பதிவு செய்த நாள்

14 மே 2018
12:13

 'என் தாத்தா பாரசீகம், உருது மொழிகளில் கவிதை எழுதுவார். அவருடைய எழுத்துகள்தான் சிறுவயதிலேயே கவிதைகள் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தின. உருது மொழியில் கவிதை எழுத வேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம். 11 வயதில் கவிதை எழுத ஆரம்பித்தேன்.

எங்கள் வீட்டருகே இருந்த படிப்பகத்துக்கு தினமும் போவேன். அங்கிருந்த புத்தகங்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விசயங்களை எனக்குத் தெளிவுபடுத்தின. அதன் விளைவாகப் பள்ளியில் படிக்கும்போதே கவிதைகள் எழுதிப் பல பரிசுகளைப் பெற்றேன்.

தமிழ் இலக்கியத்தின் மீது என் கவனம் திரும்பியது. தியாகராஜர் கல்லூரியில் சிறப்புத் தமிழ் படித்துப் பட்டம் பெற்றேன். கல்லூரியில் கவிதை, கட்டுரைப் போட்டி என்றால் என் பெயர் நிச்சயம் இருக்கும். ஏராளமான போட்டிகளில் முதல் மாணவனாக வெற்றி பெற்றேன். தமிழ் இலக்கியம்தான் என்னைத் தரணிக்கு அடையாளம் காட்டியது.

தமிழ் படிக்கிறாயே, அதற்கு வேலையே கிடைக்காது என்று என்னிடம் பலர் சொன்னார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஒரு மனிதனுக்கு எதில் விருப்பம் அதிகம் உள்ளதோ, எதில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறானோ அதில் சாதித்துவிட வேண்டும். இலக்கியத்தில் நாட்டம் இருந்ததால், அதில் சாதிக்க வேண்டும் என்ற விடாமுயற்சியுடன் இறங்கினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. நான் படித்த தமிழ், என்னை உலகம் முழுவதும் அழைத்துச் சென்றுள்ளது.'

இது, கவிக்கோ அப்துல்ரகுமான் தன் வாழ்க்கையைப் பற்றிக் கூறியச் செய்தி.  மதுரையில் பிறந்த அப்துல்ரகுமான், வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த் துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.

அப்துல் ரஹ்மான் எழுதிய 'பால்வீதி' என்ற கவிதைத் தொகுப்பு மிகுந்த கவனத்தைப் பெற்றது. 1995இல் வெளிவந்த 'ஆலாபனை' என்ற கவிதை தொகுப்பிற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.

கவிதைகள் மட்டுமல்லாமல், பெரும் எண்ணிக்கையில் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார்.

பெற்றோர்: சையது அகமது- ஜைனத் பேகம்
பிறப்பு: 1937, நவம்பர் 9.
மறைவு: 2017, ஜூன் 2.

இயற்கையை ரசிக்கச் சொல்லும் அப்துல்ரகுமான் கவிதை ஒன்றின் சிறு பகுதி...

'குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில்
ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்?
இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே புரளுகின்றன
நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை
இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை
ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை.
நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்கக் கற்றிருந்தால்
உச்சரிக்க முடியாத எழுத்துகளில்
அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்
நீங்கள் மின்னலின் வாக்கியங்களை
வாசிக்க முடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்'

நன்றி : பட்டம் மாணவர் இதழ்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)