'உண்பது நாழி; உடுப்பவை இரண்டே'
இது புறநானூறுப் பாடலில் வரும் ஒரு வரி (புறநானூறு - 189)
இதன் பொருள், 'யாராய் இருந்தால் என்ன? அவர் உண்பது ஒரு படி உணவு. உடுத்திருப்பவை மேலாடை, கீழாடை என்று இரண்டே துணி. அப்படி இருக்கும்போது செல்வத்தைச் சேர்த்துவைத்து என்ன செய்யப் போகிறோம்?' என்பதாகும்.
'நல்ல நாளிலே நாழிப்பால் கறக்காத மாடா ஆகாத, நாளிலே அரைப்படி கறக்கும்?'
'கறக்கிறதென்னவோ நாழிப்பால்; உதைக்கிறது பல்லுப் போக!'
இவை பழமொழிகள்.
''இங்கே பாலை அளந்து பார்ப்பது கிடையாது. அளந்து பார்க்கக் கூடாது என்று ஒரு நம்பிக்கை. கலங்களிலும் செம்புகளிலும்தான் பீய்ச்சுவார்கள். மாடுகளின் சராசரி கறவையைச் சொல்ல வேண்டும் என்றால் இரண்டு நாழிப்பால் இருக்கும் என்று சொல்லலாம். நாழி என்கிற அளவு வெள்ளை அதிகாரிக்குப் புரியவில்லை. அதை எப்படி அவர்களுடைய கணக்குப்படி விளக்குவது என்று அந்தக் கருப்பு அதிகாரி யோசித்துக் கொண்டிருக்கும்போது இரண்டு எருமை மாடுகள் தங்களுக்குள் முட்டுப்போட ஆரம்பித்தன''. கி. ராஜநாராயணன் எழுதிய 'கோபல்ல கிராமம்' நாவலில் வரும் சிறு பகுதி இது.
புறநானூறு, பழமொழிகள், நாவலின் பகுதி ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும்
'நாழி' என்பது ஓர் அளவை முறை.
சரி அது எவ்வளவு இருக்கும்? எப்படி இருக்கும்? நாலு உழக்கு சேர்ந்தது ஒரு நாழி (படி). ஒரு படியைத்தான் நாழி என்று அந்தக் கால மக்கள் அழைத்தார்கள். பித்தளையில் இருந்தால் சேர் நாழி. இரும்பில் இருந்தால் பக்கா நாழி.
நன்றி : பட்டம் மாணவர் இதழ்