பதிவு செய்த நாள்

12 மே 2018
13:23

 பிறப்பு : 11.5.1895
இறப்பு : 17.2.1986

இடம் : மதனபள்ளி, ஆந்திரப் பிரதேசம்.

'கோபம் ஏன் வருகிறது?' என்று அவரிடம் கேள்வி கேட்டால், 'கோபம் என்பது என்ன?' என்று நம்மிடம் திருப்பிக் கேட்பார். கோபம் எங்கிருந்து வருகிறது? அது தொடங்கும் இடம் எது? முடியும் இடம் எது? அதனால் வரும் விளைவுகள் என்ன? இதுபோன்ற எதிர்க் கேள்விகளுடன் உரையாடத் தொடங்குவார். அந்த உரையாடலின் முடிவில் கேள்விக்கான பதில், கேள்வி கேட்டவருக்குக் கிடைக்கும். இதுதான் ஜே.கே. என்கிற ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் தத்துவ பலம்.

எட்டாவது குழந்தையாகப் பிறந்தார் ஜே.கே. தாயார் மரணம் அடைந்த பிறகு, அவரது குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. அவரது தந்தை அடையாறில் இயங்கி வந்த பிரம்ம ஞான சபையில் உதவிச் செயலாளராக வேலை செய்தார். அந்தச் சபையின் தலைவராக இருந்த அன்னிபெசன்ட் அம்மையார் ஜே.கே.யின் ஆன்மிகத் தேடல் ஆர்வத்தை உணர்ந்து தத்தெடுத்துக்கொண்டார்.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி

பலவீனமானவன், அறிவுக்கூர்மை இல்லாதவன் என்று உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் விமர்சித்த ஜே.கே., சபையின் மூலமாக ஆங்கிலக் கல்வியும் பல்வேறு நாடுகளில் சிறப்புப் பயிற்சிகளும் பெற்றுத் தேர்ந்தார். குண்டலினி யோக முறையைக் கற்று, 18 வயதில் வினோதமான அனுபவங்களை உணர்ந்தார்.

தத்துவம், ஆன்மிகம் மட்டுமின்றி வாழ்வியல், தியானம், மனித உறவுகள், சமூக மாற்றம் போன்றவை குறித்தும் மக்களிடையே பேசினார். சாமானியர்கள் முதல் அறிவியலாளர்கள் வரை பலரும் அவரோடு தத்துவச் சிந்தனைகளை உரையாடினர். 'மத மாற்றம், கொள்கை மாற்றம் போன்றவை மனித குலத்துக்கு எவ்வித நன்மையும் செய்யாது. மனிதருக்குத் தேவை மாற்றமல்ல; விழிப்பு உணர்வே!' என்று போதித்தார்.

எந்தத் தத்துவத்தையும் உருவாக்காமல், 20ஆம் நூற்றாண்டின் தத்துவ ஞானிகளில் ஒருவராக அவர் மதிக்கப்படக் காரணம் வாழ்க்கை பற்றியும் அதன் பொருள் பற்றியும் பேசியதுதான். இவரது சிந்தனைகள் நூல்களிலும் ஒலிப் பேழைகளிலும் கிடைக்கின்றன. அதன் மூலம் வாழ்க்கை பற்றிய தேடலின் உண்மைத்தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.

இவரது முக்கியமான நூல்கள்...

தி ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ஃப்ரீடம்
தி ஒன்லி ரெவல்யூஷன்
கிருஷ்ணமூர்த்தீஸ் நோட்புக்

நன்றி : பட்டம்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)