பதிவு செய்த நாள்

12 மே 2018
11:43

சாகச, தந்திரக் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கும். அதுவும் வேற்று கிரகம் பற்றிய கதைகள் என்றால் கொண்டாட்டம்தான். 'கேட்ரியோனாவின் வாரிசுகள்' (Heirs of Catriona) அப்படியான ஒரு கதைதான். தனது 12 வயதில் இந்தக் கதையை எழுதி வெளியிட்டவர் அனுஷா சுப்பிரமணியன்.

அனுஷாவிற்கு 8 வயதாகும்போது, அவருடைய அப்பா ரவி சுப்ரமணியன் தனது முதல் புத்தகத்தை எழுதினார். புகழ்பெற்ற நிதியாளரான அவர், பெருநிறுவனச் சூழலை மையமாக வைத்து எழுதிய அந்தப் புத்தகம் வழியே எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டார். இதைப் பார்த்த அனுஷாவிற்கும் எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது.

அனுஷா சுப்பிரமணியன்
அனுஷா சுப்பிரமணியன்

ஏழாம் வகுப்பு படிக்கும்போது தனது பள்ளிப்பாடங்களை முடித்துவிட்டு, இரவு நேரத்தில் தனது கற்பனையில் உருவான கதையை எழுதத் தொடங்கினார். அதிசய வீரர்களும், தேவர்களும் வாழும் வேறோர் உலகில் இருக்கும் கேட்ரியோனா நாடுதான் கதையின் களம். அதன் அரச வாரிசுகளான சாராவும், க்ரிஸ்டலும் தீயசக்திகளை அழித்து எப்படித் தங்கள் நாட்டைக் காக்கிறார்கள் என்பதுதான் கதை.

தான் கதை எழுதிக்கொண்டிருப்பதுபற்றி, அவர் தனது நண்பர்களிடம்கூடச் சொல்லவில்லை. தன்னுடைய படைப்பு வெளியீட்டிற்குத் தகுதியானதுதான் என்ற நம்பிக்கை வந்தபின் அவர் இந்த விஷயத்தை வெளியே சொன்னார். நண்பர்களும், ஆசிரியர்களும் ஊக்கம் அளித்தனர். சிறு வயதில் இருந்தே வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த அனுஷா 'Heirs of Catriona' என்ற தனது முதல் நாவலை எழுதி முடித்தார்.

பலரையும் அந்த நாவல் கவர்ந்துவிட, தொடர்ச்சியாக எழுத வேண்டும் என்ற ஆர்வம் அனுஷாவிற்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் ஏழுபேரிடையே நிலவும் நட்பை அடிப்படையாகக்கொண்டு, தனது இரண்டாவது நாவலை எழுதி முடித்தார். 'Never Gone' என்ற அந்த நாவல் அவரது 16ஆம் வயதில் (2016) வெளியானது.

“படைப்புகளை வாசிப்பதற்கும், அவற்றை எழுதுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. ஒரு சிறு குறிப்பை எழுத வேண்டும் என்றால்கூட அதற்கென நீண்ட நேரம் தேடி, அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டியது இருக்கும்.” என்கிறார் அனுஷா.

- ஜி. சரண்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)