பதிவு செய்த நாள்

03 மே 2018
17:24
வாசிப்பின் அனுபூதிநிலை - யமுனை செல்வன்

வாழ்வின் அபத்தங்களுக்கு எதிராக பகடி என்னும் அதிய அற்புத அசைவை, மிடுக்குடனும் மாறாத பேய் சிரிப்புடனும் நிகழ்த்திப்போகின்றன இசையின் கவிதைகள். நவீன பண்பாட்டுச் சூழலின் காமாசோமாத்தனங்களை தனது வார்தைகளால் கூறு போட்டுத் தொங்க விடுகிறார் இசை. என்வரையில், எழுத்தாகட்டும் சினிமா இன்ன பிற சமகாலக் கலைகளாகட்டும் ‘சுய எள்ளலும் பகடியும்’ ஊடிழையாகவோ நேரடியாகவோ இருப்பின் அவை படைப்பின் உச்சங்கள்.

இந்தப் புத்தகத்திற்கு இசையின் முன்னுரை மட்டும் வாசியுங்கள். அதுவே உங்களை முழு புத்தகத்தையும் வாசிக்க வைத்துவிடும். நிச்சயமாகச் சொல்கிறேன் இப்படியொரு முன்னுரையை எங்கேயும் வாசித்திருக்க மாட்டீர்கள். இயலாமைத் தருணங்களை மகா லொள்ளுடன் ‘கலைத்தன்மை மிளிரும் வீடு’, ‘டம்மி இசை’, ‘தம்பி, அந்தக் கல்லை எடு’, ‘விகடகவி மட்டையை உயர்த்துகிறார்’ போன்ற கவிதைகள் சொல்லிப்போகின்றன.

‘999 வாழ்க்கை’, ‘அறவுணர்ச்சி எனும் ஞாயிற்றுக்கிழமை ஆடு’,  போன்றவைகளோ அறவுணர்ச்சியா, கிலோ எவ்வளவு எனக்கேட்டு குறுநகை மாறாத குழந்தையென வாழ்வின் விழுமியங்கள் மீது சாவகாசமாக சிறுநீர் கழிக்கின்றன.

ராஜகிரீடம்

“உன் சிரசில் பொருந்தாதற்கு


யார் என்ன செய்ய முடியும் நண்பா

இந்த வாயிற்காப்போன் உடையில்

நீ எவ்வளவு மிடுக்குத் தெரியுமா”

“மதுரசம் வாங்கிவர


அனுப்பிய மனிதன்

யேசுவின் சாயலோடு வருகிறான்.” (மீட்பர்)

மரபான விசயங்களுக்கடியில் டெட்டனேர் குச்சிகளை வைத்துச் சிதறடிக்கும் சில கவிதைகளில் ‘ஒரு ஊரில் நாலைந்து ராஜக்கள்’, ‘கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது’, இன்னும் பல மீண்டும் மீண்டும் வாசித்துக் களிப்படைய தோதானவை. கொண்டாட்டமான மனநிலை தரும் குத்துப்பாட்டின் அனுபூதிநிலை, நவீன வாழ்வின் அடையாளங்கள் பற்றின கவிதைகளும் உண்டு.

சில வருடங்களுக்கு முன்பு நான் வாசித்த கவிஞர் இசையின் முதல் கவிதைத் தொகுப்பு. (இசைக்கு இது மூன்றாவது தொகுப்பு) எந்தவொரு கவிதைத் தொகுப்பு வாசிக்கையிலும் இவ்வளவு உற்சாகமாகவோ மாறாத சிரிப்புடனோ இருந்ததேயில்லை. அதீத மகிழ்ச்சியில் இருந்தால் புத்தகத்தை முழுவதுமாகப் படித்துவிட்டால் தான் என் மனது சாந்தமடையும். அப்படி ஒரே மூச்சில் வாசித்து முடித்த புத்தகம் தான் இது.

- யமுனை செல்வென்

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)