மாறிக்கொண்டேயிருப்பது காலத்தின் மிக முக்கிய தன்மை. சில மாற்றங்கள் பதியப்பட வேண்டியது அவசியமுமாகும். இந்த குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய அவசியம் மனுஷ்யபுத்திரனின் ’இடமும் இருப்பும்’ என்னும் கவிதை தொகுப்பிற்கு உண்டென கருதுகிறேன்.
ஒரு சில தொகுப்புகளுக்கு பின் எழுதுதலின் போக்கு மடைமாற்றம் பெறும். அத்தகைய தொகுப்புகள் மிக அரிதாகவே காணக்கிடைக்கும். ’இடமும் இருப்பும்’ வெளியான காலகட்டத்தில் இத்தகைய தாகத்தினை ஏற்படுத்திய முக்கிய தொகுப்பாகும். இன்று எழுதிக்கொண்டிருக்கும், எழுத முற்படும் எவருக்கும் இதன் தாக்கம் இல்லாமல் போகாது. மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் வெளியான காலகட்டத்தில் மிகவும் வரவேற்கப்பட்டதும் கவிதைகளின் மற்றொரு திறப்பாக இவை இருந்ததும் மறுக்க முடியாதது. என்றைக்கும் நினைவு கூறதக்க ஒரு கவிதை:
அழுகை வராமலில்லை
ஒரு வைராக்கியம்
உங்கள் முன்னால்
அழக்கூடாது.
கடினமற்ற சொற்கள் ஆனால் எளிதில் சுயநினைவுக்கு திரும்பவியலாத அதிர்ச்சி மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை இவ்வாறு வகைப்படுத்தலாம்.
இதைபோல் மற்றொரு கவிதை, தலைப்பு.‘ என் கல்லறை வாசகம்’
இங்கே
யாருமில்லை
நீங்கள் போகலாம்
கவிதைதான் தனிமையை உருவாக்குகிறது என்று படைப்பின் அனுபவத்தை தெரிவிக்கிறார். ஒரு தமிழ்க் கவிஞனின் தோல்விகள் இவை என தனது முன்னுரையில் மிக துணிச்சலாக 90களின் பிற்பகுதியில் எழுதியவர்.
ஒரு பெயர் வெறும் ஒரு பெயராக இல்லாது அவை ஏற்படுத்தும் அதிர்வுகளை ‘சாரதா’ என்னும் கவிதையில் அறியலாம். மேலும் ‘இறந்தவனின் ஆடைகள்’, ‘தாமதம்’ போன்ற கவிதைகளும் ஆழத்தின் ஆபத்து மிகுந்த அமைதியை போல் வாசகர்களிடம் தனிமையின் பீதியை உணர்த்த்தக்கவையாக உள்ளன.
சொல்லுதலின் இன்பத்திலும் சொல்ல இயலாமையின் துக்கத்திலும் நீந்திக்கொண்டே இருக்கின்றன சொற்கள். இக்கவிதைகளில் காணப்படும் மயக்கத்தன்மை வேறெவரும் எழுத்தில் தொடாத பகுதியாகும். நவீன மனத்தின் கடும் தனிமையை இதில் நுகரலாம்.
- தியாகு