எல்லோரையும்போல், அஷ்மிதா கோயங்கா (Asmita Goyanka), பள்ளிக்குச் செல்வதும், பாடங்களில் கவனம் செலுத்துவதுமாகவே இருந்தார். அவர் எழுதிய சில கவிதைகள், அவர் படித்துவந்த மான்ட்ஃபோர்ட் பள்ளியின் செய்தித்தாளில் அவ்வப்போது வெளிவந்தன.
ஒருநாள் கணக்குப் பாடம் படித்துக்கொண்டிருந்தபோது அஷ்மிதா மனத்தில் கதைக்கரு ஒன்று உருவானது. சற்றும் தாமதிக்காத அவர் தன்னிடம் இருந்த நோட்டுப்புத்தகத்தில் அதை எழுதத் தொடங்கினார்.
ஒரு பழங்காலக் கோவிலுக்குச் செல்லும் ஐந்து சிறுமிகள் அங்கு வித்தியாசமான சில அனுபவங்களைப் பெறுகிறார்கள். இதனூடாக உலக வெப்பமயமாதல் பிரச்னையால் நாம் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொள்ளப்போகிறோம் என்பதுபற்றி எழுதியிருந்தார்.
இந்தக் கதையைப் படித்த அவரது தாத்தா, அதை நாவலாக விரித்து எழுதும்படி சொன்னார். 'The Mystic Temple' நாவலை எழுதி முடித்தபோது அஷ்மிதா ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார்.
தனது கதையில் வரும் பாத்திரங்களுக்கு மனத்தில் தோன்றிய பெயர்களை வைத்துவிடாமல், அப்பெயர்களே அக்கதாப்பாத்திரத்தின் குணநலன்களை வெளிப்படுத்துவதுபோல் இருக்க வேண்டும் என்பதில் கவனம் எடுத்துக்கொண்டார்.
உதாரணமாக, ஸ்பானிய மொழியில் 'மாள்விகோ' என்றால் 'தீயது' என்று பொருள். அதுதான் இக்கதையில் வரும் வில்லனின் பெயரும்கூட. மாள்விகோ பூமியை அழிப்பதற்குப் பலவகையிலும் முயல, இந்தச் சிறுமிகள் அவற்றை எப்படி முறியடிக்கிறார்கள் என்பதுதான் கதை.
தனது 12ஆம் வயதிலேயே இந்த நாவலை அவர் எழுதிவிட்டாலும், அது கொஞ்சம் மேற்கத்தியச் சாயலுடன் இருப்பதாகப் பதிப்பாளர்கள் கருதினர். எனவே அதில் சில திருத்தங்கள் தேவைப்பட்டன. அவர்கள் கோரிய மாற்றங்களைச் செய்ததும் நாவல் முழுக்க முழுக்க இந்தியச் சூழலுக்கு ஏற்ற கதையாக மாறிவிட்டது. புத்தகம் பதிப்பிக்கப்பட்டு வெளியானபோது அஷ்மிதாவிற்கு வெறும் பதின்மூன்றே வயதுதான்.
நாவல் வெளிவந்ததும் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகச் சொல்லும் அவர், 'நிறைய வாசிப்பதன் வழியே எழுதுவதற்கான உந்துதலைப் பெறலாம்' என்கிறார். அதீத கற்பனைகள், அற்புதங்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்த தனது முதல் நாவலில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இயல்பான நடைமுறைகளை அடிப்படையாகக்கொண்ட தனது இரண்டாம் நாவலை இப்போது எழுதிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.
- ஜி.சரண்