பதிவு செய்த நாள்

19 ஜூன் 2018
16:32
அற்றவைகளால் நிரம்பியவள் - பிரியா விஜயராகவன்

நான் இலக்கிய வாசகனில்லை. புனைகதைகளை அதிகமாகப் படிப்பவனில்லை. கடைசியாகப் பார்த்த இங்கிலீஷ் படம் ‘ஷோலே’ என்ற அளவில்தான் இருக்கிறது என்னுடைய இலக்கிய வாசிப்பு.

ஆனால், சமீபத்தில் நான் படித்து வியந்த, எனக்கு நல்லதொரு வாசிப்பனுபவத்தைக் கொடுத்த நூல், ‘அற்றவைகளால் நிரம்பியவள்’. மருத்துவர் பிரியா விஜயராகவன் எழுதியுள்ள நாவல். இரயில் பயணங்களில் தலைக்கு வைத்துப் படுத்துக் கொள்ளும் அளவிற்கு 712 பக்கங்கள் கொண்ட கனமான நூல். அதற்கு உள்பக்கங்களை வடிவமைத்தவன் என்ற முறையில் மூன்று முறை முழுமையாகப் படித்துவிட்டேன்.

பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்க முடியும்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டி, எவ்வளவுதான் அதீதமாகக் கற்பனை செய்தாலும், அதையும் தாண்டி அதிகமாக நடந்துவிடுகிறது இக்கதையின் நாயகி அஞ்சனாவுக்கு.

கதையில் 10க்கும் மேற்பட்ட ஆண்கள் வருகிறார்கள். எல்லோரும் அஞ்சனாவைக் காதலிக்கிறார்கள். சிலர் குடிக்கிறார்கள். உழைக்கிறார்கள். தத்துவம் பேசுகிறார்கள். புரட்சி செய்கிறார்கள். கைதாகிறார்கள்.

வெவ்வேறு கிராமங்கள், வெவ்வேறு நகரங்கள், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் கதைக்குள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு வகையில் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். சிலர் செத்துப் போகிறார்கள். பலர், வாழ வேண்டும் என்கிற விருப்பத்தில், துன்பங்களைக் கடந்து எழுந்து நிற்கிறார்கள். சிரிக்கிறார்கள். வாழ்வின் மகிழ்ச்சியைத் துய்க்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அடுத்தவர் மீதான அன்பை விட்டுவிடாதிருக்கிறார்கள்.

எண்ணற்ற கதைமாந்தர்கள், ஏகப்பட்ட கிளைக் கதைகளுக்கு ஊடாக, வாழ்க்கை என்பது ஏற்றுக் கொள்ளுதலும், அதிலிருந்து கற்றுக் கொள்ளுதலுமே என்கிற புரிதலில் நின்று, வாழ்வின் பக்கங்கள் அனைத்திலும் அன்பையே எழுதிச் செல்கிறாள் அஞ்சனா.

இந்நூலின் ஆசிரியர் பிரியா விஜயராகவன் லண்டனில் மருத்துவராகப் பணிபுரிகிறார். அவரது பரந்துபட்ட அனுபவங்களும், பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிவும் கதையில் விரவிக் கிடைக்கின்றன.

- ப.கலாநிதி

மேலும்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)