பதிவு செய்த நாள்

29 மே 2018
12:50

வீட்டிற்குள் நுழைந்ததும்  வீட்டின் பின்புறம் சரிவாக வேய்ந்திருந்த கூரையின்   அடுப்படியில் அம்மா, சட்டியில் பருப்பு கடைந்துக்கொண்டிருந்தாள் .காலடி சத்தம் கேட்டதும் திரும்பி “வாடா...நீ மட்டும் தான் வந்தியா?” என்ற குரலில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. பேத்தியும் மருமகளும் வருவார்களென எதிர்பார்த்திருப்பார்  போலும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையேனும் சொந்த கிராமத்திற்கு வருவது வழக்கம்.

நகரத்திலிருந்து ஒரு மணிநேரப் பயணம். நீளவாக்கில் அரிந்து வைத்திருந்த பச்சை நிற நாட்டுக் கத்தரிக்காய்கள் நெத்திலி மீனைப்போல் நீரில் மிதந்துக்கொண்டிருந்தது. அடுப்படியைச் சுற்றி வெங்காயத் தோலும் பூண்டுத் தோலும்  நறுக்கியெறிந்த கத்திரிக்காய் காம்புகளும்  கலைந்துகிடந்தது. அம்மாக்கு கேஸ் அடுப்பில் எப்போதும் சமைக்கப் பிடிப்பதில்லை. மழைக்காலங்களில் மட்டும் தான் கேஸ் அடுப்பை பற்றவைப்பார். மற்ற நாட்களில்   விறகு அடுப்பு தான். விறகு அடுப்பின் சமையலில் தான் சுவையென்பதால் ஊதி ஊதி எரியவிடுவார்.

மாட்டு கொட்டகையில்  அப்பாவின் கயிற்றுக் கட்டிலில் இரண்டு கோழிகள் படுத்திருந்தது. அப்பா எப்போதும் இப்படித்தான் வீட்டில் படுக்கவே மாட்டார். இடியோ… மழையோ எதுவாக இருந்தாலும் மாடுகளுடன் எப்போதும் மாட்டு கொட்டகையில் படுத்து பழகிவிட்டாலும் , மாடுகளை விற்றப்பின்னும் கொட்டகையை விட்டு தன் ஜாகையை மாற்றிக்கொள்வதாக தெரியவில்லை. கொசு கடிக்கு உடைந்த பானையின் அடிப்பாகத்தில் தென்னை மட்டைகளை போட்டு நெருப்பு மூட்டி நொச்சி மற்றும்  வேப்பிலை கொத்துகளை வைத்து புகை மூட்டம் போட்டுக்கொள்வார் . போன மாதம் தான் கொசு வலை ஒன்று வாங்கி கட்டிலை சுற்றி  கட்டிவிட்டுப் போயிருந்தேன். முன்புற கொசுவலைகளை சுருட்டி மேற்புறமாக தூக்கி கட்டி வைத்திருப்பது தெரிந்தது.

“அப்பா..எங்கம்மா?”
“அந்த மனுசனோட ஓரியாட முடியலை சாமீ, வேணா வுட்ருனு சொன்னாலும் கேக்கறதில்ல, யாருக்கானா வாரத்துக்கோ குத்தகைக்கோ வுட்ரு எதோ வெளஞ்சி வரதுல அவங்க குடுக்குறதை வாங்கிக்கலாம்னாலும் காதுல வாங்குறதில்லை. நெல்லு நாத்து வுட நாத்தங்கால் கொத்த, காத்தால போன மனுஷன். அந்தாளுக்கு தான் சாப்பாடு செஞ்சினிக்கீறன். நீ போய் குளிச்சிட்டு வா , சாப்பாடு போட்டுத் தரேன் குடுத்துட்டு வந்துடுவ” என இரும்புக்கரண்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி கல்லெண்ணைய் ஊற்றி வடகம் போட்டு தாளித்து சாம்பார் சட்டியில் “சியிங்ங்” என கரண்டியை விட்டு தட்டு வைத்து மூட, எனக்கு சுர்ரென்று கோபம் தலைக்கு ஏறியது.

“வயசு போன காலத்துல எதுக்குமா  இந்த வேலை? எங்கனா தடுமாறி வுழுந்து இடுப்பு கிடுப்பு ஒடைச்சிக்கிட்டார்னா, யார் கீறாங்க? பக்கமா பாத்துக்கறதுக்கு சொல்லு..? உங்க ரெண்டு பேருக்கும் எவ்வளவு ஆகிடும்? இருவத்தஞ்சி கிலோ அரிசி வாங்குனா ஒன்ற மாசம் வரும். போதாதா? எடப்புல தடப்புல நான் வந்துனுதானே கீறன்..வேணுங்குறதை வாங்கிப்போட்டுப் போறன்..சமைச்சி சாப்புட்டுனு அக்கடானு இல்லாத, எதுக்கு வயித்தெரிச்சலை கொட்டிக்கிறாரு?” என்றேன்.

“அது சொன்னதுக்கு அந்த மனுஷன் அப்படியான கேள்வி கேட்குறாரு... பேரன் பேத்திங்க வெளிய அரிசி வாங்கி தின்றது புடிக்கலையாம். நம்ம மண்ணுல தழதாம்பு, எருவு போட்டு  வெளைஞ்ச நெல்லத்தான் தின்னனுமாம். அப்படினு சுப்பன் ஆசேரிக்கிட்ட சொல்லினு திரும்புறாப்டி . அதுக்கு ஆசேரி வயசு இருஞ்சி பாடுபட்ட கஷ்டப்பட்ட இப்பதான் மக்கமாருங்க வேலைக்கு போய் சம்பாரிக்கறாங்கலே..ஒக்கார்ந்துனு சிவனே தின்னுனு இருக்காத, ஒத்தையா லோல்பட்டனு கீறது நல்லாவா கீதுனு கேட்டதுக்கு, ஆசேரியை வண்டை வண்டையா கேட்டுவுட்டுட்டாரு... உங்கப்பனுக்கு யார் சொல்லு மண்டைக்கு ஏறிங்கீது சாமி? இன்னும் வயிசி கொமரனாட்டாம் செனக்கியும் கடப்பாரையும் எடுத்துனு போயினேகீறாப்டி எனக்கு என்னான்னு தான் அந்த சீமயில இல்லாத கடவுளு இன்னும் என்னாயென்னா படனும்னு எந்தலயிலயெழுதி வைச்சினுக்கீறானோ தெரிலை. நானெல்லாம் இருக்ககூடாதுறா சீக்கிரமே போயி சேந்துரனும்.” அம்மா இப்பொதெல்லாம் அதிகமாகவே  சலித்துக்கொள்வதாக தோன்றியது.

“சரி..யாராவது ரெண்டு கூலியாளுங்களுக்கு சொல்லி விட்டு இருக்காலாமே?”

“நாலு கோரபாய் அகலத்துக்கு கொத்த கூலியாளுங்க வைக்கனுமானு, வீராப்பு பேசுற மனசனாண்ட யார் பேசுறது? ..மின்ன மாதிரி ஆளுங்களும்  கெடைக்கிறதில்ல...கல்லு பாக்டரிக்கு பாலிஷ் போட்றதுக்கும், நூறு நாள் ஏரி வேலைக்கும்  போராங்க. சரி, இந்தா பொழுது ஏறினு வருது  சாப்பாடு குடுத்துட்டு வந்துடு,..நேரமானா அதுக்கும் நாறிக்குவாப்டி.”

மூன்றடுக்கு கேரியர் சூடாக இருந்தது. அம்மா ஓயர்கூடையில் வைத்துக்கொடுத்தாள். எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.இரண்டு தென்னந்தோப்புகளை கடந்தால் அணையின் உபரிநீர் வாய்க்கால். வாய்க்கால் கரையில் பல ஆண்டுகளாக வளர்ந்து பருத்திருந்த  புளியமரங்களில் குத்தகைகாரர்கள் ஆட்களை வைத்து புளியம்பழம்  உலுக்கிக்கொண்டிருந்தார்கள்.

பெண்கள் புளியம் பழங்களை சேகரித்து அங்காங்கே குமித்து வைத்திருப்பது தெரிந்தது. வாய்க்காலில் ஒரமாக பாசிபடர்ந்த நீர் மெல்ல நகர்வதை மிதந்து நகரும் புளியஞ் சருகுகளை வைத்து அறியமுடிந்தது. காக்கி நிற அரைக்கால் சட்டை மட்டும் அணிந்தபடி  மூன்று சிறுவர்கள் மீன்பிடிப்பதும், மணலில் ஊற்றுக்குழி தோண்டி அதில் சில உழுவை மீன்களையும் சப்பாரை மீன்களையும் விட்டிருந்தார்கள். அவைகள் இளவெயிலுக்கு சயனித்தபடியே நீரில்  அசைவற்று கிடப்பது தெரிந்தது.

வாய்க்காலில் வெள்ளம் வரும்போதெல்லாம் நான்கு கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு தான் போகவேண்டும். இப்போதெல்லாம் அப்படியில்லை. வெள்ளம் வந்து முப்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது.  வாய்க்காலுக்கு குறுக்கே  நடைபாலம் கட்டிகொடுத்துவிட்டிருந்தது அரசு. பாலம் ஏறி இறங்கியதும் தாழம்பூ கிணறு வந்துவிடும். கிணற்றின் கரையில் தாழம்பூ புதர் வளர்ந்து வளைந்து தண்ணீரை எப்போதும் தொட்டுக்கொண்டிருக்கும்.   கிணற்றின் நீரை குனிந்து கையிலே அள்ளிவிடலாம். வாய்க்காலை ஒட்டிய கிணறு என்பதால் நீரோட்டம் ஊற்றெடுத்து கிணற்றை நிரம்பியடியே வைத்திருக்கும். பக்கத்திலிருந்த  கல் பலகை ஈரமாக இருந்தது. நீலவண்ண துணிசோப்பின் காகித உரை கோரைபுல்லில் சிக்கியிருந்தது. யாரோ குளித்துவிட்டி துணிகளை துவைத்தெடுத்துகொண்டு போயிருக்க வேண்டும்.

செருப்புடன் கூடிய கால்களுடன் ஈரமான வரப்பில் நடப்பதற்கு சிரமமாக இருந்தது. சேற்றை வாரி வரப்பின் மீது வைத்து அழுத்தி வரப்பை அகலப்படுத்தியிருந்தார்கள். ஒரு தாய் வயிற்றில் ஒட்டி பிறந்த பிள்ளைகளை கூட வரப்புகள் பிரித்துவிட்ட கதைகள் ஊரில்  ஏராளம்.  இன்னும் ஐந்தாறு வயல்களை கடந்தால்  தார்சாலை வந்துவிடும். வரப்பில் வழிமறித்த ஒற்றை பனைமரத்தை தலை தூக்கிப்பார்த்தேன்.காய்ந்த பனைஓலைகள் தொங்கியபடி மரத்தை உரசிக்கொண்டிருந்தது. நடுமரத்தில் ஓணான் தலைகீழாக இறங்கும் திசை நோக்கி தலை தூக்கியபடி ஒட்டிக்கொண்டிருந்தது.

அடி மரத்தில் ஊனாங் கொடிகள்  மரத்தை பற்றி மேலெழும்ப சுற்றியபடி காற்றில் அசைவதுமாக இருந்தது. ஒரு முறை இதில் நுங்கு குலை வெட்ட ஏறி, கையும் களவுமாக பிடிப்பட்டதும். இன்னார் மகனென்று தெரிந்ததும் , “பார்த்துறா மாப்ள, எதுனா வுழுந்து கைகாலு ஒடைச்சிக்கினன்னு வையி, ஒங்கப்பனுக்கு பதில் சொல்லமுடியாது” என எச்சரித்து விட்டு போனது  நினைவுக்கு வந்தது.

கரையின் சரிவுகளில் சுற்றிலும் தென்னந்தோப்புகளால் சூழ்ந்த பகுதியின் மையத்தில் முழுவதும் நெல்வயல்கள். கிணற்றுப்பாசனத்திற்கு அவசியமில்லாததால் பெரும்பாலான  கிணறுகள் நீர் நிரம்பி பாசி படர்ந்திருந்தது.

தார்சாலையிலிருந்து பார்த்தால் வயல் தெரியும். பக்கத்து வயலில் நான்கைந்து பெண்கள் குனிந்தபடி களைபறிப்பது  தெரிந்தது. நடந்துக்கொண்டிருந்த வரப்பின் குறுக்கே திடீரென ஓடிய கானாங்கோழி திக் கென்று ஒரு நொடி பயத்தை காட்டிப்போனது.

வயலில் ஒரு ஒரமாக பாத்தி அகலத்திற்கு சேற்று மண்ணை கொத்திப்  போட்டபடி இருந்தது. அப்பாவை காணவில்லை. மண்வெட்டி மட்டும்  சேற்று நீரில் பாதி நனைந்து மண்ணில் வெட்டியபடி சாய்ந்த வாக்கில் கிடந்தது. வரப்பில் அப்பாவின் வெள்ளைநிறத் துண்டு மட்டும் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. அரவம் கேட்டு நிமிர்ந்த களை பறிக்கும் பெண்களில் ஒருவர்  “யா... கண்ணு அப்பனுக்கு சாப்பாடு கொணாந்தியா?..இங்க தான் சேத்துல குத்தலாடினு இருந்தாப்டி, கெணத்துக்கா தண்ணி கிண்ணி குடிக்க போயிருப்பாரு ..இரு கூப்புடுறன்.”

என அப்பாவை “யேய்...யண்ணா” என்று அழைத்தும் கிணற்று மேட்டின் வேப்பமர நிழலில் படுத்திருந்த அப்பா எழுந்து நிற்பது தெரிந்தது. சாப்பாட்டு கூடையை அங்கே கொண்டு போய் கொடுத்துவிடலாம் என செருப்பை உதறிவிட்டு பாசன வாய்க்காலில் தேங்கியிருந்த நீரில் நடக்க, வயல் நண்டுகள் வளையில் புதிய மண்ணை வெளித்தள்ளியிருந்தது. அறுவடை காலங்களில் பாட்டி நண்டுகளை சேகரித்து உரலில் நசுக்கி சாரெடுத்து ரசம் வைத்த காலங்கள் ஏனோ தேவையில்லாமல் நினைவுகளை கிளறியது.  அப்பா எப்போதும் பேசமாட்டார்.

எதைக் கேட்டாலும் மௌனமாக தலையை மேலும் கீழும் அசைப்பார்.  வேப்ப மரத்தடியில் ஒரு கட்டு  தழைகளை சேகரித்து கட்டி  வைத்திருந்தார். அதில் வெள்ளெருக்கனும்  வேப்பிலையும்  மட்டுமே இருந்தது. தழைக்கட்டினை தலையணையாக்கியபடி மேலிருந்து நீள வாக்கில் விரித்து போடப்பட்டிருந்த வேட்டியை எடுத்து உதறி இடுப்பில் சுற்றிக்கொண்டார். வயிறு சுருங்கி உள் வாங்கியும் , மார்புக்கூடுகள் சிதிலமடைந்த பஞ்சாரக்கூடையை போல் துருத்திக்கொண்டிருப்பதை கண்டதும் மனதில் பாரம் கூடுவதை நன்றாகவே உணர முடிந்தது.

வீட்டிற்கு பின்புறம் வெற்றிலை கொடிகால் இருந்த வரை தழைக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. அகத்தி, பூவரசு , தகரையென வெட்டிச் சேர்த்துவிடுவோம். தழைகளை மரக்கட்டையில் வைத்து அரிவாளால் வெட்டுவது  எனக்கு மிகவும் பிடிக்கும். நடவுக்கு ஓட்டிய வயலென்றால் ஒரு வண்டி தழை வேண்டும். அதை கத்தரிக்க  இயந்திரத்தை வாடகைக்கு எடுத்து கத்தரிப்போம். அத்தனையும் நறுக்கி கூடையில் அள்ளி சேற்றில் இறங்கி சமமாக கொட்டி விடுவோம். நாற்றங்காலுக்கு அவ்வளவு தேவையில்லை. பெரும்பாலும் ஊரைச்சுற்றிய பகுதிகளிலிலே தழைகளை தேற்றிவிடுவோம். பற்றாக்குறைக்கு இரண்டு பெண்ணாட்களிடம் சொல்லி வைத்தால் எங்கிருந்தாவது புங்கை , எருக்கன் ஆவாரங்குலைகளை பூவோடு கட்டி கொண்டு வந்து சேர்த்துவிட்டு காசு வாங்கிக்கொள்வார்கள்.  அதற்கெல்லாம் இப்போது வழியேயில்லை. அப்பா சாப்பாட்டு கூடையுடன் கிணற்றையொட்டிய கல்லில் அமர்ந்துக்கொண்டார்.

தழைக்கட்டை  தூக்கிக்கொண்டு நாற்றங்கால் அருகில் போட்டுவிட்டு வரப்பில் இருந்த அப்பாவின் துண்டை எடுத்து உதறி இடுப்பை சுற்றிக்கொண்டு கைலியை உருவி..சட்டையைக் கழற்றி வரப்பில் வைத்துவிட்டு சேற்றில் இறங்கினேன்.

“ஏப்பா...ராஜா  என்னை அடையாளம் தெரிலியா?” கேட்ட திசையில்   களைபறித்துக்கொண்டிருந்த பெண்களில் ஒருவர் முன் நெற்றியில் நரை முடிகள் புரள கேள்வி கேட்டவரை கொஞ்சம் நெற்றியை சுருக்கி யோசித்தேன். அவரே அதை உணர்ந்துக்கொண்டவராய் “நான்தான் செல்லம்மா..ஒன்னோட ஒன்னா படிச்சவ, டவுனுக்கு போனதும் போனிங்க எல்லாத்தியும் மறந்துட்டிங்க” என்றதும் வெட்கம் சம்மட்டியில் அடித்தது.

ஆமாம்...செல்லம்மா ஆறுமுதல் பத்து வரை ஒன்றாக படித்தவள். “சாரி செல்லம்மா...பாத்து பல வருஷமாச்சு ..எப்படி இருக்க?” என்றதும் அருகிலிருந்த பெண்மணி  “அவுளுக்கென்னா ..ஒன்னுக்கு ரெண்டு பேரன் பேத்தியே எடுத்துட்டா” என்றதும் செல்லம்மா “யேய்..சும்மாக்கமாட்ட” என வெட்கப்பட்டாள்.

செல்லம்மா படிப்பில் கெட்டிக்காரி இல்லையென்றாலும் கபடியில் சூரக்குட்டி. இவள் ஆட்டத்தை பார்க்க தலைமையாசிரியர் முதற்கொண்டு ஆஜராகி விடுவார்கள்..ஆட்டத்தின் போக்கையே நொடியில் மாற்றி வெற்றியை தன் அணியின் பக்கம் திருப்பிவிடுவாள். பக்கத்து கிராமத்திலிருந்து பொடிநடையாக நடந்து பள்ளிக்கூடம் வருவாள்.  மாலை நேர ட்யூசன் வகுப்புகளுக்கு வருவாள். ஒரு முறை தரையில் வட்டமாக அமர்ந்து  செங்குட்டவன் அய்யா மையமாக புத்தகத்தை விரித்து வைத்து இலக்கணம் நடத்திக்கொண்டிருப்பதை, முழங்காலிட்டு முன் புறம் கைகளை ஊன்றியபடியே பாடத்தை கவனித்துக்கொண்டிருந்தோம்.

வெகு நேரம் கைகளை ஊன்றியதால் வலிக்கவும் , அருகில் இருந்த தோள் மீது கை போட்டுக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தேன். அய்யா என்னை பார்ப்பதும் புத்தகத்தை கவனிப்பதுமாக இருந்தார். பின்பு தான் தெரிந்தது செல்லம்மாவின் தோள் மீது கை போட்டுக்கொண்டிருந்தது. செல்லம்மாவும் அப்போது தான் கவனித்தாள்.  வெட்கம் ததும்பி முகத்தில் வழிந்தது. இதெல்லாம் கையில் களையோடு நின்று பேசிக்கொண்டிருக்கும் செல்லம்மாவிற்கு நினைவில் இருக்குமா? வகுப்புத் தோழிகள் சிலரை மறக்காமல் இருப்பதற்கு பெரும்பாலும் புற நிறத்தழகும், படிப்பில் சுட்டியாக இருப்பதும், பெருங்காரணம். செல்லம்மா இதில் எதுவுமில்லையென்றாலும், பள்ளியில் மாவட்ட அளவிலான வீராங்கனை. அவளை மறந்து போனதற்கு என்னையே நொந்துக்கொண்டேன்.

“ஏ…ராஜா ..இப்ப என்னாத்துக்கு நீ சேத்துல யெறங்கினு கீற...உனக்கென்னாத்துக்கு இந்த வேலை? இடுப்பு கிடுப்பு புடிச்சிக்கப்போவது. கல்யாணமாகி பத்து பாஞ்சி வருஷமே ஆயிட்டிக்கும்  என்னிக்கீயானா, இதான்  என்  பொண்டாட்டி புள்ளைங்கன்னு  கண்ல காட்டிங்கீறியா?” என்றவளுக்கு சிரித்தபடியே பதிலேதும் சொல்லாமல் மண்வெட்டியை சீராக்கி  நாற்றங்காலில் தேங்கியிருந்த நீரில் ஓங்கி மண்வெட்டியை இறக்கி மண்ணை கிளப்பி புரட்டி போட்டு மிதிக்க ஆரம்பித்தேன். உள்ளங் காலின் வழவழப்புக்கு தப்பி விலகியது சேற்றுக்கட்டிகள். சொந்த மண்ணே நம் கால்களுக்கு அந்நியமாகி விலகி விலகி போவதை உணரமுடிந்தது. ஏழெட்டு முறை கொத்தியிருப்பேன் பேய்மூச்சு வாங்கியது.

அப்போதெல்லாம் நாற்றாங்காலுக்கு நீர் பாய்ச்சினால் கூட்டம் கூட்டமாக நாரைகள் வந்துவிடும். வயல்வெடிப்பில் பதுங்கியிருக்கும் பூரான் பூச்சிகள் மேலெழுந்து வரும். இப்போது பூச்சிகளும் இல்லை நாரைகள் வருவதுமில்லை.  வரப்பு ஓரங்களை கச்சிதமாக வெட்டி இழுத்து  வயலின் மையத்தை நோக்கி வீசுவேன். சடசட வென நாரைகள் பறப்பதும் மீண்டும் அமர்வதுமாக இருந்த வயலில் இப்போதெல்லாம்  நீரை பாய்ச்சியதும் பூமி தன் வெப்ப மூச்சினை குமிழிகளாக வெளியேற்றி வெடித்து தாகம் தீர்த்துக்கொள்வதாகப்பட்டது. என்னால் தொடர்ந்து சேற்று மண்ணை கொத்த முடியாமல் மூச்சின் இரைச்சல் லாடத்திற்கு கால்களை நீட்டிய காளையின் மூச்சுக்கு கொஞ்சமும் குறைந்ததாக இல்லை.

வாங்கும் மூச்சை கட்டுப்படுத்த சற்று வரப்பில் உட்காரலாம். செல்லம்மா இருக்கிறாளே!. அரை பாத்தி அளவிற்கு கொத்தி மண்ணை திருப்பி போட்டிருப்பேன். தொண்டை வறண்டு வருவதை உணர முடிந்தது.  மார்புக்கூடுகளி்ன் அவஸ்தை வேர்வையாக வெளியேறியது.

அப்பா சாப்பிட்டு முடித்து கூடையை எடுத்துக்கொண்டு வரப்பில் தள்ளாடி வருவது தெரிந்தது. வந்தவர் என்கையிலிருந்த மண்வெட்டியை அவராகவே வாங்கிக்கொண்டது அவமானமாக இருந்தது. வெட்டி திருப்பிப்போட்ட சேற்றுக்கட்டிகளை அவர் மீண்டும் இரண்டாக வெட்டி மிதித்து தன் பாதங்களால் நிரவினார். செல்லம்மா குனிந்தபடியே களை பறிப்பது ஆறுதலாக இருந்தது.

அப்பா கொஞ்ச நேரம் வெட்டினார். பின்பு சிறிது நேரம் சேற்றுகட்டிகளை மிதித்து நிரவி விட்டு சேகரித்து வைத்த தழைகளை நறுக்கிக் குவித்தேன். நாற்றங்காலுக்கு இவைகள் காணாது. எருவு அடிக்கலாம். ஊரில் வண்டி எருதுகள் , ஏர் மாடுகள்  எப்போதோ காலம் களவாடிக்கொண்டது. வீட்டிற்கு ஓரிரு கறவை மாடுகள் வைத்திருப்பார்கள். அதன் எரு அவர்களுக்கே பற்றாது.

ஒரு வழியாக முக்கால் பாகத்திற்கும் மேலாக கொத்தி மிதித்து நிரவி பண்படுத்தி விட்டார் அப்பா. செல்லம்மா வயலின் பிரிவு வாய்க்காலில் கை கால்கள் அலம்புவது தெரிந்தது.

மாலை சூரியன் மேற்கு திசை தென்னந்தோப்பில் இறங்குவது தெரிய கிணற்றில் குதித்து நீந்தியவாக்கில் தண்ணீர் பாம்புகள் தென்படுகிறதாவென நோட்டமிட்டேன்.  கண்ணிலேதும் படவில்லை.  ஈரத்தலையை சிலுப்பியபடி பாசிபடர்ந்த படிக்கட்டுகளை பிடித்து எம்பி கரையேறினேன். கைலியை முடித்துக்கொண்டு கையில் செருப்புகளை பிடித்தபடி வரப்பில் நடக்க, எதிரே செல்லம்மா வந்துக்கொண்டிருந்தாள். மடி சற்று பெருத்து வலது இடதாக ஆடிக்கொண்டு வந்தது.
“என்ன செல்லம்மா...மடியில?”
“பொன்னாங்கன்னி கீரை ஒரு சொட்டு மருந்துக் கூட இல்லாம முளைஞ்சது. ஊருக்கு எடுத்துனு போறியா?” என்றவளை “வேணாம் ..செல்லம்மா நீ எடுத்துட்டு போ” என மறுத்தபோதே, செல்லம்மாவை அப்பா கூப்பிட்டார்.

“யேய்..புள்ள...அவனை ஊருக்கு போறதுக்குள்ள உரக்கடையில பத்து கிலோ யூரியா வாங்கி வைச்சிட்டு போக சொல்லு” என்பது என் காதில் கேட்கும் படி உரைக்க…மேற்கே அந்திச் சிவப்பை உரசியபடி பறவைக்கூட்டம்  வலசை திரும்புவதை ரசிக்கமுடியாமல், நான்  வலசையிலிருந்து வேறொரு கூட்டிற்கு கனத்த மனதுடன் பறக்கத் துவங்கியிருந்தேன்.

- இல.ஜெகதீஷ்.வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)