பதிவு செய்த நாள்

24 ஜூன் 2018
13:53

 வியரங்கில் அவருக்கு முன்பாகக் கவிதை வாசித்தவர்களுக்கு யாரும் கைதட்டவில்லை. கடைசியாக அவர் கவிதை வாசித்தபோது கைதட்டல்கள் அடங்க நேரமானது. அப்போது சொன்னார், 'யார் வாசித்தபோது கூச்சலிட்டீர்களோ, அவர் எழுதிய கவிதைதான் நான் வாசித்தது. புகழ்பெற்றவன் என்பதற்காகக் கைதட்டுவது மரபல்ல. திறமையை ரசிக்காமல், ஒருவரது புகழைப் பார்ப்பது நல்ல பண்பாகாது', என்று வெளிப்படையாகச் சொன்னார். அவர்தான் பாமர மனிதனுக்கும் புரியும் வகையில் தத்துவம் சொன்ன கவிஞர் கண்ணதாசன்.

இவரது இயற்பெயர் முத்தையா. சிறு வயதிலேயே வேறு ஒரு குடும்பத்துக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். 8ஆம் வகுப்பு வரைதான் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போதே, 'கடைக்குப் போனேன், காலணா கொடுத்தேன், கருப்பட்டி வாங்கினேன்' என சின்னச் சின்ன விஷயங்களை கவிதையாக எழுதத் தொடங்கினார். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் பத்திரிகைகளில் எழுத வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. அதற்காகவே 16 வயதில் சென்னைக்கு வந்து வாய்ப்புகள் தேடி அலைந்தார்.
ஒரு நிறுவனத்தில் உதவியாளர் வேலை கிடைத்தது. அங்கிருந்து கொண்டே கதைகள் எழுதத் தொடங்கினார். 'கிரகலட்சுமி' என்ற பத்திரிகையில் முதல் கதை வெளிவந்தது. ஒரு நண்பரின் உதவியோடு, திருமகள் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தார். சண்டமாருதம், திரை ஒலி, தென்றல் உள்ளிட்ட பத்திரிகைகளில் ஆசிரியராகவும் இருந்தார். மகாகவி பாரதியைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். 'கண்ணதாசன்' என்ற பெயரில் கதை, கட்டுரை, கவிதைகள் எழுத ஆரம்பித்தார். அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவராத பத்திரிகைகளே இல்லை எனலாம். இலக்கிய உலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்து, அதிலும் முத்திரை பதித்தார். சமூக, அரசியல் விழிப்புணர்வும் அரசியல் ஆர்வமும் இருந்ததால், அரசியலில் சேர்ந்து ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றார்.

கவிதைகள், பாடல்கள், நாடகம், மொழிபெயர்ப்புகள், நாவல்கள், உரைநூல், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைகள் என காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்தார். 'சேரமான் காதலி' நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ளார்.

'யாருக்காகவும் உன்னை மாற்றிக்கொள்ளாதே; ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதனுக்கும் நீ மாற வேண்டியிருக்கும்' என்று சொன்ன கவிஞரின் வரிகள், எல்லோருக்கும் எல்லா காலத்துக்கும் பொருந்தும்.

நன்றி : பட்டம்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)