பதிவு செய்த நாள்

14 மே 2018
15:53

  ழனிசாமி ஆசிரியர் என்றால் கொஞ்சம் அந்த ஊரில் யோசிப்பார்கள்.  ‘பல்னி வாத்யேர்’ என்றால் தான் தெரியும். அரசு ஆரம்பப் பள்ளியில் பணி. இவர் ஒருவர் மட்டும் தான் மாதச் சம்பளக்காரர். மீதமுள்ள குடும்பங்கள் தினக்கூலிகளாகவும் சிறு விவசாயிகளாகவும் வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள். ஊரென்றே சொல்லமுடியாத ஊரின் நடுவே நாட்டு ஓடுகளால் வேயப்பட்டு, கருங்கற்களால் கட்டப்பட்ட பழங்காலத்து வீட்டில் தான் வாசம். ஊரில் மொத்தமே பத்து பதினைந்து வீடுகளேயென்றாலும் அதை ஊரென்று சொல்லாமல் 'கொட்டாய்' என்றுதான் பக்கத்து ஊரார் அழைப்பார்கள். மூத்தவளாக ஒரு மகளையும், நான்கு ஆண் மகன்களையும்  பெற்றெடுத்தப்பின்னும் அவரின் மனைவி வசந்தா முழுகாமல் இருந்தாரென்பது அப்போது ஆச்சரியப்படக்கூடியதல்ல.

மனைவியின் மீது கொள்ளைப்பிரியம் கூட இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பஞ்சாயத்து கிணற்றடியில் பிள்ளைகளை வரிசையாக நிற்க வைத்து வாளியில் நீர் இறைத்து குளிப்பாட்டுவது தினசரி அவருடைய வழக்கமான பணிகளில் ஒன்று. அந்த ஊரில் தினமும் குளிக்கும் பிள்ளைகளென்றால் அவர்களாகத்தான் இருக்கும்.  மகளுக்கு கஸ்தூரி மஞ்சள் போட்டு தேய் தேயென்று தேய்ப்பார். லிரில் சோப்பின் வாசத்தில் கிணற்றடி மணக்கும். கிணற்றை ஒட்டிய வேப்பமரத்திலிருந்து பழுப்பு வண்ணத்தில் இருக்கும் இளங்கொழுந்துகளை கிள்ளி குழந்தைகளுக்கு தின்னக்கொடுப்பதும், பிள்ளைகள் அலறியபடியே மென்று விழுங்குவதும் தினசரிக்காட்சிகள்.

அதோடு விடுவாரா...சோற்றுக்கற்றாழையை தோல்  சீவி உள்ளே இருக்கும் நுங்கு போன்று தளதளவென இருக்கும் சோற்றை தண்ணீரில் அலசி விழுங்கச்செய்வதுமாக காலை நீராடல் முடித்து, காதுகளில் பருத்தி துண்டின் முனையை திரித்து விளக்கு திரி கணக்காக காதில் நுழைத்து சுத்தம் செய்வதுவிடுவார். ஒரு முறை  நடுப்பிள்ளைக்கு உடலெங்கும் கரப்பான் நோய் கண்டுவிட்டது. வெள்ளாட்டு இரைப்பையின் கசடை அள்ளி உடலெங்கும் பூசி விட்டார். பல மூலிகைகளை உண்ணும் வெள்ளாட்டு இரைப்பையில் உள்ள கசடு  நல்ல மருந்தென்பார். எங்கு ஆடு வெட்டினாலும் சட்டி எடுத்துக்கொண்டு போய்விடுவார்.

அதே கிணற்றடியில்  பின்னர் தானும் அங்கேயே குளித்து ஈரத்துண்டை இடுப்பில் சுற்றியபடி சூரியநமஸ்காரம் முடித்து நீர் இறைத்து குடங்களில் நிரப்பி தோளில் ஒன்றும் கையில் ஒன்றுமாக சுமந்து தேவைக்கு நிரப்பிவிடுவார்.

ஊரின் எந்த ஆண்களும் செய்யத் தயங்கும் அத்தனை பணிகளையும் கொஞ்சமும் தயங்காமல் செய்வதால், ஊரிலிருக்கும் பெண்களுக்கு அவர் மீதான மரியாதை கூடியேயிருந்தது. ஆட்டுக்கல்லில் இட்லிக்கு மாவு அரைக்கும் அந்த அழகை பெண்கள் மெச்சிக்கொள்வதுண்டு.  ஆண்களை பொருத்தமட்டில் அட அவன் ஒரு பொண்டாட்டிதாசனப்பா  என பகடி  செய்வது தெரிந்தாலும்  கிஞ்சித்தும் கவலைபட்டதில்லை. தன்னை எதன் பொருட்டும் யார் பொருட்டும் மாற்றிக்கொண்டவருமில்லை.

பிள்ளைகளை மற்ற எந்த பிள்ளைகளுடனும் சேராமல்  கணவனும் மனைவியும் பார்த்துக்கொள்வார்கள். மீறி எங்கேனும் கண்ணுக்கு மறைவாக பிள்ளைகள் இருந்துவிட்டால் தாய்க்கோழி கொக்கரிப்புக்கு குஞ்சுகள் ஓடிவந்து சேருவதை போல் ஓடி வந்து சேர்ந்து விடுவார்கள். வீட்டில் நிறைய ஓலைச்சுவடிகளும், மூலிகை மருத்துவ புத்தகங்களும் நிறைந்திருக்கும். சதா ஏதேனும் ஒரு வேரை தேடியலைவதும் தண்ணீரில் அலசி காயவைத்து இடிப்பதும், மூலிகை இலைகளை பறித்து சாறு பிழிவதென அவரின் பொழுதுகள் கரையும். வீட்டில் நுழைந்தால் நாட்டுமருந்துக்கடை நெடி மூக்கை நிமிட்டவைக்கும்.

மனைவி குளித்துக்கொண்டிருக்கும் போது அனைவருக்கும் கேட்கும் படி ஏண்டி முதுகு தேய்க்கனும்னா ..கூப்பிடு என்பதை கேட்கும் பெண்களுக்கு..குடுத்து வைச்சவ வாத்யேர் பொண்டாட்டி என குசுகுசுத்ததெல்லாம் நாளடைவில் மறைந்துவிட்டது. மனைவி தலைக்கு குளித்தப்பின் நொச்சியிலையில் ஆவி பிடிக்க ஆயத்தமாகிவிடுவார்.

குடிநீரில் சீரகம் வெட்டிவேர், வில்வம் துளசி  இலைகளை போட்டு வைத்துதான் பருகுவார்கள். வாத்தியாருக்கு அம்மா மட்டும் தான். லட்சுமியென வலது கையில் ஒரு பச்சையும் இடது கையில் புள்ளிவைத்த கோலத்தையும் பச்சையாக குத்திக்கொண்டிருக்கும். அதே ஊரில் தனியாக கேட்பாரற்று இருந்த குடிசையில் தனியாக பொங்கியுண்டு காலம் தள்ளிக்கொண்டிருந்தார். கொஞ்சம் கண்பார்வையும்  நடமாட்டமும் உண்டென்பதால் புளியவிதைகள் ஆமணக்கு விதைகளை வாங்கி சந்தையில் விற்று வரும் வரும்படியில் ஜீவனம். வசந்தாவிற்கும் இந்தம்மாவிற்கும் ஏழாம் பொருத்தம்.

அதே ஊரில் இருந்தாலும் பிள்ளைகள் ஒரு போதும் பாட்டியென உறவுகொண்டாடியதில்லை. வசந்தாவை மீறி வாத்தியாரால் தும்மக் கூட முடியாது. மாதச் சம்பளம் முழுதும் மனைவியிடம் கையளித்துவிட்டு ஐந்து ரூபாய் வாங்கவேண்டுமென்றாலும் இவர் தோப்புக்கரணம் போட வேண்டும். கோடை முடிந்து நல்ல மழைக்காலத்தில் செம்மண் வயல்களில் நன்னாரி முளைந்து வேர் கொடியோடியிருக்கும். மேய்ச்சலுக்கு செல்லும்போது தென்படுபவர்களை நிறுத்தி நன்னாரி வேரை கொண்டுவரச்சொல்லுவார். நானெல்லாம் கூட வேர்களை சேகரித்து கொடுக்க இரண்டு ரூபாய் கொடுத்து யாருக்கும் சொல்லிடாதடா சாமீ என்பார்.

இஸ்திரி போடாத பேன்ட்டும்  அதை தைத்த வடிவமும் மாவு அரைவு இயந்திரத்தில் கட்டி தொங்கவிட்டதை போலவே காட்சியளிக்கும். சட்டை கையில் மடிப்புகளின் தையல் பிரிந்தபடி பாக்கெட்டில் கேம்ளின் இங்க் பேனாவின் மை கசிந்த கரை லேசாக தென்பட்டபடியுமான சட்டைகளே அவர் வசம் இருந்தவை. சைக்கிளின் பின்புற சக்கர கவசத்தில் வெள்ளை நிற வண்ணத்தின் பின் புலத்தில் மகளின் பெயர் சுதா என்று சிவப்பு மையில்  எழுதப்பட்டும் , பச்சை நிற செயின் கவசத்தில் R பழனிச்சாமி ஆசிரியர் என வெண்ணிறத்தில் எழுதப்பட்டு இருக்கும். பெயருக்கு பக்கத்தில் மயில் கூட ஒன்று வரைந்திருந்ததாக நினைவு. பள்ளிக்கு அதில் தான் பயணம். வழியில் தென்படும் அனைத்து கோயில்களையும் கடக்கும் போதும்  சைக்கிளை நிறுத்தி தோப்புக்கரணம் போட்டு கன்னத்தில் போட்டுக்கொள்வார்.

பொங்கலுக்கு ரேஷன் கடையில் வழங்கும் புடவையை எங்கேனும் மோப்பம் பிடித்து எதோ ஒரு விலைக்கு மனைவிக்கு தெரியாமல் வாங்கி தன் அம்மாவிடம் கொடுத்துவிடுவார். சில நேரம் அம்மாவிடமே கூட கடனா  ..ஒரு அம்பது ரூவா குடும்மா ..குடுத்துடுறன்...அவ அவங்கம்மா ஊருக்கு போயிட்டா..வந்ததும் வாங்கி குடுக்குறன் என கெஞ்சுவதைக் கண்டு கண்கள் கலங்கி கலங்கி கண்ணின் முனைகளில் பூளை  அரிசிக்காளானாக எப்போதும் முளையிட்டபடியே இருக்கும். ஒரு போதும் அந்தம்மா சிரித்து பார்த்ததேயில்லை. இப்படி ஒரு பிள்ளையை வளர்த்து கண்ணெதிரே படும் கொடுமையை காண வைத்தவிட்ட கடவுளை தினம் நிந்திப்பாள்.

மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காலங்களில் சாதம் வடித்துவிட்டு, குழம்பிற்கு இரண்டு பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அக்கம் பக்கத்தாரிடம் எக்கா ..கொஞ்சம் கொழம்பு இருந்தா ஊத்துயக்கா...என பாத்திரங்களை நீட்டுவார். எந்த வயது பெண்களாக இருந்தாலும் அவருக்கு யக்காதான்.

ஊரின் ஒதுக்குப்புறமாக மேல் பாகம் சிதிலமடைந்த நிலையில் ஒரு பிள்ளையார் கோயில். விசேஷமான தினங்களில் ஓரிருவர் கற்பூரமும் ஊதுபத்தியும் கொளுத்துவதோடு சரி. நல்ல வெயில் காலத்தில் கோயிலின் வராந்தாவின் சிமெண்ட் பூசிய தரையில் எவராவது படுத்துக்கிடப்பர்.  தரையின் ஒதுக்குப்புறமாக தாயம் ஆடுவதற்கு ஏதுவாக தரையில் தாயமாட்டத்தின் கோடுகளை அச்சாகவே பதித்துவைத்தது வசதியாக போய்விட்டது.

கோயிலுக்கு பல்னிசாமி வாத்யேர்தான் பூசாரி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிள்ளையாரை குளிப்பாட்டி கதும் பொடிகளை தூவி, அருகம் புல்லும் வெள்ளறுக்கனையும் வைத்து வணங்கி தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போடுவதுண்டு.

ஆறு பிள்ளைகளுக்கு தகப்பனானதும் பல்னி வாத்யேர் என்னும் பெயர் புள்ளக்குட்டி வாத்யேர்யென மாறிவிட்டது.

ஏதேனும் ஒரு நாள் பள்ளியில் சத்துணவாக புளிச்சோறு போடுவார்கள். ஆயாம்மாக்களிடம் கேட்டு டிபன் பாக்ஸில் வாங்கியும் வந்து விடுவார். அதை அப்படியே தன் அம்மாவிடம் கொடுத்துவிடுவார்.

இவன் என்னத்தை வாத்யேரோ! ...இவன் எப்படி புள்ளையோலுக்கு பாடம் சொல்லித்தருவான்னு தெரிலியே.. என்னும் கேலியில் கொஞ்சம் உண்மையும் இருந்தது. பாடப்புத்தகங்களை கடந்து வேறு எதுவும் தெரியாது. ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு அப்படி என்னத்தை சொல்லித்தரவேண்டும்? சிலேட்டில்  அ ஆ ..என எழுதி கொடுத்துவிட்டால் மாவு பல்பத்தில் அதன் மீதே ஊர்ந்து ஊர்ந்து எழுத வேண்டியதுதான்.

வாத்யேரின் மச்சானொருவர் நகரத்தில் இருந்தார். தன் மாமாவிற்கு கருப்பு வண்ணத்தில் ஒரு டேப் ரிகார்டரை வாங்கி வந்திருந்தார்.  ஆறு பொத்தான்களில் ஒரு பொத்தான் சிகப்பு வண்ணத்திலும் மீதி பொத்தான்கள் வெள்ளையிலும் அம்சமாக இருந்தது.

மாலைநேர வாசலில் பாய்விரித்து நடுவாந்தரமாக டேப் ரிகார்டரை படுக்கவைத்திருந்தார். இப்படியெல்லாம மல்லாக்க படுத்தபடி ரேடியோவை பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது.  சுற்றிலும் பெண்களும் குழந்தைகளுமாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். ஒரு பொத்தானை அமுக்கியதும் செவ்வக கண்ணாடி ஒன்று வானம் நோக்கி வாயை பிளக்க, ஒரு கேசட்டை சொருகி மூடிவிட்டு மறு பொத்தானை அழுத்த நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ..ஒன்று மனசாட்சி... பாடத்துவங்கியதும் ..வாத்யேர் மனைவி போதும் ...எல்லாம் கெளம்புங்க .. என்றதும் கலைந்துவிட்டார்கள். நான் மட்டும் அங்கே நின்று கொண்டிருந்தேன். வாத்யேரின் மச்சானுக்கு என்னை பிடிக்குமென்பதால் டேய்...ராசு நீ ஒரு பாட்டு பாடு நான் ரிகார்ட் பணறேன் என்றதும் வெட்கம் தலையை பிடித்து அழுத்தியது.

ம் ..பாடுறா.. என சிகப்பு பொத்தானையும் , இன்னொரு பொத்தானையும் அழுத்தினார்.

செல்லாத்தா செல்ல மாரியாத்தா ..எங்க சிந்தையில்..வந்து பாடத்துவங்கி நாலு வரியில்  சிரித்துவிட்டேன். அவரும் நிறுத்திவிட்டு சிரித்தபடியே அதை ஒலிக்கவிட ஓட்டம் பிடித்தேன். கடைசியாக ஆண்டாள் பாட்டி ஒரு நடவு பாட்டும், தாலாட்டு பாட்டும் பாடினாள்.

அப்போதுதான் அம்மாவின் சத்தம்  கேட்டது அடேய்...ஓடியாங்கடா, கெழவி அசவத்து கெடக்குறா... என்றதும் ஓட்டமாக ஓடிப்போய் லட்சுமி பாட்டி குடிசைக்கு முன் நிற்க, கோரைப்பாயில் பாதி கண்களை மூடியபடி வாய்கோணி வெற்றிலை பாக்கு கறை பற்களை காட்டியபடி இறந்துக் கிடந்தாள். செம்மறி ஆட்டின் கண்களை போல வெளுத்து கிடந்த கண்களில் அதே அரிசிக்காளான் பூளை.  அப்பாதான்  உள்ளே புகுந்து லட்சிமி பாட்டியை புரட்டிப் பார்த்தார் போயி...ரொம்ப நேரம் ஆயிட்டமாதிரி இருக்குதே.. என வெளியே வந்தார்.‌

போய் ..அந்த வாத்யேரை கூட்னு  வாடா என விரட்டினார். வாத்யேரை கண்டாலே அப்பாக்கு ஆகாது. வாத்யேர் பத்து வார்த்தை பேசினாலும்.. ம் அப்பாவின் அதிகபட்ச பதில் இதுதான். வாத்யேருக்கு தகவல் சொல்லி கூட்டி வருவதற்குள் ஊரை ஒட்டிய வயலில் வேலையை அப்படியே போட்டு விட்டு ஊருசனம் குடிசை முன் கூடிவிட்டிருந்தார்கள்.


அய்யோ ...என்னை பெத்தவளே, உன்னை அனாதயா சாகவுட்டுட்டேனே.. நெஞ்சில் அறைந்து கொள்ளும் வாத்யேரை கண்டதும் உசுரோட இருந்தப்ப ஒரு வாய் தண்ணி தர வக்கில்ல...இப்போ கூத்து கட்டுறான் பாரு என அப்பா முணகுவது என் காதில் நன்றாகவே கேட்டது.

அப்பா தான்  கயிற்று கட்டிலை குடிசை முன் இருந்த புங்கை மரத்தடியில் எடுத்து போட்டு, லட்சுமி பாட்டியை வெளியே கொண்டுவந்து அதில் படுக்கவைத்தார்.குடிசை விட்டு வெளியே ஓடிவந்த வாத்யேர் அய்யா சாமீ...கூட இருந்து சாங்கியம் சடங்கு பண்ணி, எங்காத்தாளை நல்லபடியா அனுப்பி வைக்க நீதான் கூட இருக்கனும் சாமீ என அப்பாவின் காலை  பிடித்துக்கொண்ட வாத்யேரை பார்க்க பரிதாபமாக இருந்தது. வசந்தாவும் தன் இளைய மகனுடன் புங்கை மரத்துக்கு முதுகை கொடுத்து சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள்.

அப்பா அகத்தி மரத்தை வெட்டி இரு துண்டுகளாக்கி கை பாடையை தயார் செய்துக்கொண்டிருந்தார். அப்பாவிற்கு பூ பாடையும் கட்டத்தெரியும். பாடையின் கால்மாட்டுப் பகுதியில் மயில் தோகை போல  அற்புதமாக ஜோடிக்க வரும். ஒரு வழியாக ஆற்றங்கரையில் அடக்கம் செய்தாகிவிட்டது.

நெற்றியில் கைகளில் மார்பிலென திருநீர் பட்டைகளை பூசியபடி பிள்ளையார் கோயில் வராந்தாவில் கண்மூடி தியானத்தில் இருக்கும் வாத்யேரை கண்டு தலையிலடித்துக்கொள்வார் அப்பா.

பல்னி வாத்யேர் மகளை சொந்தத்திலே கட்டிக்கொடுத்துவிட்டார். அவளுக்கும் எனக்கும் இரண்டு வயது வித்தியாசம்.  அவளை விட நான் மூத்தவன். அவளும் யாருடனும் பேசமாட்டாள் வளர்ப்பு அப்படி. நான் வெளியூரில் வேலைக்கு சென்று  விட்டேன். மாதம் ஒருமுறை ஊருக்கு வருவதுண்டு.

வாத்யேரின் பிள்ளைகளும் வளர்ந்து எதிர்த்து பேசவும் மரியாதைக்குறைவான வார்த்தைகளை கையாளத்தொடங்கவும் இவர் பணியிலிருந்து ஓய்வு பெறவும் சரியாக இருந்தது.  பணியிலிருக்கும் போதே ஊரிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் தான் பணி புரிந்த ஊரில் ஐந்து சென்ட் காலிமனை வாங்கி விட்டிருந்தார். அதில் வீடு கட்டி ஊரை விட்டு குடிபெயர்ந்து  கட்டிய வீட்டில் குடி புகுந்தார்கள்.

கடைசியாக அவர் பிள்ளையாருக்கு வைத்த அருகம்புல்லும் , வெள்ளெருக்கனும் காய்ந்து காற்றுக்கு சிதறிக்கிடந்ததை ஊருக்கு வந்த போது பார்த்தேன். குடிப்பெயர்ந்த ஊரில் மாதவிலக்கு சரிவர இல்லாத பெண்ணுக்கு இவர் ஏதோ கசாயம் தயாரித்துக்கொடுக்க, உதிரபோக்கு அதிகமாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண்ணின் உறவினர்கள்  மருத்துவ மனைக்கு தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார்கள்.

வாத்யேருக்கு ஓரிரு அடிகளும் வசவுகளும்  விழ கூனிக்குறுகிவிட்டார் . மனைவி வசந்தாவிற்கும் வாத்யேருக்கும் கூட வார்த்தைகள் முற்றிய நிலையில் வாசலில் தள்ளி கதவை அடைத்து விட்டாளாம். விடியும் வரை கை கூப்பியபடியே வாசலில் ஏய்...வசந்தா...ஏய் வசந்தா கதவை தெறடி என கதறியிருக்கிறார். கதவு மட்டும் தான் திறந்தது. ஐந்து சென்ட் இடத்தில் காலியாக இருந்த இடத்தில் மூங்கில் கம்புகளை இணைத்து தென்னை ஓலைகளால் கூரை வேய்ந்துக்கொண்டு , தனியாக சமைத்து உண்டு வருவதாக  அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தார். அம்மா சொல்லித்தான் இதெல்லாம் எனக்கு தெரியவந்தது.

பொங்கல் , தீபாவளிக்கு ஊருக்கு வந்துவிடுவார். அனைவர் வீட்டிலும் குசலம் விசாரித்துவிட்டு போகும்போது பலகாரம் , முருங்கை கீரை, தேங்காய், அவரவர் வயலில் விளைந்தவற்றில் எதையாவது ஒன்றை  கட்டி கொடுத்து அனுப்பிவிடுவார்கள்.

கடந்த பொங்கலுக்கும் முந்தைய தீபாவளிக்கும் கண்களுக்கு தென்படவேயில்லை பல்னிவாத்யார்.

மறுமுறை ஊருக்கு வந்தப்பின் இரவு அம்மா சூடாக களி கிளறி உருண்டை பிடித்தபடியே, நம்மூட்டு களின்னா , வாத்யேர் கிண்ணியெடுத்துனு வந்துருவார். சிறு அரிசிநொய் போட்டு களி கெளறுனா இன்னொரு உண்டை குடுய்யானு வாங்கினு போவான் மனுஷன் என்றதும் தான் நினைவுக்கு வந்தது.

தட்டிலிருந்த சூடான களியை கிள்ளி உருட்டியபடியே ..

போன பொங்கலுக்கு கூட வரலையேம்மா ..என்னாச்சும்மா

அடயேண்டா...இவ்ள வய்சியாயிம் அந்த பொம்பள திருந்துன பாட்டக்காணோம்... தனியா குடிசை போட்னு  ஆக்கிதின்ன கூட வுடல அவ. இந்த ஆளு மூங்கிலரிசி, வரகு சாமைன்னு வாங்கி பொங்கி தின்னா, அவ அப்பன் வூட்டு  சொத்து போன மாதிரி எகுறு எகுறுனு எகிரிட்டா,  உங்கத்தாக்காரி சம்பாரிச்சி சொத்து சேத்துட்டு போயிட்டாளா?  வக்கனையா பாத்து பாத்து வாங்கித்தின்றதுக்குன்னு அப்டியான கேளுவி கேட்டு... கோழி குப்பையை கெளறுனா கணக்கா, அந்தாளு குடிசையை கெளறிவுட்டுட்டா, அன்னிக்கு ராவே ஊரை வுட்டு போயிட்ட மனுஷன் தான்..எங்க போனானோ என்ன ஆனானோ..!? ..ஆனா ஒன்னுடா, பெத்தவ வகுறெரிஞ்சா பெத்த புள்ளைகளுக்கு சேரும்னு உங்க தாத்தன் சொல்லுவாப்டி..அந்த மாரியே ஆயிரிச்சி அந்த வாத்யேர் பொழப்பும்.

காலை எழுந்ததும் ஊரின் மையத்திலிருந்த பல்னி வாத்யேரின் வீட்டை பார்த்தேன். வீட்டுச் சரிவில் ஓடுகளின் வரிசை கலைந்து கிடந்தது. சரிவின் பக்கவாட்டத்தில் யாரோ பூசனிக்கொடியை ஏற்றிவி்ட்டிருந்தார்கள்.  சூம்பிய நிலையில் ஓரிரு பூக்கள் பூத்திருந்தது. மெல்ல தாழ்வாரத்திற்குள் நுழைய எப்போதோ கட்டித்தொங்க விட்டிருந்த சோற்றுக் கற்றாழை வாடிய நிலையில் தொங்கிக்கொண்டிருந்தது.

வீட்டில் பழைய நாட்டு மருந்து நெடி சுத்தமாக இல்லை. உடைந்த நிலையில்  ஒலிநாடக்களை உருவி வெளித்தள்ளிய கேசட்டை கையிலெடுத்தேன்.  ஆண்டாள் பாட்டி பாடிய நடவு பாட்டும் தாலாட்டு பாட்டும் பதிவு செய்ததாக இருக்குமோ ! அதுவாகவே இருந்தாலும் இனி பயனில்லை.அங்கேயே வீசிவிட்டு வெளியே வந்தேன். மண் மூடிகிடந்த ஆட்டு உரலில் ஒரு ஆமணக்கு  முளைவிட்டிருந்தது.

முகப்பு படம் மற்றும் படங்கள் : ரெங்கா கருவாயன்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)