பதிவு செய்த நாள்

08 மே 2018
16:19

 நாம் நெருங்கிப் பார்த்து கண்டுகொள்ளாமல் விட்ட விசயங்கள், மனதில் வந்துபோன படிமங்கள், யோசித்து வைத்திருந்த சம்பவங்கள், சொந்த அனுபவங்கள் போன்றவற்றை எங்கோ ஒரு எழுத்தாளர் தனது எழுத்துகளில் படைத்துவிட்டுச் செல்லும் போது அந்த படைப்புகளோடும், படைப்பாளியோடும் ஒரு வித ஆச்சரியத்தோடும் இணக்கத்தோடும் பயணிக்கத் தொடங்கி விடுகிறோம்.

அப்படித்தான் எழுத்தாளர் அம்பையின் 'வெளிப்பாடு' சிறுகதையோடு நான் நெருங்கலானேன். வெகுஜன கிராமத்து பெண்களின் பிரதிநிதிகளாக தாமிரபரணி நதிக்கரையில் ஒரு வீட்டில் இருக்கும் நாற்பது வயதான பெண்ணும், இருபது வயதான பெண்ணும் தங்களது வாழ்க்கை வீட்டிற்குள்ளேயே முடிந்து போன அனுபவங்களை டெல்லியிலிருந்து வந்திருக்கும் பெண் பத்திரிகையாளரிடம் வெள்ளந்தியாக வெளிப்படுத்துகின்றனர்.

இரண்டு பெண்கள், அந்த டெல்லி பெண் இந்த மூவரை பிரதானமாக வைத்தே நகர்த்தப்படும் 'வெளிப்பாடு' கதையில் சமூக வெளியில், குடும்ப வெளியில் பெண்களுக்கான இருத்தல் எந்த நிலையில் இருக்கிறது, அந்த இத்துப்போன இருத்தலை வைத்தே அவர்கள் எப்படி காலத்தை ஓட்ட மனதை பலப்படுத்திக் கொள்கின்றனர் அல்லது வரப்போகும் காலத்தை எப்படி கடத்த ஆயத்தமாகின்றனர் என்பதை புரட்சிகளின்றி நிதர்சனங்களை வெகு எளிமையாக ஆவணப்படுத்துகிறது. நாமும், நமது வீடும், வீட்டுப் பெண்களும்தான் இதற்குச் சான்றுகள்.

எனது இருபத்தியாறு வயது வரை அம்மா எனக்கு ஆக்கிக் கொட்டிய சாப்பாடுகள் எத்தனைக் குவியல்கள் இருக்கும்? நான் தின்ற தீனியின் எடை எவ்வளவு இருக்கும்? நான் கழித்த மலங்களின் எடை எவ்வளவு இருக்குமென்ற நினைப்புகள் எனக்குள் மட்டுமே பல காலமாக ஓடிக்கொண்டிருந்தது. இதையொட்டிய ஒரு கற்பனையை அம்பை இந்தக் கதையில் பதிவுசெய்திருப்பார். ஆரம்பத்தில் சொன்னது போல அந்த இடத்தில்தான் நான் கூடுதலாக இந்தக் கதையோடு பதட்டமாக ஒன்றிப் போய்விட்டேன். அந்த இடம் இப்படி வரும்,

'ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள். நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துத் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள். இது தவிர இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள். எவ்வளவு முறை சோறு வடித்திருப்பாள்? எவ்வளவு கிலோ அரிசி சமைத்திருப்பாள்? இவள் சிரிக்கிறாள்'.

'ஒரு பொஸ்தகமுங்க. எங்க வூட்டுல இருந்திச்சு. நான் சின்னப் புள்ளையா இருக்கச்சொல்ல. ஒரே போட்டோவுங்க. சமுத்திர போட்டோ, நொரையா அலை. செல போட்டோவுலே அப்படியே கண்ணாடி மாதிரி கெடக்கு சமுத்திரம். திருச்செந்தூர் கோயில் விளால நான் பாத்திருக்கேன் சமுத்திரம். ஒரு வாட்டி சொரம் வந்து சமுத்திரம் சமுத்திரமுன்னுட்டு பெனாத்தினேன். ‘பயித்தியாரி, பயித்தியாரி’ன்னு இவுக ஒரே கோவம். அதென்னமோ வியாதிங்க. சமுத்திர சாபம். சமுத்திரம் பாக்கணுமே பாக்கணுமேன்னுட்டு பறப்பேன். இவுக ஒரு அறை வெப்பாக பாருங்க, அடங்கிடுவேன். முருக பக்தருங்க இவுக….'

என்று அந்த நாற்பது வயது பெண் டெல்லி பெண்ணிடம் விவரிக்கும் போது 'சமுத்திர சாபம்' என்று அவர் சொல்லும் வார்த்தையினை எளிமையாக என்னால் தாண்டி போக விட முடியவில்லை. எனது அம்மாவிற்கு இது போல நிறைய சாபங்கள் இருக்கின்றன என்பதை நினைக்கும் போது 'தொட்டி மீன்களின் கனவுகளில் கடல் மட்டுமே வருகிறது' என்று என்றோ நான் எழுதிய வரிகளைத்தான் குற்றவுணர்வுகளோடு கடக்க முயலுகிறேன்.

இப்படி பல குற்றவுணர்வுகளோடு எனது அம்மாவை நான் கேட்பது போல, அம்பையும் 'எந்த பலத்துடன் இப்படி வெள்ளையாய்ப் பேசுகிறாய்? சிரிக்கிறாய்?' என்று கேட்பது ஒட்டுமொத்த பெண்பாலருக்கு உண்டான உண்மை சொற்கள்தான் என்று நினைக்கிறேன்.

- முத்துராசா குமார்

அம்பையின் 'வெளிப்பாடு' சிறுகதையைப் படிக்க...

https://azhiyasudargal.wordpress.com/2011/04/30/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)