பதிவு செய்த நாள்

23 ஜூன் 2018
17:49

மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் மற்றும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதன் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன். யாவரும் பதிப்பகத்தில் வெளியான அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான ‘அம்புப் படுக்கை’ நூலுக்கு இந்த வருடத்திற்கான சாகித்ய அகாடமியின் ‘யுவ புரஷ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவரான அவர் காரைக்குடியில் வசித்து வருகிறார்.

நூல்வெளி.காம் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டுப் பேசத்தொடங்கினோம் அவரிடம். விருது அறிவிக்கப்பட்டதற்கான எந்த பரபரப்புமே இல்லை அவருடையப் பேச்சில்…

‘வாழ்த்துகள்…விருது அறிவிக்கட்டிருப்பது எந்த அளவுக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் அளித்திருக்கிறது?’

“என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு விருது அறிவிச்சிருக்காங்க. இந்த வெளிச்சம் கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. எப்பவுமே மறைச்சு வச்சிருக்கிற அல்லது புதைச்சு வச்சிருக்கிற வைரமாக இருக்கிறது ரொம்ப வசதியாக இருக்கும். இந்த வெளிச்சம் நல்லது செய்யுமா? செய்யாதா? என்பது தெரியலை. நம்மபாட்டுக்கு ஏதோ செஞ்சிட்டு இருக்கோம். அதை இந்த வெளிச்சம் தொந்தரவு செஞ்சிருமோ என்கிற பயமும் இருக்கு.

ஆனால் வேறு வகையில மகிழ்ச்சி இருக்கு. ஒரு குடும்பத்தில் ஒருவன் எழுத வருகிறான்னாலோ அல்லது அதற்காக மெனக்கெடுகிறான்னாலோ ‘இவன் என்னடா வேலையெத்த வேலை செய்யிறான்’னு நினைச்சுக்குவாங்க. ஆனா என்னுடைய அம்மாவும், மனைவியும் அப்படி நினைப்பதில்லை. பக்கத்துவீட்டுக்காரரு திடீர்னு வந்து நம்மகிட்ட கேக்குறாரு. திடீர்னு நாலு பேர் போன் பண்ணி வாழ்த்து சொல்றாங்க. சமூகம் நம்மலை கவனிக்குது. அப்படியிருக்கும்போது, ‘ஏதோ ஒன்னு செய்யிறான் இவன்’னு அவங்க நினைக்கும்போது, குற்ற உணர்வு இல்லாம எழுதலாம். அதில்லாம இதுல இருந்து சம்பாதிச்சிட்டோம்னு திமிறா சொல்லலாம். அந்த வகையில பெரிய மகிழ்ச்சி கொடுத்திருக்கு இந்த விருது.”

‘ஜெயமோகன் என்ன சொன்னார்?’

“ஜெயமோகன் ரொம்ப சந்தோஷப்பட்டார். என்னைப் பாரட்ட மட்டுமல்ல விமர்சிக்கக்கூடியவரும் கூட அவர். ‘காரைக்குடியில உங்களை நாலு பேரு இந்த விருதுனால தெரிஞ்சுகிட்டாங்கன்னா அதுவே பெரிய விஷயம்தான்’னு சொன்னாரு.
பிறகு நாஞ்சில்நாடன் சார் கிட்டே பேசினேன். வாழ்த்துகள் சொன்னாரு. பாவண்ணன் சார், வாழ்த்தி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். எஸ்.ராமகிருஷ்ணன் சார் என்னோட பதிப்பாளர்கிட்டே வாழ்த்துகள் சொல்லியிருக்கார்.”

‘உங்களுடைய கதைக் களங்களுக்கான காரணம் என்ன..?’

“நான் இருக்கிறது காரைக்குடி. செட்டிநாட்டுக்கு மரபு இலக்கியத்துல ஒரு பெரிய இடம் இருக்கு. மரபிலக்கிய பதிப்பகங்களும் பெரிய அளவுல இருந்தது இங்கதான். அதுசார்ந்த புத்தகங்களும் இங்கே அதிகம். ஆனால் நவீன இலக்கியத்துல செட்டிநாட்டினுடைய தற்கால படைப்புகள் ரொம்ப கம்மியா இருக்கு. சுத்தமா இல்லைன்னு சொல்ல முடியாது. ரெண்டு மூணு எழுத்தாளர்கள் இருக்காங்க. யோசிச்சு பாக்கும்போது ‘புயலிலே ஒரு தோணி’யில புலம்பெயர் செட்டிநாட்டு நகரத்தார்களுடைய வாழ்க்கையை பதிவு செய்திருப்பார் ப.சிங்காரம்.

ஆனா என்னோட அம்புப் படுக்கை தொகுப்புல பாத்திங்கன்னா ஒரு பக்கம் வட்டார வழக்கை பதிவு பண்ணுற மாதிரியான கதைகள் இருக்கும். இன்னொரு பக்கம் காஃப்காதனமான, நிலமே இல்லாத நானே கட்டமைத்த புனைவுக் கதைகள் இருக்கும்.

என்னுடைய களம் அறம் மற்றும் தத்துவம் தான். இந்த அறம் மற்றும் தத்துவத்தைப் பேச சில இடங்களில் என் மண் சார்ந்த கதாபாத்திரங்களும், சில கதைகளில் கற்பனைக் கதாபாத்திரங்களும் தேவைப்படுது. அறம், தத்துவம் சார்ந்த கேள்விகளுக்கு என்னுடைய கதைகளைப் பயன்படுத்துறேன்.”

‘நீங்கள் மருத்துவர் என்பதும் கூட இந்த மாதிரியான களத்தை தேர்வு செய்ய காரணமாக இருக்கலாமா?’

“ஆமா நிறைய மனிதர்களைச் சந்திக்கிறேன். பெரும்பாலும் மருத்துவர்களை சந்திக்கிற மனிதர்கள், தங்களுடைய துயரத்தைட் சொல்லக் கூடிய ஆட்களாதான் இருப்பாங்க.
நான் ஓர் ஆயுர்வேத மருத்துவர். நவீன மருத்துவர்களைப் போல அவசர அவசரமாக வருகிறவர்களை சந்திச்சு அனுப்ப முடியாது. ஒரு நாளைக்கு மூணு பேர் வந்தாலும், அவங்க கிட்டே நீண்ட நேரம் பேசுவோம். அந்த மனிதர்கள் கிட்டே இருக்கிற சின்னச் சின்ன அறக் குழப்பங்கள், அன்றாட சந்திக்கிற அறச் சங்கடங்கள்... இப்படி நிறைய விஷயங்கள் நமக்கு தெரியவரும்.

இன்னொரு விஷயம், நான் ஆயுர்வேத மருத்துவர் என்பதால் மரபுக்கும் நவீனத்துக்கும் இடையேயான முரண்களைப் பற்றி யோசிக்க முடியுது. இதற்கான உறவு எப்படி இருக்கு? எதையாவது ஒன்ன அழிச்சுதான் ஒன்னு வாழ முடியும்? ஏன் ரெண்டும் ஒரே இடத்துல சந்திக்க முடியாதா? இப்படி நிறைய கேள்விகள் எழும். அதனுடைய வெளிப்பாடுதான் என்னோட கதைக் களங்கள்.”

- கவிமணிவாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)