பதிவு செய்த நாள்

30 மே 2018
16:03
கடல்புரத்தில் - வண்ணநிலவன்

சில நல்ல புத்தகங்கள் படிக்கையில், அவை நம்மையும் அந்த சூழ்நிலையை அனுபவிக்க ஏங்க வைக்கும். சில புத்தகங்கள் அதில் வரும் கதாபாத்திரங்களுடன் நம்மை பயணிக்க வைக்கும். சில புத்தகங்களின் கதைமாந்தர்கள் உங்களுடன் வாழ்ந்த சிலரை உங்களுக்கு நினைவு படுத்தலாம். மேலும் சில சிறந்த புத்தகங்கள் மேற்கூறிய அனைத்து உணர்வுகளையும் ஒருசேர நமக்கு அளிக்கலாம். அந்த வகையில், வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலை மறுபேச்சில்லாமல் அந்த வரிசையில் சேர்க்கலாம்.

மணப்பாட்டு கிராமத்தில் ஒரு மீனவ குடும்பத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு குறுநாவல். மீனவனின் வாழ்க்கையில் ஒன்றென இணைந்து போன படகு, குடும்பம், பாலியல் ஆசைகள், நிறைவேறாத காதல்கள், தொழில்முறை போட்டிகள் மற்றும் அதனால் ஏற்படும் இழப்புகள் இப்படி எல்லாவற்றையும் மிக அழகாக எடுத்துச்செல்கிறது இந்நாவல்.

திருமணத்திற்கு முன்பே அதீத காதலால், களவியில் ஈடுபட்டு திருமணம் ஆகவில்லையென்று முதலில் வருந்தி பிறகு அதை கடந்து போகும் பிலோமி, தன்னுடைய திருமணத்திற்கு பிறகும் வாத்தியாரை சந்திக்க செல்லும் மரியம்மை, மகன் மேல் அவ்வளவு அக்கறையும் அன்பும் இருந்தும் அவன் கேட்கும் பணத்தை கொடுப்பதற்காக படகை விற்க முடியாமல் இருக்கும் குரூஸ் மைக்கேல், திருமணத்திற்கு பிறகும் செபஸ்தியின் மேல் ஒருவித அன்பில் இருக்கும் ரஞ்சி... இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்குள்ளேயே அன்பு, சோகம், கோபம் என எல்லா உணர்வுகளோடும் திரிவது நாவலின் மிகப்பெரிய பலம்.

மனித வாழ்வில் அன்பும் அக்கறையும் ஊற்றெடுக்கையில், எந்தவொரு சுயநலமும் பொறாமையும் அன்பின் முன் பொசுங்கியே தீரும். அந்த வகையில் இந்த நாவலின் ஆரம்பத்தில் ஒவ்வொருவரும் தனக்கான எதிர்காலத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையில், அன்பு என்ற அது எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி அனைவரையும் ஒன்றிணைப்பதாய் முடித்திருக்கும் நாவலில் இயல்புநிலை மீறாமல் இருப்பது, எழுத்தாளரின் மிகப்பெரிய திறமை.

- ஜான் பிரபு

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)