தமிழ்ச் சொற்கள், தமிழ் இலக்கணம் கூறியவாறு அமையும். தமிழல்லாத சொற்கள்தாம் தமிழ் இலக்கணத்திற்கு மாறாக இருக்கும். தமிழ் இலக்கணம் சொல்வதற்கு எதிராக அச்சொற்கள் அமைந்திருப்பதைக் காணலாம். வடமொழி இலக்கணப்படி அமைந்த சொற்கள் தமிழில் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன என்று அவற்றை விளங்கிக்கொள்ள வேண்டும். பிறமொழிச் சொற்கள் தமிழுக்குள் வந்தாலும், அவை தமிழ்த்தன்மைக்கேற்பவே தங்களை மாற்றிக்கொள்ளும். அவ்வாறு மாற்றிக்கொள்வதன் வழியாக, அவை தமிழ்த்தன்மையோடு விளங்கும்.
எடுத்துக்காட்டாக, ரகர வரிசை எழுத்துகள் தமிழ்ச் சொற்களின் முதலெழுத்தாகத் தோன்றாது. வடமொழி உள்ளிட்ட பிறமொழிச் சொற்கள்தாம் ர, ரா, ரி, ரீ, ரு, ரூ போன்ற எழுத்துகளில் தொடங்கும். அவ்வாறு தொடங்கும் சொற்கள் அனைத்துமே பிறமொழிச் சொற்கள் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். அத்தகைய சொற்கள் வடமொழி, உருது, ஆங்கிலம், போர்த்துக்கீசியம் ஆகிய மொழிச்சொற்களாகவே இருக்கும்.
எடுத்துக்காட்டாக, ரூபாய் என்பது நம்முடைய நாட்டுப் பணத்தின் பெயர். அது 'ரூ' என்ற எழுத்தில் தொடங்கும் ஒரு பெயர்ச்சொல். 'ரூ' என்ற எழுத்தில் ஒரு தமிழ்ச்சொல் தொடங்காது. ரூபாய் என்பது ரூப்யா என்னும் வடமொழிச் சொல்லைத் தோற்றுவாயாகக் கொண்டது. தமிழ் இலக்கணப்படி ரகரத்தில் தமிழ்ச்சொல் தொடங்காது என்பதால், அச்சொற்களுக்கு முன்பாக அ, இ, உ ஆகிய உயிரெழுத்துகளைப் பயன்படுத்தி எழுதுவோம். ரூபாய் என்பதைத் தமிழ் வழக்குப்படி உரூபாய் என்று எழுத வேண்டும். ரங்கன், ராமசாமி, ராமகிருட்டிணன் என்னும் வடமொழிப் பெயர்களை அரங்கன், இராமசாமி, இராமகிருட்டிணன் என்று எழுதுவோம்.
ரகர எழுத்துகளில் தொடங்கும் வடமொழிச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்ச் சொற்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ரகசியம் - இரகசியம் - மறைபொருள்
ரசம் - இரசம் - சாறு
ரசாபாசம் - இரசாபாசம் - ஒழுங்கின்மை
ரசனை - இரசனை - சுவைப்பு
ரட்சித்தல் - இரட்சித்தல் - புரத்தல்
ரணம் - இரணம் - புண்
ரத்தம் - இரத்தம் - குருதி
ரத்தினம் - இரத்தினம் - மாமணி
ரம்பம் - இரம்பம் - ஈர்வாள்
ராகம் - இராகம் - பண்
ராசி - இராசி - ஓரை
ராச்சியம் - இராச்சியம் - நாடு
ராத்திரி - இராத்திரி - இரவு
ரேகை - இரேகை - வரி
- மகுடேசுவரன்