பதிவு செய்த நாள்

29 ஏப் 2018
17:18
வலி சிறுகதைத் தொகுப்பு : கலந்துரையாடல்

ன்று காலை திருவல்லிக்கேணி பரிசல் புத்தக நிலையத்தில் மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான அமரந்த்தா எழுதிய ‘வலி’ சிறுகதைத் தொகுப்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

பரிசல் சிவ.செந்தில்நாதன் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், சரஸ்வதி காயத்ரி, ஸ்ரீதேவி மோகன், மயிலம் இளமுருகு, எழுத்தாளர் தி.பரமேஸ்வரி, நிழல் திருநாவுக்கரசு, ஆய்வாளர் சண்முகம் மற்றும் நூலின் ஆசிரியர் அமரந்த்தா ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதலாவதாகப் பேசிய ஸ்ரீதேவி மோகன், “கதையில் வருகிற  எல்லா  கதாபத்திரங்களைப் போலான மனிதர்களை நிஜ வாழ்க்கையில் நான் சந்தித்திருக்கிறேன். பால்கட்டு, பூப்பு போன்ற கதைகளைப் படிக்கும்போது எந்த ஒரு பெண்ணும் இந்த வலி நிறைந்த வாழ்க்கையைக் கடந்து வந்திருக்க முடியாது என்பதை உணர முடிகிறது. ஒரு பெண் குழந்தை பூப்படைந்தால் ‘பெண் குழந்தையை இந்தச் சமூகத்தில் எப்படி பாதுகாப்பாக வளர்ப்பது.’ என நினைத்து அவளுடைய தாய் கண்ணீர் சிந்துவதை இந்தக் காலத்திலும் நம்மால் பார்க்க முடிகிறது. குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே வேலைக்குப் போகும் பெண்களின் வலியையும், குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல் அவஸ்தையில் துடிக்கும் பெண்ணின் உணர்வை பதிவு செய்திருக்கும் எழுத்து நடை நம்மையும் அந்த வலியை உணரச் செய்கிறது. பெண்களின் வலிகள் இன்னும் நிறைய இருக்கிறது. தொடர்ந்து வலி -2, வலி-3 என அடுத்தடுத்த தொகுப்புகளாக ஆசிரியர் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இரண்டாவதாகப் பேசிய ஆசிரியர் மயிலம் இளமுருகு, “பெண்களின் வலியை மட்டுமே இந்தப் புத்தகம் முழுவதும் பதிவு செய்திருக்கிறார் நூலின் ஆசிரியர். அதுவும் ஆண்களின் ஆதிக்கத்தால் பெண்கள் எந்தளவுக்கு ஒடுக்கப்படுகிறார்கள், பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எல்லா கதைகளிலும் சொல்லியிருக்கிறார். இந்தக் கதைகள் 20 வருடத்திற்கு முந்தை காலகட்டத்தில் எழுதப்பட்டதாக தெரிகிறது. சமகாலத்திற்கு ஏற்றார்போல இன்னும் நிறைய கதைகளை ஆசிரியர் எழுத வேண்டும்” எனப் பேசினார். மேலும் தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கதைகள் குறித்தும் குறிப்புகளோடு தெளிவாகப் பேசினார்.

அடுத்ததாகப் பேசிய சரஸ்வதி காயத்ரி, “ஆண்களுக்கு கிடைத்திருக்கிற சுந்ததிரம், பெண்களுக்கு கிடைப்பதில்லை. பெண்கள் மீதான பார்வை இந்தச் சமூகத்தில் மாற வேண்டும் என்பதை இந்த வலி நிறைந்த கதைகளில் இருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. நம்முடைய ஆண் குழந்தைகளை நாம் எப்படி வளர்க்க வேண்டும், ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் அவர்களுக்கு கற்பித்த வளர்க்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். இந்தத் தொகுப்பில் கடைசியாக இடம்பெற்றிருக்கும் ‘மீதமிருக்கும் மனிதம்’ என்கிற கதையில் வரும் ஆமீனா கதாபாத்திரம், முந்தைய கதைகளில் வரும் அத்தனை வலிகளையும் போக்கி ஒரு புத்துணர்வையும் புரிதலையும் கொடுக்கிறது.” என அவருடைய வாழ்க்கையில் சந்தித்த பெண்களின் பிரச்னைகளையும் கதையுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

எழுத்தாளர் தி.பரமேஸ்வரி, நிழல் திருநாவுக்கரசு மற்றும் ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் பெண் எழுத்து, பெண்களின் மீது இச்சமூகம் திணித்து வைத்திருக்கும் கற்பிதங்கள் மற்றும் அவற்றை எப்படி உடைத்து வெளியே வருவது போன்ற கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.

“பெண்களின் வலியை மட்டுமே பெண் எழுத்தாளர் பதிவு செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு பொதுவாக வைக்கப்படுகிறது. அதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன?” என நூலாசிரியர் அமரந்த்தாவிடம் எழுத்தாளர் தி.பர்மேஸ்வரி ஒரு கேள்வியை முன்வைத்தார்.

“பெண்களுக்கு வலிகள் இருக்கிற வரைக்கும் தொடர்ந்து நாம் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். நாம் எழுதுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் தான் இப்படியான கேள்வியை கேட்கிறார்கள். பெண்களின் வலிகளை எழுதுவதால் அவர்களுக்கு என்ன பிரச்னை வந்துவிடப்போகிறது. தொடர்ந்து நாம் எழுதிக்கொண்டே இருந்தால் தான் சிறு மாற்றமாவது ஏற்பட வாய்ப்பிருக்கிறது.” என அமரந்த்தா பதில் சொன்னார்.

தொடர்ந்து, “பெரும்பாலான பெண்கள், ‘எங்க வீட்டுக்காரர் எனக்கு நிறைய ஃப்ரீடம் கொடுத்திருக்காரு’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். நமக்கு வேறு ஒருவர் சுந்ததிரத்தைக் கொடுக்கிறார் என்றாலே நாம் அடிமையாக இருக்கிறோம் என்று அர்த்தமாகிறது. நமக்கான சுந்தந்திரம் என்பது நாம் சுயமாக சிந்திப்பதுதான். பெரும்பாலான பெண்கள் ஒரு வட்டத்திற்குள்ளேயே வாழ்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் மன அழுத்தத்தில் விரும்பமே இல்லாத வாழ்க்கையை கடைசி வரைக்கும் வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். அவற்றையெல்லாம் விட்டு வெளியே வர வேண்டும்.

ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமானது படிப்பு. படித்ததும் வேலை. பெண் யாரை சார்ந்திருக்காமல் சுயமாக வாழ வேண்டும் என்றால், பொருளாதார தன்னிநிறைவு, இருக்க இருப்பிடமும் இருக்க வேண்டும். அப்போதுதான் தன் சொந்தக் காலியேயே பெண்கள் சுயமாக வாழ முடியும்” எனப் பேசி முடித்தார்.

- கவிமணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)