எந்த மொழியானாலும் பிரச்சனையில்லை
பிடிக்காதவர்கள் பெயர்களையும் சேர்த்து
உங்களுக்கு எத்தனைப் பெயர்கள் தெரியுமோ
அத்தனையையும் மனனம் செய்யுங்கள்
மறந்து விட்டால் அவர்களைத் தேடிப்போய்
பெயர்களைக் கேட்டு குறித்துக் கொள்ளுங்கள்
எங்கெல்லாம் பெயர்கள் தெரிகிறதோ
மழித்தலைப் போல மென்மையாக
வழித்தெடுத்து வாருங்கள்
பச்சைக் குத்தியிருந்தால்
கைமாத்தாக கேளுங்கள்
கொடுப்பார்கள்
கொள்ளையடிப்போம்
வழிப்பறி செய்வோம்
பெயர்கள் களவாடப்படும் வழக்குகள்
பல்கி பெருகட்டும்
பைகளில் பெட்டிகளில் சிந்துமளவிற்கு
பெயர்களை நிரப்பி வரிசையில் நில்லுங்கள்
ஒரு அரிசியில் இரண்டு பெயர்களைப்
பிழையில்லாமல் எழுதும் பிழைப்பறிந்த
நண்பனொருவன் இருக்கிறான்.
எண்ண முடியாத பெயர்களும்
எண்ண முடிந்த ஒரு அரிசியும்
மட்டுந்தான் அவன்
அவனுக்காகத்தான் இவ்வளவும்.
- முத்துராசா குமார்
நிழற்படங்கள் - ஸ்ரீதர் பாலசுப்ரமணியம், தியாகராஜன்