பதிவு செய்த நாள்

23 ஜூன் 2018
19:20

 ருபத்திரெண்டு அடி நீளத்திலும், பதினைந்தரை அடி அகலத்திலும் வானம் தோண்டி ஓடகற்கள் நிரப்பி, அழகப்பன் வீடு எழுப்பப்பட்டு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகப்போகிறது. தற்போதைய கைப்பேசிகளின் அளவில் இருக்கும் செங்கற்களை நெருக்கமாக அடுக்கி வைத்து, சுண்ணாம்பில் கடுக்காய் பால், முட்டைகள் ஊற்றிக் கலந்த சாந்தில் சுவர்கள் பூசப்பட்டிருக்கும். இப்போது எந்த செங்கல் சூளையிலும் இந்த மாதிரியான  செங்கற்கள் சுடுவது கிடையாது. வாசலின் சாக்கடை மட்டத்தில் இருந்து கொஞ்சம் உயரமாக பரந்த கருங்கல் படிகள் ஆறு வைத்து, ஒரு புறம் பெரிய திண்ணையும், மறுபுறம் நீளவாக்கில் சின்னத் திண்ணையும் வைத்து மரத்தூண்களில் அண்டக் கொடுத்த ஓட்டுத் தாழ்வாரம் இருக்கும்.

முக்கோண வடிவ கண்களைப் போல இருபுறமும் எண்ணெய் வடியும் மாடாக்குழிகள் நம்மைப் பார்க்கும். உள்ளே போனால் கையகல பட்டாசாலையில் மூன்றடுக்கு அலமாரியும், தலைத் தூக்கி பார்த்தால் உத்திரத்தை தேக்கு மரக்கட்டைகள் வரிசையாக தாங்கிப் பிடித்திருக்கும். படிகள் இடிந்து பாசிகள் படர்ந்த மொட்டை மாடியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் சின்னச் சின்ன செடிகளின் கீழ் சாமி எறும்புகளும், அணில் குஞ்சுகளும் இளைப்பாறி கொண்டிருக்கும். நீளமான முற்றமும் அதற்கு பக்கத்திலேயே ஒரு அறையும், அதற்கு கொஞ்சம் தள்ளி சமையல் அறையும் கனகச்சிதமாக கட்டப்பட்டிருக்கும். பின்புறம் இரும்பு வளையங்கள் மாட்டிய காடியுடன் கூடிய மாட்டுக் கொட்டம் இருக்கும். வாசலின் பக்கத்திலேயே தென்னந்தட்டியைக் கதவாக வைத்திருக்கும் சந்து இருக்கிறது. இதன் வழியாகவும் வீட்டிற்குள் போய் விடலாம். வருடத்திற்கு ஒருமுறை வெள்ளைச் சுண்ணாம்பு அடித்து எப்போதும் சாணி மொழுகிய தரையோடு வாசமடிக்கும் அழகப்பனின் வீட்டிற்கு ஒரேயொரு மரக்கதவுதான். அதிலும் கொண்டி, பூட்டு என எதுவும் இருக்காது. இப்படியான நம்பிக்கையும், கலையும் கலந்த இந்த வீட்டைத்தான் அழகப்பனுக்கென்று ஆரம்பத்திலேயே ஒதுக்கி விட்டார்கள். உடன்பிறந்த மூன்று ஆண்கள், ஒரு பெண்ணில் அழகப்பன் தான் கடைசி பிள்ளை. 

அழகப்பன் பிறந்து வளர்ந்தது எல்லாம் இந்த பூர்வீக வீட்டில்தான். நல்ல தொரட்டி உயரம், கோபப்பட்டால் சிவக்கும் தோல், கருப்பு மினுங்கும் முடி, தடித்த மீசையும், வாங்கருவா கிருதாவும்,  சீவிய மரமாய் மேனிக்கட்டு எல்லாவற்றிற்கும் மேல் ஆளுக்கு சம்பந்தமில்லாத அமைதி பேச்சும், இரக்க குணமும், இளகிய மனமும் கொண்டு அவ்வளவு ஈர்ப்பாக இருப்பார். கூடப் பிறந்தவர்களில் எல்லோருக்கும் திருமணமாகி குழந்தை குட்டிகள் எடுத்து விட்டனர். தனது அண்ணன் காசி என்றால் அழகப்பனுக்கு உயிர். காசிக்கும் அப்படித்தான், 'அழகு...அழகு' என ஆளாய் பறப்பார். 'நாமதான் படிக்காம வம்பு வழக்குன்னு ஊர சுத்திட்டோம், முதல் தலைமுறையா தம்பியை எப்படியாவது படிக்க வைக்கனும்' என்று வைராக்கியமாக இருந்தார் காசி. தனது குடும்பத்தை நினைத்து அழகப்பனுக்கும் படிப்பதில் பயங்கர ஆர்வம். 

அப்பா சேர்த்து வைத்துவிட்டுப் போன காணியிலும், வெளியாட்களின் வயல்களிலும் உழவு மாடுகள் ஓட்டி சம்சாரி வேலைகள் எல்லாம் செய்து வயலிலேயே கிடந்து எப்படியோ அழகப்பனை மேலூர் விவசாயக் கல்லூரியில் சேர்த்து விட்டார். தம்பி தோரணையான உடைகள் அணிந்து  சைக்கிளிலும், பேருந்துகளிலும் கல்லூரிக்கு போய் வரும் அழகை எல்லோரும் பேசும் போது காசி பூரித்துப் போவார். படித்த கர்வத்தோடும், மண்டக் கனத்தோடும் இதுநாள் வரை அழகப்பன் யாரிடமும் நடந்து கொண்டது கிடையாது. படித்த தம்பியின் கண்டிப்புகளாலும், மீனாளுடன் திருமணமாகி அமுதா பிறந்தவுடனும் காசி எல்லா சண்டித்தனங்களையும் விட்டுவிட்டார். தம்பிக்கு விழுந்து விழுந்து செய்வதைப் பற்றி முன்னே விட்டு பின்னே பேசுபவர்களைக் காசி கண்டுகொள்ளவே மாட்டார். கூடப் பிறந்தவர்களையும் கூட. அப்படி யாரும் முன்னே வந்து பேசவும் மாட்டார்கள். ஏனென்றால் காசியின் சண்டித்தனங்கள் அடிக்கடி  கண்முன்னே வந்துபோகும். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் அவரது விருப்பத்தின் படியே வெள்ளையம்மாவை அழகப்பனுக்கு திருமணம் செய்து வைத்தனர். அழகப்பனையும், பிறந்த வீட்டையும் தவிர வெள்ளையம்மாவிற்கு எந்த விவரமும் தெரியாது. இருவருக்கான சொந்த வீடு, கொடைக்கானலில் வேலை, வார விடுமுறை, தேவையான வருமானம்  என்று அழகப்பனுக்கு குடும்ப வாழ்க்கை ஆரம்பமானது.

வருடங்கள் போன பிறகும் குழந்தை என்ற ஒன்று இல்லாமல் இருந்தது மட்டும் அழகப்பனுக்கும் வெள்ளையம்மாவுக்கும் எல்லா சிரிப்புகளின் இறுதியிலும், கொண்டாட்ட  நாட்களின் நடுவிலும் ஒரு ஆழ்ந்த சோகமாகவே இருந்து வந்தது. ஆரம்பத்தில் இது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால், நாட்கள் நகர இதுமட்டும்தான் பெரிய உறுத்தலாக ஆகிப்போனது. குடும்பத்தினரின், ஊராரின் பேச்சுகளைப் புறக்கணித்து புத்தகங்களைப் புரட்டினாலும், வேலைக்குச் சென்றாலும், தூங்கும் போது அவைகள் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து கொண்டு உறங்க விடாமல் மூச்சை அமுக்கத் தொடங்கின. அழகப்பனும் வெள்ளையம்மாவும் விரிசல் இல்லாமல் வாழ்ந்தாலும் இருவருக்குள்ளும் இருந்த சோகத்தை காசி மட்டும்  நன்றாகவே அறியத் தொடங்கினார். அவ்வப்போது விடுமுறை எடுத்து வந்த அழகப்பன் ஒருநாள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஊரிலேயே மாடு கன்றுகளைப் பார்க்கப் போவதாக முடிவெடுத்து விட்டார். 'படிச்ச வேலையப் பார்க்காம இங்க வந்து என்ன பண்ண போறேன்னு'  எல்லோரும் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க, காசியும் வெள்ளையம்மாவும் மட்டும் எதுவுமே பேசாமல் அழகப்பன் தோதுக்கே விட்டனர்.

தம்பிக்கு திருமணம் முடிந்தவுடன் இரண்டு, மூன்று வீடுகள் தள்ளி குடியேறியிருந்தார் காசி. பால்வாடி முடித்து ஆரம்ப பள்ளிக்குப் போய் கொண்டிருந்தாள் அமுதா. அழகப்பன் அமுதாவை 'அமுதலக்கு' என்றுதான் செல்லமாக கூப்பிடுவார். அமுதாவிற்கு விளையாடுவது, சாப்பிடுவது, தூங்குவது எல்லாமே சித்தப்பா அழகப்பன் வீட்டில்தான். காசியும் மீனாளும் கூப்பிட்டால் கூட வீட்டிற்கு வரமாட்டாள். அழகப்பனும், வெள்ளையம்மாளும் அமுதாவை தங்கள் பிள்ளையாகவே வைத்து கவனித்துக் கொண்டனர். 'ஏய், அமுதலக்கு அப்பா கூட விளையாட வா...' என்று அழகப்பன் வாசலில் நின்று ஒரு குழந்தையைப் போல கூப்பிடும் போது, காசியும் மீனாளும் கண்ணீரை அடக்கிக் கொள்வார்கள். தெருவில் குழந்தைகள் ஒருபுறம் விளையாடும் போது, இவர்கள் இருவரும் ஒருபுறம் விளையாடி சிரித்துக் கொண்டிருப்பார்கள். கோவில்கள், திருவிழாக்கள், வயல்கள், கண்மாய், கடை வீதிகள்  என்று தனது சித்தப்பாவோடு அலைந்து திரிவதுதான் அமுதாவிற்கும் பிடிக்கும். 'இனிமேல் பள்ளிக்கூடம் போகமாட்டேன், அழகு சித்தப்பா கூடத்தான் இருப்பேன்' என்று  சொன்ன அமுதாவை காசியும், மீனாளும் அடித்துப் பார்த்தும், அதட்டிப் பார்த்தும் அவள் கேட்பதாகவே இல்லை. 'பள்ளிக்கூடம் போனாதான், சித்தப்பா மாதிரி படிக்க முடியும் அமுதலக்கு' என்று அழகப்பனும் எவ்வளவோ கொஞ்சி பேசியும் பயனில்லை. பள்ளிக்கு இன்றைக்கு போவாள், நாளைக்கு போவாள் என்று பார்த்தால், அவள் போகவே இல்லை. காசி திட்டும் போதெல்லம் அழகப்பன் வீட்டில் போய் ஒளிந்து கொள்வாள்.

அப்படி ஒருநாள் ஒளிந்து கொண்டு அழுதவளைத் தூக்கிக் கொண்டு சோழவந்தான் சந்தைக்குப் போய் வரும் போது அவள் கை காட்டிய சாம்பல் நிற ஜோடிப் புறாக்குஞ்சுகளை வாங்கி வந்தார். நார் பெட்டியில் வைத்து வளர்த்த புறாக்களுக்கு, அப்பனும் மகளுமாக இரையும் நீரும் வைத்தனர். கொஞ்சம் பறக்க ஆரம்பித்த புறாக்கள், பெட்டியில் அடையாமல் சுவர் பொந்துகளிலும், மொட்டை மாடிகளிலும் அடையத் தொடங்கின. அப்போதெல்லாம் அமுதா அதைப் பார்த்து சத்தம் போட்டு சிரிப்பாள். அவள் சிரிப்பதைப் பார்த்துக் கொண்டே சாப்பிடாமலே கூட தூங்கி விடுவார் அழகப்பன். ஒருநாள் காலையில் புறாக்கள் தனது புதுறெக்கைகளைப் படபடத்து அடித்து பறந்து போனதை கழுத்தைக் கீழே இறக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். சாயந்தரம் ஆகியும் அவைகள் வரவில்லை. அந்தப் புறாக்களுக்கு பெயரும் வைக்கவில்லை. போனப் புறாக்களை நினைத்து அமுதா சாப்பிடவே இல்லை. போனப் புறாக்கள் இரண்டு நாட்கள் கழித்து ஒரு ஜோடி புதுப் புறாக்களைக் கூட்டி வந்திருந்தன. இதைப் பார்த்து விட்டு அமுதாவிற்கு மேல் அழகப்பனுக்குத்தான் சந்தோசம் தாங்க முடியவில்லை. வானில் இருந்து நிலத்தைப் பார்க்கையில் என்னையும் என் மகள் அமுதலக்கையும் மட்டுமே நம்பி, அந்தப் பறவைகள் நம்மிடம் வந்திருக்கிறதே என்று நினைத்து நினைத்து மகளைக் கொஞ்சினார்.

உடனே வீட்டில் இருந்த தேவையற்றப் பொருட்களையெல்லாம் அள்ளி சாக்கில் போட்டுக் கட்டி சேந்தியில் ஏற்றினார். மறுநாள் ஊரில் இருந்த ஆசாரியை கூப்பிட்டு வீட்டை அளக்கச் சொன்னார். வெள்ளையம்மாவுக்கு   எதுவும் விளங்கவில்லை. கையில் இருந்த காசு எல்லாவற்றையும் சேர்த்து, மரப் பலகைகள், ரீப்பர்கள், சதுரக் கம்பி வலைகள், வட்டக் கம்பி வலைகள், ஆணிகள் என்று புறாக் கூண்டுகளுக்கான எல்லா சமாச்சாரங்களையும் வாங்கி வரச் சொன்னார். தம்பிக்கு குழந்தை இல்லாத மனவருத்தங்கள் தனது மகளின் மூலமும் இவைகள் மூலமும் மறக்கடிக்கப்படுவதை நினைத்து எதுவும் சொல்லாமல் தூரத்தில் இருந்தே கவனித்துக் கொண்டு வந்தார் காசி. ஒரு வாரத்தில் வீடே புறாக்கூண்டு அறைகளாக இருந்தன. ஒரு மாளிகையைப் போல பார்த்துப் பார்த்துக் கட்டச் சொன்னார் அழகப்பன். வெளியில் இருந்து பார்க்கையில், புதிதாக திறக்கப்படவுள்ள புறாப் பண்ணைப் போல வீடு காட்சியளித்தது. புறாக்களின் உடல் சிரமப்படாத அளவிற்குண்டான அறைகள், படுக்க வைக்கோல் அல்லது தேங்காய்நார் மஞ்சி, புறாக்குஞ்சுகளுக்கு ஏற்ற சிறிய அறைகள் மற்றும் தரையில் நின்றே குடிக்க, குளிக்க ஏதுவான புது நீர்தொட்டி என புறாக்களை வளர்ப்பதற்கு முன்பே அவற்றை எப்படி வளர்க்க வேண்டுமென தனது நண்பர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டு தனது கல்லூரி கால கையேடுகளில் குறிப்பெடுத்துக் கொண்டார்.

கொஞ்ச நாட்கள் குறிப்புகள் எல்லாவற்றையும் ஒரு கதைப் போல அமுதாவின் மடியில் தலை வைத்து சொல்லிக் கொண்டே இருப்பார். அமுதாவும் நொறுக்குத் தீனிகளை மறந்து, தேடி வந்த புறாக்களின் பரவசங்களோடு  பாடமாக எல்லாவற்றையும் மனதில் ஏற்றிக் கொள்ளத் தொடங்கினாள். அவள் பள்ளிக்கூடம் போகாவிட்டாலும் ஓரளவாவது  படிக்கவும், எழுதவும் தெரிய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அழகப்பன். அவள் வழியிலேயே போய் 'இதையெல்லாம் எழுதிப்பார், சொல்லிப்பார்' என்று கூடவே இருந்து புறா படிப்பைக் கற்றுக் கொடுத்தார். அவளும் புறாக்களை மனதில் வைத்துக் கொண்டே கொஞ்சம் எழுதவும், படிக்கவும் தொடங்கினாள். உள்ளூரிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் வாங்கி வந்த சாதாரண ரகப் புறாக்கள், நாட்டுப் புறாக்கள், தவிடால், மரசல், படங்கு, கன்னியாஸ்திரி, ரோமர், அவுல், லக்கா, கிங், பட்டண தவுடால், கர்ணம், காட்டுப் புறா என பல ரகங்களில் சுத்தக் கறுப்பு, சாம்பல், வெள்ளை, மர வண்ணம், வெள்ளையில் கருப்பு தெளித்தது போல, கழுத்தில் மட்டும் நீலம் மின்னும் வண்ணங்களில் விதவிதமான புறாக்கள் வீட்டை நிரப்பத் தொடங்கின.

தனக்கு ஆண் பிள்ளைப் பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம், பெண் பிள்ளைப் பிறந்தால் என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து வைத்த எல்லா பெயர்களையும் ஒவ்வொரு புறாக்களுக்கும் சூட்டி கால்களில் சின்ன வளையங்களை மாட்டி விட்டார் அழகப்பன்.

அமுதாவும் அவள் பங்கிற்கு தனக்குத் தெரிந்தப் பெயர்களை சூட்டினாள். குழப்பத்தில் வைத்தப் பெயரையே திரும்பவும் வைத்தாள். யோசனை வருகையில் ஒவ்வொரு பெயராக வைப்பாள். வெள்ளையம்மாள் அவளுக்குப் பிடித்தப் பெயரை வைத்துக் கூப்பிடும் போது மட்டும் அழகப்பன் அந்தப் புறாக்களைச் செல்லமாகத் தூக்கிக் கொஞ்சுவார். புறாக்களைப் போட்டிக்கும் அனுப்பக் கூடாது, கறிக்கும் விற்கவே கூடாதென்று அழகப்பன் முடிவு செய்தார். சீக்கு வந்து செத்தாலும் இங்கேயே சாகட்டும் என்று விடாப்பிடியாக இருந்தார். சோடாவில் புறாக்குஞ்சின் ரத்தத்தை விட்டுக் குடித்தால் மூச்சுப் பிரச்சனை சரியாகும் என்று வீட்டிற்கு வருபவர்களை அமுதாவை விட்டு போகச் சொல்லி விடுவார். காலையில் எழுந்து மூக்கில் துணியைக் கட்டிக் கொண்டு பீக்களைப் பெருக்கி குவித்து, தொட்டியில் தண்ணீர் மாற்ற வேண்டும். கூண்டுகளை ஒழுங்குப்படுத்தி விட்டு வந்தால் கம்பு, பொரிகடலைக்கு அடித்துக் கொண்டு புறாக்கள் பறந்து வரும். இரைகளை வீசி விட்டு, குஞ்சுகளுக்கு பொறுமையாகத்தான்  இரையை ஊட்ட வேண்டும். நீரில் ஊர வைத்த சுண்டல்களை வாயில் போட்டு நன்றாக எச்சிலில் மென்று புறாக்குஞ்சின் வாயோடு வாய் வைத்து பக்குவமாக ஊட்டி, நாக்கின் நுனியில் நீர் எடுத்து வாயில் ஊற்ற வேண்டும். இவை யாவற்றிலும் அழகப்பனுக்கு உறுதுணையாக இருப்பது அமுதாதான்.

இரைகளைக் கையில் வைத்துக் கொண்டு பேர் சொல்லியும், விசில் அடித்தும் கூப்பிடுகையில் புறாக்கள் அப்பனையும், மகளையும் மொய்த்து விடும். முன்னமே வயிறு நிறைய சாப்பிட்டிருந்தாலும், இவர்கள் மேல் நின்று விளையாடுவதுதான்  அவைகளுக்குப் பிடிக்கும். வளையங்கள் மாட்டிய ரோஸ் நிற பிஞ்சு கால்களின் நகங்கள் உடல்களில் பதிந்திடும் போதும், றெக்கைகளின் வெக்கை விசிறி காற்றுக்கும் அப்படியே உட்கார்ந்து விடுவார்கள். நீருக்கடியில் இருக்கும் கால்களை மீன்கள் கடிப்பது போல, புறாக்கள் இவர்களின் கைகளில் இரைகளைக் கொத்தி கூசிட வைக்கும். அப்படியே வட்டமடித்து ரேவலுக்குப் போன புறாக்கள் வீடு திரும்புவதற்குள் அடிபட்ட புறாக்கள், சாகக் கிடக்கும் புறாக்களுக்கு வைத்தியம் பார்த்துவிட்டு முட்டைகள், பீக்கள் வாசனைக்கு பாம்புகள், பூச்சிகள், பூனைகள் வராத வகையில் ஊதுவர்த்திகள், கம்ப்யூட்டர் சாம்பிராணிகள் கொளுத்தி கண்ணுங்கருத்துமாக காத்துக் கிடப்பார்கள்.

இப்போதெல்லாம் குழந்தை இல்லாத பேச்சுகளோடு, புறாக்களைப் பற்றிய பேச்சுகளும் சேர்ந்து விட்டன. தொண்டைகளை உருட்டி புறாக்கள் இரவுகளிலும், அடைகளிலும் கத்தும் சத்தங்களுக்குத்  தெருவே குற்றம் சொல்லும். 'புறா அனத்தல்' வீட்டுக்கு ஆகாது என்று புலம்புவார்கள். வீட்டில் கூண்டுகளில் இடம் இல்லாமல், புதிதாக வரும் புறாக்கள் சுவர்களின் பொந்துகளிலும், புழங்கும் இடங்களிலும் தங்கத் தொடங்கின. கோவில் புறாக்களும் அதிகமாக தஞ்சம் அடைந்து விட்டன. வீடே புறாக்களின் வாசனை நெடியில் கிறங்கியது. வீட்டிற்கு வருபவர்கள் வாசலில் நின்று பேசிவிட்டே கிளம்பி விடுவார்கள். நன்றாக வளர்க்கும் நண்பர்களிடம் மட்டுமே புறாக்களைக் கொடுத்து வளர்க்கச் சொல்லி புறாக்களைக் குறைப்பார். மற்றபடி அவற்றை சாப்பிட கூட செய்ய மாட்டார். தெருவில் நுழைந்தாலே அழகப்பன் வீட்டு சுவர்களுக்கு பதில் புறாக்கள்தான் தெரியும். அவ்வப்போது உடல்நலம் சரி இல்லாத போது அமுதாதான் புறாக்களைக் கவனித்துக் கொள்வாள். நாளடைவில் நண்பர்களைச் சந்திப்பதைக் குறைத்துக் கொண்டு அமுதாவிடமும் புறக்களிடமும் மட்டுமே அழகப்பன் பேசிக் கொண்டே இருப்பார். அமுதாவும் அப்படித்தான். இவர்களின் பேச்சுகளை புறாக்கள் ஏதோ புரிந்து கொண்டது போல தலைகளை அசைத்து, ஒற்றைக் காலைத் தூக்கி வைத்து மெதுவாக எட்டு வைத்து கேட்கும்.

மதிய வேளையில் காசியையும், மீனாளையும், வெள்ளையம்மாளையும் கூப்பிட்டார் அழகப்பன். மடியில் அமுதா தூங்கிக் கொண்டிருந்தாள்.

'கொஞ்ச நாளாவே என் மனசுல இது ஓடிட்டுதான் இருக்கு. எனக்கும் வாரிசு இல்லாம போச்சுண்ணே, உனக்கும் ஆம்பள புள்ள இல்லாம போச்சு, அஞ்சு வயசு வரைக்கும் அண்ணன் தம்பி, பத்து வயசுக்கு மேல அங்காளி பங்காளி. நம்ம கூடப் பொறந்தவிய்ங்க சரி இல்லண்ணே. சந்ததி இல்லாம போச்சுன்னு தெரிஞ்ச உடனே, அவிய்ங்களுக்கு இந்த வீட்டு மேலதான் கண்ணு. அமுதலக்குத்தான் என்னோட வாரிசு.

அவளுக்குத்தான் இந்த வீட்டையும், புறாக்களையும் தரப் போறேன். கடைசியில அவதான் எனக்கு எல்லாம் செய்யணும். இந்த வீட்ட அவளுக்கு பத்திரம் போற்றுவோம்ண்ணே. நாளபின்ன அவிய்ங்க உனக்கு கொடச்சல் கொடுத்தா என்னண்ணே பண்ணுவ, அப்போ இந்த வீடு உனக்கும் புள்ளைக்கும் உதவும்லண்ணே.  நானும் வெள்ளையம்மாவும் சேர்ந்து எடுத்த முடிவுதாண்ணே' என்று அழகப்பன் ஒருமாதிரி சொல்லும் போதே

'என்ன பெத்த அப்பா...' என்று தம்பியைக் கட்டி அணைத்துக் கொண்டார் காசி. அமுதா தூக்கத்தில் இருந்து எழுந்தாள்.

'இப்ப எதுக்குடா இந்த மாதிரிலாம் பேசுற, இது உன் வீடு டா, நம்ம ஆத்தா அப்பன் வாழ்ந்துட்டு உனக்குக் கொடுத்துடுப் போன வீடு டா. பத்திரமாவது மயிராவது. நீ யாருக்கு என்ன கெடுதல் நெனச்ச, நல்லா இருப்படா. அமுதா  உனக்கும் புள்ளதான்டா. யாரு என்ன பண்ண போறா' என்று தம்பியைத் தேற்றினார்.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இப்போதெல்லாம் காலையில் அழகப்பன் சீக்கிரம் எழுந்திருப்பதே கிடையாது. எப்போதும் ஒரே யோசனைதான். உடலிலும், புறாக்களிலும் கவனம் செலுத்துவது இல்லை. சர்க்கரைக்கு மருந்தும் சரியாக எடுப்பதில்லை. ஒருவேளைதான் சாப்பிடவும் செய்கிறார். அமுதாவிடமும், மனைவியிடமும் சரியாகப் பேசுவதும் கூட கிடையாது. 'சித்தப்பா, ஏன் உம்முன்னே இருக்க...' என்று அமுதா கேட்டுக் கொண்டே இருந்தாள். 'ஒன்னுமில்ல அமுதலக்கு அப்பாவுக்கு  உடம்பு சரியில்லடா' என்று சொன்னார். அமுதாவிற்கும் ஓரளவு நல்ல விவரம் தெரிய ஆரம்பித்து விட்டது. ஒருவழியாக சித்தப்பாவை விடாப்பிடியாக மருத்துவமனைக்கு கூடிச் சென்று வந்தாள். வரும் வழியில் தேன்மிட்டாய் வாங்கிக் கொடுத்தார். வீட்டிற்கு வந்தவுடன் படுத்துக் கொண்டே அமுதா புறாக்களோடு புழங்குவதைப் பார்த்தும், அவைகள் அமுதாவிடம் விளையாடுவதைப் பார்த்தும் சிரித்துக் கொண்டே இருந்தார். அமுதா திரும்பிப் பார்க்கும் போது கண்களை மூடிக் கொண்டார். இப்படியே விளையாடிக் கொண்டிருந்தார்கள். புதிதாகப் பிறந்த குஞ்சை எடுத்து வந்து சித்தப்பாவிடம் தந்தாள் அமுதா. நன்றாக ஊற வைத்த சுண்டல்களை வாயில் போட்டு மென்று கரைத்து, அமுதாவிற்கு கொஞ்சம் குஞ்சிற்கு கொஞ்சமாக ஊட்டி விட்டுக் கொண்டே இருந்தார்.

அமுதாவின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு, குஞ்சை நெஞ்சில் வைத்து அதனிடம், புறாக்களுக்கு வைத்த குழந்தைகளின் எல்லா பெயர்களையும் வரிசையாக சொல்லிக் கொண்டே இருந்தார். இந்த குஞ்சுக்குப் பெயர்  'அமுதலக்கு' என்று மூன்று முறை சொல்லி விட்டு ஊட்ட வைத்திருந்த இரையை தொண்டைக் குழியில் அடக்கி வைத்துக் கொண்டு, அமுதாவின் மடியில் கடினப்பட்டு உயிரை உதறி வெளியேற்றினார் அழகப்பன். கையில் இருந்த தேன்மிட்டாயைத் தின்பதற்குள் சித்தப்பா செத்துப் போனதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கொஞ்ச நேரத்தில் விக்கித்துக் கதறத் தொடங்கினாள் அமுதா. ஓடி வந்த வெள்ளையம்மாவும், காசியும், மீனாளும் 'எய்யா அழகு, படிச்ச சீமானே... யப்பா எத நெனச்சு மாண்டு போனீயோ...' என்று தலையிலும், மாரிலும் அடித்துக் கொண்டு அழுத அழுகைக்குத் தெருச்சனமே கூடி விட்டது. புறாக்கள் என்னதென்று தெரியாமல் இரைகளைக் கொத்தாமல் கழுத்தைத் திருப்பிப் திருப்பி பார்த்து அழகப்பன் மேனியில் அமரத் தொடங்கின. நண்பர்கள், சொந்தங்கள், உடன்பிறப்புகள் எல்லாம் கூடினர். விரட்டிப் பார்த்தும் புறாக்கள் பித்துப் பிடித்தது போல அழகப்பன் மேலேயே  வந்து உட்கார்ந்துக் கொண்டே இருந்தன. ரேவலுக்குப் போன புறாக்கள் அனைத்தும் அன்று சீக்கிரமாகவே வந்திருந்தன. தொலைந்துப் போன புறாக்களும் கூட வந்திருந்தன. எல்லாமும் அளவுக்கதிகமாக அனத்தின. உச்சபட்ச அழுகைகளால் அந்த அனத்தல்களில் ஈரம் கசிந்தன.

கையில் மிட்டாயுடன் அழுது மயங்கிய அமுதாவை திண்ணையில் படுக்கப் போட்டிருந்தனர். வெள்ளையம்மாவைப் பெண்கள் தாங்கிப் பிடித்திருந்தனர். தொப்புள்கொடி உறவு பொசுங்கியதில் பேச்சற்று சரிந்து போன காசி புறாக்களையும் மகளையும் கண்ணீர் விழியோடு பார்த்துக் கொண்டிருந்தார். இழவு வீட்டிலேயே வீட்டை கூறுபோட்டு விற்றுத் தின்னும் பேச்சுகள்  தட்டுப்பட்டவுடன், உடன்பிறந்தவர்களுடன் ஒற்றை ஆளாக மல்லுக்கு நின்று  விரட்டினார். சகோதரச் சண்டைகளின் நடுவே எல்லா ஈமச் சடங்குகளும் முடிந்து அழகப்பனை தீயிடம் கொடுக்க சுடுகாட்டுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது மாலையிலும் நல்ல நிழல் தெரியும் வெயில் இருந்தது. பெரிய தார்ப்பாயினைப் போர்த்தியது போன்ற நிழல், ஊர்வலம் மேல் விழுந்தது. மேலே பார்த்தால் அழகப்பனின் புறாக்கள் மற்ற புறாக்களையும் கூட்டி வந்து பெரும் ஊர்வலமாக வந்தன. இருக்கும் போது வாய் பேசிய சனங்கள், அந்தப் பறவைகளின் சின்ன உடல்கள் சேர்ந்த நிழல்களில் புல்லரித்துப் போய் நடந்தனர். வெடித்த வெடிக்கு களைந்து மீண்டும் சேர்ந்து றெக்கைகளை அகல விரித்து மெதுவாக பறந்தன புறாக்கள்.

மழைகளிலும், புயல்களிலும், வெயில்களிலும், வழக்குகளிலும்,  பஞ்சாயத்துகளிலும்  சிதைந்த செங்குழவிக் கூடாக, பளபளப்பான பல்வரிசையின் நடுவே பூச்சி அரித்தப் பல்லாக ஆடும் அழகப்பனின் வீடு வெறும் நான்கு கருங்கல் குத்துகற்களோடும், கற்றாழைகளோடும், தீ வைக்கப்பட்ட கூண்டுகளோடும் இன்று கிடக்கிறது. அமுதலக்கு பேரன் பேத்தி எடுத்துவிட்டாள். செங்கற்களும், சுவர்களும் மக்கிய வீட்டில் நல்ல நாட்களுக்கு சூடம் ஏற்றி வணங்குவாள். குன்றாத பங்காளி பகைகளின் நடுவே, சித்தப்பாவின் வீட்டிற்கு வரும் எல்லா புறாக்களுக்கும் மிகத் தாட்டியமாக 'அழகு சித்தப்பா' என்றே சத்தம் போட்டு பெயர் வைத்து இரை ஊட்டுகிறாள் அமுதலக்கு. 

- முத்துராசா குமார் 

புகைப்படம்: பிரசாந்த் சுவாமிநாதன் 
வடிவமைப்பு : தியாகராஜன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)