துடன் கொடுத்து மகிழ வேண்டிய புத்தகம்.

- கவிதைக்காரன் இளங்கோ

 

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)