சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் எப்படியிருந்திருக்கும்? ஆட்சி நிர்வாகம், மக்கள் தொகை, வாழ்க்கை நிலை இவற்றையெல்லாம் எப்படித் தெரிந்துகொள்வது? வரலாற்றுச் சாட்சியங்களான பல ஆவணங்களை பார்த்துத் தெரிந்துகொள்ள நாம் செல்ல வேண்டிய இடம் தமிழ்நாடு ஆவணக் காப்பகம். சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தின் எதிரில் அமைதியான சூழலில் மரங்கள் சூழ பரந்து விரிந்திருக்கிறது தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் (Tamilnadu Archieves and Historical Research) சிவப்பு நிறக் கட்டடம். தமிழகத்தின் தலைமை ஆவணக் காப்பகமும், ஆவணக் காப்பக நூலகமும் இங்கு செயற்பட்டு வருகின்றன.
மெட்ராஸ் பிரசிடென்சியின் ஆளுநராக இருந்தவர் வில்லியம் பென்டிங் பிரபு. இவர், 1805இல் கிழக்கிந்தியக் கம்பெனி ஆவணங்களை முறையாகத் தொகுத்து ஒரே இடத்தில் பாதுகாக்க உத்தரவிட்டார். செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த கவுன்சில் அறை இதற்காக ஒதுக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகளுக்கும், இங்கிலாந்து அதிகாரிகளுக்குமான கடிதப் போக்குவரத்து ஆவணங்கள் இங்கு பாதுகாக்கப்பட்டன. ஒரு நூற்றாண்டு கால ஆவணங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. ஆவணங்களைப் பாதுகாக்க தனிக் கட்டடம் தேவைப்பட்டது. அப்போது உருவானதுதான் தமிழ்நாடு ஆவணக் காப்பகம். 'மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபிஸ்' என்ற பெயரில் 1909இல் தொடங்கப்பட்டது. 1968இல் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்று பெயர் மாற்றப்பட்டது.
மெட்ராஸில் கிழக்கிந்தியக் கம்பெனியினர் குடியேறிய காலமான 1639இல் இருந்து நிகழ்ந்தவை பற்றிய அரிய தகவல்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. தமிழக, இந்திய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கடிதங்கள், ஆவணங்கள், தமிழகத்தின் வரலாறு, நிர்வாகம் தொடர்பான பல அரிய ஆவணங்கள் இங்குள்ளன. மராத்தி மொழியை எழுதுவதற்குப் பயன்படும் மோடி அல்லது மோதியா என்ற எழுத்துவடிவில் எழுதப்பட்ட தஞ்சாவூர் அரசு ஆவணங்கள், டச்சு, டேனிஷ், பாரசீக ஆவணங்கள் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆவணங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
கிழக்கிந்தியக் கம்பெனி, நிர்வாக வசதிக்காக தென்னிந்தியப் பகுதிகளை மாவட்டங்களாகப் பிரித்தது. புதிதாக வரும் அதிகாரிகள் அந்த மாவட்டத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, ஆவணக் காப்பகத்தால் மாவட்டக் கையேடு பிரசுரிக்கப்பட்டது. மெட்ராஸ் மாவட்டக் கையேடு முதன் முதலாக 1868இல் வெளியானது. தொடர்ந்து, பிற மாவட்டங்களின் கையேடுகளும் வெளியாகின. இந்தக் கையேடுகளில் உள்ள தகவல்களைப் புதுப்பிக்க வேண்டிய தருணத்தில், புதியவற்றைச் சேர்த்து மாவட்டக் கையேடுகள் (District Gazetteers- டிஸ்ட்ரிக் கெசட்டியர்) வெளியிடப்பட்டன. முதல், மாவட்டக் கையேடு1906ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தைப் பற்றி வெளியானது. இன்று வரை இவை தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. இவை ஆவணக் காப்பகத்தில் விலைக்கும் விற்கப்படுகின்றன.
தமிழகத்தின் வரலாறு, நாகரிகம், பண்பாடு, வாணிகம் ஆகியவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கும் அரிய பொக்கிஷமாக தமிழ்நாடு ஆவணக் காப்பகம் உள்ளது. இந்தியாவிலேயே மிகப் பெரிய ஆவணக் காப்பகங்களில் முக்கியமானதாக இது திகழ்கிறது. நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இங்கிருக்கும் ஆவணங்கள் படி எடுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
ஆராய்ச்சி மாணவர்கள், இந்த ஆவணங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். பொதுமக்களும் கட்டணம் செலுத்தி, தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்றுத் துறை
காந்தி இர்வின் சாலை, எழும்பூர், சென்னை-8.
நூலக வேலை நேரம்: காலை 8 முதல் இரவு 8 மணி வரை
இணைய தளம்: http://www.tnarchives.tn.gov.in/
நன்றி : பட்டம்