வேளாண்மையில் நிலத்தை உழ வேண்டியது முக்கியம். அப்பொழுதுதான் நிலம் பண்பட்டு, நல்ல விளைச்சலைத் தரும். ஆனால், ஒரு நிலத்தை உழுது 25 வருடங்கள் ஆகின்றன. அதில் வரும் விளைச்சல், மற்ற எந்த உயர்தர பண்ணைகளைக் காட்டிலும் அதிகம். அதெப்படி, நிலத்தை உழாமல் விளைச்சல் எடுக்க முடியும்? இயற்கை முறையில், தன் பண்ணையில் இருபத்தைந்து வருடங்களாக நிலத்தை உழாமல், பயிரிட்டு வருவதாகச் சொல்கிறார், ’ஒற்றை வைக்கோல் புரட்சி’ புத்தகத்தின் ஆசிரியர் மசானபு ஃபுகோகா.
நிலத்தை உழுது, உரங்களைக் கொட்டி, வீரியமிக்க விதைகளை விதைத்து, பூசிகொல்லிகளைத் தெளித்து நாம் செய்யும் விவசாயம் மிகக் கேடானது. அப்படி வேலை செய்து, பயிரிட்டாலும் மிஞ்சுவதோ ஒன்றுமில்லை. ’உழுகிறவன் கணக்குப் பார்த்தால், உழக்கு கூட மிஞ்சாது’ என்று சொல்வார்கள். இவ்வளவு செலவழித்து, விவசாயம் பார்த்தால், வருமானம் என்பது சொற்பமே. இயற்கை முறையில், குறைந்த செலவில் விவசாயம் பார்க்கலாம் என்றாலும், அது சரிப்பட்டு வருமா என்ற தயக்கம் இருக்கும். வேளாண்துறை விஞ்ஞானிகளும், அறிஞர்களும் ரசாயனம், பூச்சிகொல்லி மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் சொல்வதை விடுத்து, விவசாயம் செய்தால் என்ன ஆகும் என்ற பயம் இருக்கும்.
இயற்கை முறை விவசாயத்தில், நாம் நுழைவதற்கு தடையாக இருப்பது அந்த பயமே. ஆனால், நம்மாழ்வார் போன்ற சில ஆசான்கள் நமக்கு வழிகளைக் காட்டுவார்கள். நடக்க வேண்டியது நாம்தான். அப்படி ஒரு ஆசான்தான், ஜப்பானைச் சேர்ந்த மசானபு ஃபுகோகா.
இளம் வயதில், தாவரங்களில் வரும் நோய்களைக் கண்டறியும் ஆய்வுகளில் பணி செய்திருக்கிறார். இயற்கை முறை விவசாயம் மீது நாட்டம் கொண்டு, தன் தந்தையின் ஆரஞ்சுப் பழத் தோட்டத்தில் இயற்கை முறையைப் புகுத்துகிறார். ஆனால், ஒரே மாதிரியான உரங்கள், பூச்சிக் கொல்லிகள், பயிர் வளர்ப்புக்கு பழக்கப்பட்ட அந்த மரங்கள் பட்டுப் போகின்றன. அவரின் தந்தை, இது சரிப்பட்டு வராது எனச் சொல்ல, மீண்டும் ஆய்வு வேலைக்கே செல்கிறார்.
இயற்கை முறை விவசாயம் மீதான ஆர்வம் தணியாமல் இருக்க, எட்டு வருடங்கள் கழிந்து மீண்டும் தன் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்கிறார் ஃபுகோகா. அதன் பின்னர், எந்த ஒரு நவீன முறைகளைப் பின்பற்றும் உயர்தர பண்ணையைக் காட்டிலும், அவரின் பண்ணையில் விளைச்சல் அதிகரிக்கிறது. அவரின் பண்ணையைத் தேடி வந்து, அங்கேயே அவருடன் தங்கி இளைஞர்களும், விவசாயிகளும் கற்றுக்கொள்கிறார்கள். இதுதான் புத்தகத்தின் கதைச் சுருக்கம். ஆனால் புத்தகத்தை முழுவதும் படித்து முடிக்கும்போது, இயற்கை விவசாயம் குறித்த தெளிவான பார்வையை நமக்கு அளிக்கிறது மசானபு புகோகாவின் எழுத்துகள்.